அன்புடன் ஒரு நிமிடம் 12.
அந்த லென்ஸின் பெயர்....
ஒரு மாதிரி பார்த்தான் அபிஜித்.
“என்னடா, இது எப்ப
இருந்து?”
கேட்டார் தாத்தா.
“இப்பதான் தாத்தா மாட்டிட்டு வர்றேன்.”
“ஷார்டா லாங்கா?”
“ஷார்ட் சைட் தான்,”
என்றவன் மோட்டு வளையில் எதையோ தேடுவதைப் பார்த்துவிட்டார்.
“என்னடா யோசனை?”
“அதில்லே தாத்தா,
தூரத்தில தொங்கவிட்டிருந்த போர்டிலிருக்கிற எழுத்துக்களை படிக்கச் சொன்னார்
டாக்டர். நாலாம் வரி வரும்போது ஒண்ணும் புரியலே. அங்கே நாலஞ்சு எழுத்து இருக்கிறது
தெரியுது. அதுக்கு மேல ஒண்ணுமே தெரியலே. ஆனா பார் தாத்தா, டாக்டர் ஒரு சாதாரண கண்ணாடி லென்ஸை என்
கண்ணிலிருக்கிற கண்ணாடி பிரேமில் போட்டதும் எல்லாம் பளிச் பளிச்னு தெரியுது.
அதெப்படி தாத்தா? பிரமிப்பா
இருக்குது. பார்த்தா ஒரு சாதாரண கண்ணாடிச்
சில்லு. அதுக்கு என்ன ஒரு எஃபக்ட்!”
சாத்வீகன் பதில் சொல்ல ஆரம்பித்தபோது கதவருகில்
நிழலாடிற்று. கோவிந்தசாமி. பக்கத்து வீட்டுக்காரர்.
குசலம் விசாரிக்க நேரமில்லை. அவர் பிரசினையில் இருந்தார்.
நேரடியாக விஷயத்துக்கு வந்தார் வந்தவர். “... இப்படி ஒரு நெருக்கடி வரும்னு நான்
நினைக்கவே இல்லை சார். இப்ப எனக்கு ஒரு
பெருந்தொகை வேணும் சமாளிக்க. வேறே எங்கே புரட்டறதானாலும் சிரமம். அதான் என் நண்பர்
வேதாசாலத்திடமே கேட்டுடலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க?”
தாத்தா தன் மோவாயைத் தடவியபடியே பதிலளித்தார். “அதான்
போனிலேயே எல்லாம் டீடெய்லா சொல்லிட்டியே... நிலைமை எனக்கு நல்லாவே விளங்குது.
வேதாசாலம் பத்தியும் நிறையவே சொல்லியிருக்கே.”
“ஆமா. இப்ப உங்க அட்வைஸ் என்ன? வேதாசலம்கிட்டே கேட்டிடலாம் இல்லையா?”
“நெவர்!”
“என்ன அப்படி சொல்றீங்க?
அவர்தானே என்னுடைய ஒரே நெருங்கிய நண்பர்?”
”அதனால்தான் சொல்றேன். இந்த வேதாசலம் உனக்கு வெறும் நண்பர்
மட்டுமல்ல. உன்னுடைய எல்லா பிரசினையிலும் துணை நிற்கிறவர். உன் பிள்ளைகள் படிப்பு
விஷயத்தில் அவர் நிறைய கைடன்ஸும்,
டியூஷனும் கொடுத்திட்டு இருக்கார். உன் பெரிய பெண் கல்யாண விஷயத்தில் வரனுக்காக
உன்னோடு அலைஞ்சிட்டிருக்கிறார். இப்ப நீ கேட்டதும் பணம் கொடுத்துருவார். நாளைக்கு
ஏதாவது ஒரு காரணத்தால் அதை சரியா திருப்பிக் கொடுக்க முடியாமல் போனால், அதில் உங்களுக்குள் ஏதாவது மனஸ்தாபம் வந்து
சேர்ந்தால், உன் குடும்பத்துக்கு
கிடைத்து வருகிற, கிடைக்க
வேண்டிய பல விஷயங்கள் அறுந்து போகும். பின்னால் உங்களுக்குள் எல்லாம் சரியாகி
விடலாம் என்றாலும் கூட அது ஒரு தவிர்க்கப்பட வேண்டிய நஷ்டம் அல்லவா?”
“இதை நான் யோசிக்கலே. நீங்க சொல்றது முக்கியம்தான். ஆனா
வேறே எங்கேயாவது புரட்டறது..”
“சிரமம்னு சொன்னே. ஆனா முடியாதுன்னு சொல்லலியே?”
‘யெஸ். சிரமப்பட்டு அதை செய்துட வேண்டியதுதான்.!” திருப்தியும்
நன்றியும் கண்ணில் தெரிய அகன்றார்.
நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த அபிஜித் கேட்டான்.
“எப்படி தாத்தா பளிச்னு அவருக்கு விடை சொல்லிட்டீங்க?”
சாத்வீகன் கண்ணடித்தார். “அதான் அந்த கண்ணாடிச் சில்லு, அனுபவம்!”
<><><>
('அமுதம்' ஜூலை 2012 இதழ்)
10 comments:
ஒரு சின்ன கண்ணாடி சில்லு தான்.. ஆனால் எத்தனை பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறது.. உங்கள் கை பட்டு கண்ணாடி சில்லும் கதை சொல்கிறது.
மிகவும் அழகான கதை.
மிகப்பெரியதொரு விஷயத்தை ஒரு மிகச்சிறிய கண்ணாடிச் சில்லின் மூலம் அற்புதமாகச் சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
நல்ல சிந்தனைக் கோணம்.
அனுபவம் பேசும் மொழி அலாதியானது ஜனா சார்.
அருமை அருமை
கண் கண்டதிலிருந்து காணாததை
காண அறிந்தவனே அறிவாளி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அனுபவம் எனும் கண்ணாடிச் சில்லுவின் பார்க்கக் கற்றுக் கொள்ளதான் வேண்டும்.
நல்ல கதை.
கதை ரொம்ப நல்லா இருக்கு. அமுதம் இதழில் வந்ததற்கும் வாழ்த்துகள்.
// “அதான் அந்த கண்ணாடிச் சில்லு, அனுபவம்!” //
அருமையான தத்துவம் சொல்லிய பகிர்வு.
அருமையான கதை.
நட்பின் இழை அறுபடாமல் இருக்க தாத்தா கூறிய அறிவுரை அருமை.
அனுபவம் பேசுகிறது.
ரொம்பவும் நெருங்கிப் பழகியவர்களிடையே கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்டு, பின்னாளில் திருப்பிக் கொடுக்க முடியாமல் போனால் நேரும், மனவருத்தங்களைச் சொல்லும் தாத்தா பாத்திரப் படைப்பு அருமை!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!