Thursday, December 30, 2010

புதுச் சட்டை




''டேய் பாலு, என்னடா பண்றே அங்கே? ஒரு பேபி சட்டைக்கு காஜா போட இவ்வளவு நேரமா?'' கத்திய டெய்லர் ஷண்முகம், ''சே! புதுசா வர்ற பசங்களை வேலைக்கு சேர்த்துக்கிட்டா இப்படித்தான்!'' என்று எரிச்சல் பட்டார்.



''நான் அன்னிக்கே சொன்னேனே இவன் சரியில்லேன்னு... அவனுக்கு தோணற மாதிரி வேலை செய்யறான். நேத்து நாலு சட்டைக்கு அரை மணி நேரத்தில பட்டன் தைச்சு, காஜா போட்டுட்டான். இன்னிக்கு ஒரு சின்ன சட்டையை வெச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கான். ஊஹூம், இவன் தேற மாட்டான்.'' என்று அலுத்துக் கொண்டான் சண்முகத்தின் உதவியாளன் கிருஷ்ணன்.


''சரி, சரி! அதை நீ வாங்கி முடிச்சுடு. பாலு, கொடுடா அதை கிருஷ்ணன் கிட்டே.'' என்று இரைந்தார் சண்முகம்.


''வேணாங்க முதலாளி, இதோ முடிச்சிடறேன்,'' என்று இறைஞ்சிய பாலு, கொஞ்ச நேரத்தில் ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுக்க, காத்திருந்த வாடிக்கையாளர் வாங்கிகொண்டு விரைந்தார்.


அவர் போனதும் சண்முகம் இவனிடம், ''ஏண்டா இந்த சின்ன வேலைக்கே இத்தனை நேரம் எடுத்துக்கிட்டா நாளைக்கு நீயெல்லாம் எப்படிடா பெரிய டெய்லரா வரப்போறே?'' என்று அதட்டினார்.


''அது வந்துங்க... இதைச் சின்ன வேலையா நான் நினைக்கலீங்க. ஆறு மாச குழந்தைக்கான சட்டை இது. குழந்தை சட்டையை எப்பவும் வாயிலேதான் கொண்டு போகும். இல்லீங்களா? அப்ப பட்டன் கழன்று அதன் வாய்க்குள்ளே போயிடக்கூடாது இல்லையா? அதான் பட்டனை நல்ல அழுத்தித் தைச்சு காஜாவையும் ஸ்ட்ராங்காப் போட்டேன். அதான் கொஞ்சம் கூடுதலா நேரமாயிட்டுது. மன்னிச்சுக்குங்க'' என்றான் பாலு.


சண்முகத்தின் முகம் சட்டென்று கனிந்தது. அவன் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து சொன்னார்.
''நிச்சயம் ரொம்பப் பெரிய ஆளா வருவேடா.''

(ஆனந்த விகடன் 2005 தீபாவளி மலரில் வெளியானது)

12 comments:

Rekha raghavan said...

பாலு எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கிறான் பெரிய ஆளாய்.

வெங்கட் நாகராஜ் said...

நிச்சயம் பெரிய ஆளாக வேண்டியவர். குழந்தைச் சட்டை எனத் தெரிந்து நன்றாக தைத்து விட்டார் என்று சொன்ன கதை அருமை. பகிர்வுக்கு நன்றி சார்.

இராகவன் நைஜிரியா said...

சிறு பையனாக இருந்தாலும், நல்ல சிந்தனை உள்ளவனாக சித்தரித்துள்ளீர்கள். நல்ல சிந்தனை நல்ல ஒழுக்கத்தையும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதியதாக தைத்த பட்டனைப் போலவே கதையின் கருத்தும் உறுதியாகவே உள்ளது.

vasu balaji said...

நுணுக்கமான விஷயம். சபாஷ்

vasu balaji said...

புத்தாண்டு வாழ்த்துகள்

கே. பி. ஜனா... said...

sathyarajkumar said:
சுவாரஸ்யமான தகவல். எத்தனை டெய்லர்கள் இதை கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆயத்த ஆடை மயமாகி விட்ட உலகில் மெஷின்கள் இப்படி பார்த்துப் பார்த்து பட்டன் வைக்குமா என்பது சந்தேகமே.

[sathyarajkumar]

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சார்... நீங்க நிச்சயம் பெரிய ஆள்தான் சார்..

ரிஷபன் said...

அந்த பையன் நிச்சயம் பெரிய ஆளாகத்தான் வருவான்.. செய்யும் வேலையில் இத்தனை ஈடுபாட்டோடு செய்பவர் சோடை போவதில்லை.. அருமை. மனதைத் தொட்ட கரு.

ஹ ர ணி said...

ஜனா...
உங்கள் கதைகளை நிறைய வாசித்திருக்கிறேன். நுட்பமிகுந்தவர் நீங்கள். இங்கே நுட்பத்தினும் ஓர் பொறுப்புணர்ச்சி தெறிக்கிறது. வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

மிக நுனுக்கமான, ஒரு பக்க கதைக்கே உரிய, அழகிய முடிவுடன்!

சும்மா, 'நச்' ஜனா!

கிருபாநந்தினி said...

ரொம்ப நெகிழ்ச்சியான கதை ஜனாண்ணே! வைரக் கல்லு மாதிரி ஜொலிக்குது கதைக் கரு!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!