Thursday, December 24, 2009

இன்னும்...


காலொடிந்த காக்கைக்கு

எப்படி நேர்ந்தது அந்த விபத்து?


அடை மழை பெய்யும்போது

அணில்கள் எங்கே உறையும்?


நடுநிசியிலும் குரைக்கும் நாய்கள்

எப்போதுதான் உறங்கும்?


எல்லார் வீட்டிலும்

விரட்டப்படும் பூனைக்கு

யார் தான் சோறிடுகிறார்கள்?


ஏழெட்டு எறும்புகள் ஏலேசா பாடி

தூக்கிச் செல்லும் பருக்கை

கூட்டைச் சென்று அடைகிறதா?


சின்ன வயதில் தோன்றிய கேள்விகள்...

இன்னும் விடை கிடைக்கவில்லை.

என்ன, இப்போது இந்த மாதிரி

அசட்டுக் கேள்விகள் தோன்றுவதில்லை!


( 02-12-09 'விகடனி'ல் வெளியான எனது கவிதை)

14 comments:

CS. Mohan Kumar said...

ரொம்ப அருமையாக சிந்திதிருக்கிறீர்கள். ரசித்தேன்

ரிஷபன் said...

என்ன, இப்போது இந்த மாதிரி
அசட்டுக் கேள்விகள் தோன்றுவதில்லை
அப்படியா.. யூ ஆர் லக்கி.. எனக்கு இப்பவும் இந்த மாதிரி கேள்விகள் ஸ்டாக் நிறைய இருக்கு

ஆஸ்கார் பாரதி said...

அருமையாக உள்ளது.நானும் சில சமயம் இது போல அசட்டுக் கேள்வி எனக்குள் கேட்பதுண்டு.

கமலேஷ் said...

அட எவளவு அழகா இருக்கு உங்களின் படைப்புகள்...
எப்படி இத்தனை நாள் மிஸ் பண்ணேன்னு தெரியலையே..
உங்களின் எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள்..

பின்னோக்கி said...

அற்புதம்.

கா.பழனியப்பன் said...

விடைகிடைக்காத கேள்விகள் தான்.எத்தனை பெருக்கு இந்த சிந்தனை தொன்றும்.
யார் சொன்னது இதை அசட்டு கேள்விகள் என்று?

ரமேஷ் said...

ரொம்ப அருமை

Rekha raghavan said...

இப்போதும் மனதில் அதே போல கேள்விகள்! ஆனால் மற்றவர்கள் பார்வையில் அவை அசட்டுக் கேள்விகள் ஆயிற்றே, எப்படிக் கேட்க முடியும் என்ற அவஸ்தையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். கவிதையை வரி வரியாக ரசித்தேன்.

ரேகா ராகவன்

சுந்தரா said...

ரொம்ப அழகான கவிதை.

சின்னவயசு சிந்தனைகளைச் சின்னச்சின்ன

வரிகளாக்கி...சபாஷ் ஜனா

ஜி.எ.பிரிட்டோ said...

கேள்விகள் அறிவு வளர்ச்சியின் அஸ்திவாரம்...
எனவே,
குழந்தைகளின் கேள்விகளை அசட்டை செய்யாதீர்...

முனைவர் இரா.குணசீலன் said...

விடை காணாக் கேள்விகள் ஓராயிரம் ஒவ்வொருவருக்குள்ளும்..

ஒவ்வொருவருக்குள்ளும்..
இருக்கும் அந்த வினாக்களைத் தூண்டி இழுக்கிறது இந்தக் கவிதை..
நன்று!

கிருபாநந்தினி said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்ணா! ஆனா, ஈரமுள்ள அந்தக் கேள்விகளையெல்லாம் அசட்டுக் கேள்விகள்னு சொல்லிட்டீங்களே! அதத்தான் தாங்க முடியலீங்...

கே. பி. ஜனா... said...

கிருபா நந்தினி அவர்களுக்கு,
அந்தக் கேள்விகள் எல்லாம் மற்றவர்கள் பார்வையில் அசட்டுக் கேள்விகளாகத் தெரியுதேங்கிற ஆதங்கம், கவலை தானே அந்தக் கவிதை? - கே.பி.ஜனா

eniasang said...

என்னடா இது படித்த கவிதை மாதிரி ..........ஆனந்தவிகடன் உபயம் .நல்ல வேளை குறிப்பு ஆ.விகடனில் வ்ந்தது என சொல்லிவிட்டீர்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!