''என்னடா பண்ணினே? இருக்கிற வேலைகளுக்கிடையில இது வேற...'' எரிந்து விழுந்தாள் ரமா தன் பையன் மேல்.
அந்த ஸ்கூலில் அட்மிஷன் வாங்கறதுக்குள்ள அவள் பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும். யார் யாரை எல்லாமோ பிடித்து எவ்வளவோ ஃ பீஸ் கட்டி... எல்லாம் எதற்காக? ஒரு தடவை அங்கே சேர்த்து விட்டுட்டா அப்புறம் ஒரு சின்னக் கவலை கூட படவேண்டியிருக்காது குழந்தையைப் பற்றி என்று அவள் அலுவலகத்தில் எல்லாரும் சொன்னதை நம்பித்தான் அப்படி செய்தாள். இப்ப என்னடான்னா சேர்ந்து ஒரு மாசம் ஆகலே, பேரன்ட்ஸ்கிட்டேயிருந்து லெட்டர் வாங்கிட்டு வர சொல்லியிருக்கிறார்கள்.
நவீன் மௌனமாக இருந்தான். அவனைப் பார்க்கப் பார்க்க ரமாவுக்கு எரிச்சல் தான் ஏற்பட்டது.
''என்னடா வால்தனம் பண்ணினே அங்கே?''
''ஒண்ணுமே பண்ணலேம்மா,'' அதற்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
இவனை விசாரித்து பிரயோசனமில்லை என்று நினைத்தாள். அவளுக்குத் தெரியும். ரொம்ப சென்சிடிவான பயல். லேசா கோபிச்சாலே கண்ணீர் வந்துவிடும். விஷயத்துக்கு வந்தாள். ''என்னடா எழுதித் தரச் சொன்னாங்க?''
''இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டான்னு...''
''இனிமே அப்படி நடந்துக்குவியா?''
''மாட்டேம்மா! மாட்டவே மாட்டேன்.''
என்னவென்று தெரியாமலே எழுதிக் கொடுத்தாள். அந்த ஸ்கூலில் போய் விசாரிக்கலாம் என்றால் குறிப்பிட்ட நேரம், முன் அனுமதி என்று ஏகப்பட்ட ஃபார்மாலிடீஸ். யாருக்கு நேரம் இருக்கிறது இந்த அவசர யுகத்தில்? சாயந்திரம் ஆபீசில் ஒரு சென்ட் அஃப் பார்ட்டி. கலந்து கொள்ளவில்லை என்றால் மானேஜர் கோபப்படுவார். அவரைப் பகைக்க முடியாது. அடுத்த பிரமோஷன் லேட் ஆகும்...
மாதவனிடம் போய்ப் பாருங்க என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே கறாராகச் சொல்லியிருந்தான். ''இத பாரு, ஆபீஸ் விட்டு வந்தால் எனக்கு இன்ஷூரன்ஸ் கான்வாசுக்கே நேரம் சரியா இருக்கு. படிப்பு விஷயம் கம்ப்ளீட்டா உன்கிட்ட விட்டிருக்கேன்.''
ஃபீசை வாங்கிக் கொண்டு பொறுப்பை நம்மிடம் தள்ளும் அந்த ஸ்கூலை மனதில் வெறுத்தபடியே டி.வி.யை ஆன் செய்தாள். அவள் விரும்பிப் பார்க்கும் சீரியல் முடிந்து விட்டிருந்தது. ரிமோட்டைத் தூக்கி எறிந்தாள். பாட்டரி வெளியே வந்து விழுந்தது.
ஒரு நாவலைப் பிரித்து அதில் கவனத்தைக் கரைக்க முயன்றாள். முடிய வில்லை. தூக்கிப் போட்டாள்.
அப்போதுதான் உள்ளே நுழைந்த மாதவன் அவளிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.
லெட்டரை வாங்கிக் கொண்ட டீச்சர் அனுசூயா, அனுதாபமாகக் கேட்டாள், ''வீட்டில நல்ல திட்டு வாங்கினியா?''
''ஆமா டீச்சர்.'' நவீன் கண் கலங்கிற்று.
''இங்க என்னை வந்து பார்க்கணும்னு சொல்லியிருப்பாங்களே?''
''சொல்லலே.'' நடந்ததைச் சொன்னான்.
''பார்த்தியா, அவங்களுக்கு ஆயிரம் வேலை. நீ நல்ல பையனா நடந்து கொள்ளாட்டி எல்லாருக்கும் எத்தனை சிரமம் பார்த்தியா?''
''இனிமே புரிஞ்சிப்பேன் டீச்சர்.''
அவன் கண்ணைத் துடைத்தாள். ''போ, சமர்த்து!''
ஆனால் அடுத்த வாரமே இன்னொரு கம்ப்ளைன்டுடன் வந்து நின்றான் நவீன். பல்லைக் கடித்தான் மாதவன். ''உன் செல்லப் புத்திரன் பண்ணியிருக்கிற காரியத்தைப் பார்த்தியா?'' இரைந்தான். ''எங்கேருந்துதான் இதெல்லாம் படிச்சுட்டு வர்றானோ?''
''என்ன பண்ணினானாம்?''
''பக்கத்துக்கு பெஞ்சு பையன்கிட்ட சண்டை போட்டிருக்கான். ஏதோ தகாத வார்த்தை எல்லாம் சொல்லியிருக்கானாம். உடனே வந்து பார்க்கணுமாம்.''
''கூப்புட்டுட்டாங்களா? ஆ ஊன்னா உடனே வரச் சொல்லிருவாங்களே! இவங்க என்னதான் நினைச்சுட்டிருக்காங்க? அங்கே சேர்த்திட்டாப் போதும், அப்படி ஒரு பையன் இருக்கிறதையே நீங்க மறந்துரலாம்னாங்களே... உங்க நண்பர் சந்துரு கூட அப்படித்தானே சொன்னார்? அவரைக் கூப்பிட்டு சொல்லுங்க. நாம கெட்டது போதும், இன்னும் எத்தனை பேர்கிட்ட சொல்லப் போறாரோ? அவங்களையாவது காப்பாத்துவோம்....'' படபடவென்று பொரிந்தாள்.
''சரி, ஸ்கூலுக்கு ஒரு நடை போயிட்டு வந்திரு. என்ன சொன்னாலும் கண்டுக்காதே. அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலாப் பார்த்து சேர்த்துற வேண்டியதுதான்.''
''ஆமா, இன்னொரு தடவை ஒரு தொகை அழணும். காசு என்ன கொட்டியா கிடக்கு?...'' என்று அவள் ஆரம்பிக்க, சங்கடமாகிவிட்டது மாதவனுக்கு. ரெண்டு நாள் முந்தித்தான் அவர்களுக்குள் பலத்த சண்டை. எதிலோ தொடங்கி எங்கோ போய் விட்டது. கன்னா பின்னாவென்று திட்டிவிட்டான்.
மறுபடி ஒரு சீன் இப்ப தேவையா என்று நினைத்தான். அவளை சமாதானப் படுத்தினான். தன் கோபத்தை மகனை நோக்கித் திருப்பினான்.
''குடும்ப மானத்தைக் கெடுத்திட்டியேடா! நாங்க போய் அங்கே கைகட்டி நிக்கணும். என்ன சொன்னான்னு கேக்கணும். 'ஐயய்யோ, அப்படியா சொன்னான்னு அவங்ககிட்டே சாரி கேக்கணும். அந்தப் பையனோட அப்பாம்மா கிட்ட, நம்ம ஸ்டேடசை விட்டு கெஞ்சணும். தலை குனிய வெச்சிட்டியேடா!''
அவன் நினைத்த மாதிரியே அவள் கொஞ்சம் வேகம் அடங்கி புறப்பட்டாள். ஆனால், ''நீங்களும் வாங்க, என்னால சமாளிக்க முடியாது அவங்களை,'' என்று சொல்லிவிட்டாள்
''சரி, அங்க அப்பாயின்ட்மென்ட் வாங்கணுமே...'' இழுத்தான்.
''அதெல்லாம் எச். எம்மையும் சேர்த்துப் பார்க்கிறதுக்குத் தானே? இப்ப முதல்ல டீச்சரைப் போய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துருவோம்.''
அனுசூயா டீச்சர் கனிவாக எடுத்துரைத்தாள். ''முன்னாலேயே உங்களை ரொம்ப எதிர்பார்த்தேங்க. நல்ல படிக்கிற பையன். நல்ல நண்பர்கள் தான் இங்க அவனுக்கு. ஆனா தினம் தினம் ஏதாச்சும் பண்ணிடறான் கண்டிக்கிற மாதிரி. எங்கேர்ந்து இதெல்லாம் படிச்சுட்டு வர்றான்னு குழம்பற மாதிரி.... தெருப் பசங்க, பக்கத்து வீட்டுப் பசங்க எல்லாம் எப்படி?''
''ஐயோ வீட்டை விட்டு வெளியே விடறதே இல்லைங்க. எப்பவும் எங்க கூடத்தான் இருப்பான்.''
''இல்லைங்க, யாரோ எங்கோ தூண்டுகோலா இருக்கிறாங்க. சின்னப் பையன்களுக்கு இதெல்லாம் தானா வராது.''
''போன தடவை நீங்க இப்படிப் பண்ண மாட்டான்னு எழுதித் தரச் சொல்லியிருந்தீங்க. உடனே எழுதிக் கொடுத்தோம். அவனையும் வார்ன் பண்ணினோம்.''
''வார்ன் பண்றது பெரிய விஷயம் இல்லைங்க. அடிப்படையைக் கண்டு பிடிச்சு திருத்தணும் . அதுவும் அவனாக புரிஞ்சு அது நடக்கணும். அன்னிக்கே நீங்க வந்திருந்தா அவன் என்ன பண்ணினான்னு சொல்லியிருந்திருப்பேன் நீங்க கொஞ்சம் வாட்ச் பண்ணி இன்னும் மோசமாகிவிடாம பார்த்திருக்கலாம்.''
''டயமே இல்லைங்க.''
''என்னங்க, இப்படி சொல்றீங்க? உங்க குழந்தை, அவன் எதிர்காலம்! ஏன், அன்னிக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக மட்டும் என்னை வந்து பார்த்தீங்களே?''
''எஸ், எஸ்... சரி, என்னங்க பண்ணினான் அன்னிக்கு?''
''கையிலிருந்த ஜாமிட்ரி பாக்சை தூக்கி எறிஞ்சிட்டான். சிதறி விழுந்ததில ஒரு பொண்ணு காலில் காம்பஸ் குத்தி ரத்தமே வந்துட்டது. இவன் பதறிடக் கூடாதேன்னு இவன்கிட்ட அதை சொல்லலே. அந்தப் பொண்ணுக்கு மருந்து போட்டு... சமாதானப் படுத்தி...''
மாதவன் திரும்பி ரமாவைப் பார்த்தான். அவள் அடிக்கடி ரிமோட்டைத் தூக்கி எறிவது கண்ணில் நிழலாடிற்று...
மாதவன் திரும்பி ரமாவைப் பார்த்தான். அவள் அடிக்கடி ரிமோட்டைத் தூக்கி எறிவது கண்ணில் நிழலாடிற்று...
அவன் குரல் நடுங்கியது. ''..அப்படியா?''
அந்தத் தகாத வார்த்தையைக் கேட்டதும்...
முந்தா நாள் சண்டையில் அவன் ரமாவைப் பார்த்து சொன்னது! வீட்டில் குழந்தையும் இருக்கிறான் என்பதைப் பற்றிக் கவலைப் படாமல்!
திரும்பினார்கள் பாடத்தைக் கற்றுக் கொண்டவர்களாக...
('தேவி' 25-11-2009 இதழில் வெளியான என் சிறுகதை.)
9 comments:
‘குழந்தைகளுக்கு உபதேசம் செய்யாதீர்கள்; நடந்து காட்டுங்கள். அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்பதில்லை; நடந்துகொள்ளும் விதத்தைக் காப்பியடிப்பார்கள்’ என்பது ஒவ்வொரு பெற்றோருமே அறிந்துகொள்ள வேண்டிய பாடம். தலைப்பில் உள்ள ‘பாடம் ஒன்று’ பெற்றோருக்கானது. அருமையான கதை; எளிமையான நடை!
குழந்தைகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் ‘பாடம்’ கற்றுக் கொள்வதை அழகாக கதை செய்திருப்பது பாராட்டிற்குரியது
It is true that children learn everything from parents. Nice story.
"Parents are the First teachers of the children" - K.B.jana has given a nice story on this moral
Bhahavath kumar
கதை அருமை, பல வழிகளில் பல கதைகளில் சொல்லியும் பெற்றோர் இன்னும் திருந்துவதாக தெரியவில்லையே|
Good Story. Children learn from their parents and teacher only. The way you expressed it is very good.
Venkat Nagaraj
New Delhi
கதை அருமைங்கிறதைப் பத்தி எல்லாரும் எழுதிட்டாங்க. அதுக்காக நீங்க போட்டிருக்கிற படமும் சூப்பரா இருக்கு. எங்கேர்ந்து புடிச்சீங்க! அட்டகாசம்!
குழந்தைங்க பெரியவங்ககிட்ட தான் கத்துக்குறாங்க. கதைய படிச்ச உடனே என் பையனும் இந்த மாதிரி தான் கத்துக்குவான்னு தோணுச்சு. நன்றி.
எல்லோருக்கும் தெரிந்த்துதான் படிப்பவர் மனதில் தைக்கும்படி அமைத்த விதத்தை பாராட்டியே ஆகனும்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!