'அப்பா, அந்திச் சூரியன்
அப்புறம் எங்கே போகுது?'
'ரேடியோவின் உள்ளிருந்து
பாட்டு எப்படி வருது?'
'கமலாவின் அப்பா மட்டும் ஏன்
காலில செருப்பு இல்லாமல் போறாரு?'
மழலைச் சிறுவனாய்
அன்று அவன் கேட்ட போது
'போய்த் தூங்குடா.'
'ஸ்கூலுக்கு டயமாச்சு, புறப்படு.'
'போய் புஸ்தகம் எடுத்துப் படி.'
என்றேன் அப்பா.
இன்று
கம்ப்யூட்டரின் முன்னால்
கவிழ்ந்திருக்கும் மகனிடம்
'டபிள் கிளிக் எப்படி பண்றது?'
'ஈ மெயில் ஐ.டி. எங்கே கிடைக்கும்?'
'ஸீ டிரைவ்னா என்ன?'
என்று கேட்கும்போது
'போங்கப்பா நான் பிஸி.'
'உங்களுக்கு லேசில் புரியாது.'
'தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?'
விரட்டத்தான் செய்வான், இயற்கை.
விசனப்பட என்ன இருக்கிறது?
-- கே.பி. ஜனா
(21-12-2006 'குமுதம்' இதழில் வெளியான என் கவிதை.)
(21-12-2006 'குமுதம்' இதழில் வெளியான என் கவிதை.)
12 comments:
என்னங்க கே.பி.ஜனா, இன்றைய என் நிலைமையை இவ்வளவு அப்பட்டமாகவா மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைப்பீர்கள்?! போங்க சார், நீங்க ரொம்ப மோசம்!
யதார்த்தமான கவிதை.
ரேகா ராகவன்.
ஜனா,
இன்றைய மகனை அப்பவாக்கி நாளைய பேரனை அவனுக்கு மகாநாகினால் எப்படி கவிதை வரும்? இயல்புகள் தொடரத்தானே செய்யும்?
- பகவத் குமார்
நல்லா இருக்கு ஜனா :)
இந்த கவிதை எப்போ படித்தாலும் பொருந்தும் எவர்க்ரீன் கவிதை என்று நினைக்கிறேன்.. ரவிபிரகாஷ் சொன்னது போல் எங்கள் வீட்டிலும் இதே தான் :)
நல்ல கவிதை. நீங்கள் சொன்னது உண்மை.
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
கால சக்கரம் சுழல்வதை நன்றாக எழுதி உள்ளீர்கள்
கவிதையை ரசிக்கத் தெரியாத என்னையும்கூட ரசிக்க வைக்கும் பொருட்சுவை! ஆஹா அற்புதம்!
எங்கள் வீட்டிலும் இதே கதை தான்!
அட நம்மைப் போல் இன்னொருவரும் இருக்கிறாரே என்பதில்
பரம் திருப்தி!
நல்லவேளைங்க... என் பொண்ணு வளர்ந்து இப்படி அதுங்கிட்ட மூக்குடை படுறதுக்குள்ள நான் கம்ப்யூட்டர்ல கொஞ்சம் தேறிடுவேன்னு நினைக்கிறேன். நல்லாருக்குங்க கவிதை!
விசனப்பட என்ன இருக்கிறதா.. அதுதான் என் விசனமே..
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!