Tuesday, November 3, 2009

72877629 (சிறு கதை)


திப்புக்குரிய நிர்வாக இயக்குனர் அவர்களுக்கு,

இந்த மின்னஞ்சலை எழுதுவது மனித வள மேலாளர் மாற வர்மன்.

என் மீது நீங்கள் சுமத்தியிருக்கும், இதுவரையிலேயே முதல் முதலான புகாருக்கு விளக்கம் தர நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு கொட்டைப்பாக்கு அளவில் அதை சொல்வதானால் சமீபத்திய ஆளெடுப்பில் நான் எங்கள் ஊர்ப் பையன் ஒருவனுக்கு சலுகை காட்டிவிட்டேன் என்பது.

எலுமிச்சம்பழம் உப்பில் ஊறியிருப்பதைப் போல விசுவாசத்தில் ஊறிப்போயிருக்கும் ஒருவனுக்கு இப்படி ஒரு குற்றச் சாட்டு அவன் மேல் சுமத்தப்படுகையில் எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்பதை ஒரு கணம் நீங்கள் எண்ணிப் பார்க்கக் கோருகிறேன்.

என் விளக்கத்தை ஒரே வரியில் அடக்குவதாக இருந்தால் திரு.கந்தன் என்ற அந்த நபரை எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்று நான் தெரிந்து கொண்டதே அவர் நம் கம்பெனியில் சேர்ந்த அன்று காலையில் தான்! உண்மை அப்படியிருக்கையில், முதற்கண் நான் எப்படி அவருக்கு உதவ எண்ணியிருக்க முடியும்? இனி அதற்கான சான்றுகளை நான் அளிக்கிறேன்.

1. விண்ணப்பிக்கிறவர்களின் அடிப்படைத் தகுதியை பரிசீலனை செய்து குறும் பட்டியல் தயாரித்து உதவியாளர்கள் என் பார்வைக்கு வைத்த பின்னரே நான் காட்சிக்கு வருகிறேன். அப்போதும் எனக்கு அவர்களின் கல்வி மற்றும் அனுபவத் தகுதி மட்டுமே பட்டியலில் அளிக்கப்படுகிறது. அந்த மின்னஞ்சலை இத்துடன் தங்களுக்கு முன்னனுப்பியுள்ளேன்.

அடுத்து அந்த நாற்பத்து மூன்று பேரில் அந்த வேலைக்காக குறும் பட்டியல் செய்யப்பட்ட பன்னிரண்டு பேரையும் நான் இந்த மாதம் இரண்டாம் தேதி தொலைபேசியில் பேட்டி கண்டதன் முழு உரையாடலும், கம்பெனி வழக்கம் அப்படி ஒன்றைக் கோரவில்லை எனினும், என்னுடைய சுய கண்ணியத்தின் உந்துதலின் பேரில் ஒரு வார்த்தை விடாமல் ஒலி நாடாவில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அதைத் தாங்கள் தங்கள் ஒய்வு நேரத்தின் எந்தக் கணத்திலும் கேட்டுப் பார்க்கலாம். அப்படிக் கேட்டுப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் தாங்கள் கீழ்க்கண்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

2. அந்தப் பேட்டிகளில் மிக நீளமானதும் அவற்றின் சராசரி நேரமான இருபத்தொன்று நிமிடங்களை விட ஏழு நிமிடம் அதிகமானதும் ஆன ஒரே பேட்டி திரு.கந்தனுடனானது தான்.

3. பொதுவான கேள்விகளைத் தவிர நான் அனைவரிடமும் அவர்களின் புத்தி சாதுரிய விகுதியை தீர்மானிக்கக் கேட்கும் கேள்விகளில் மிகக் கடினமான கேள்வி கேட்கப்பட்டவரும் அவருடைய துரதிர்ஷ்டவசமாக அல்லது இப்போது என்னுடைய அதிர்ஷ்டவசமாக திரு கந்தன் தான். மிகக் கடினமான அந்தக் கேள்வியின் விடை 72877629 என்கிற எட்டிலக்க எண் ஆகும்.

தாங்களே சொல்லுங்கள். அந்தச் சரியான பதிலை அந்தத் தொலைபேசியில் அடுத்த சில வினாடிகளிலேயே சொல்லுவதற்கு முடிகிற ஒரு விண்ணப்பதாரரின் புத்தி சாதுரிய விகுதியை நான் 180 என்று அளவிட்டதில் என்ன தவறு இருக்க முடியும்? அப்படி ஒரு பிரகாசமான நபர் அடையாளம் கண்டு கொள்ளப்படுகையில், நிறுவனத்தின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு 24x7 மணி நேரமும் உழல்பவனான ஒரு பணியாளனால் அவனை எப்படிப் புறக்கணிக்க முடியும்? மிக்க மகிழ்வுடன் மட்டுமே அல்லவா அவன் அந்த நபருக்கு நியமன உத்தரவை வழங்க முடியும்?

ஆகவே தாங்கள் என் மீது கொண்டுள்ள சந்தேகம் தவறானது என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் என் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய முழு விசுவாசத்துடன் என் பணியைத் தொடருவேன் என்றும் இனிமேல் இதுபோன்ற குற்றச்சாட்டு எதுவும் எழாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

நம்பிக்கையுடன்,

மாற வர்மன்.


2


ன்புள்ள மாறவர்மன்,

தங்கள் விளக்கத்தை சுருக்கமாக நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறேன் (அதற்கான காரணமும் இந்த மின்னஞ்சலிலேயே உங்களுக்கு விளங்கும் என்று நான் நம்புகிறேன்). எனினும், என்றும் நிறுவனத்துக்கு எந்த ஊறும் நேராத விதத்தில் பணியாற்றுவேன் என்ற தங்கள் கூற்றின் மீது மேலும் ஒரே ஒரு முறை நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளிக்க நான் உத்தேசித்திருப்பதால் உங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,

சத்தியமூர்த்தி.

பி.கு.: இத்துடன் நீங்கள் எனக்கு விளக்க அஞ்சல் எழுதும்போது அதனுடன் தவறுதலாக முன்னனுப்பிய, இந்த மாதம் ஒன்றாம் தேதியிட்ட, உரைப் பகுதியில் 72877629 என்ற எண் மட்டுமே கொண்டிருந்த, திரு.கந்தன் என்ற அன்பருக்கு நீங்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சலை உங்களுக்கு திருப்பியுள்ளேன்.

<><><>

--கே. பி. ஜனார்த்தனன்
(சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை)

18 comments:

நிலாரசிகன் said...

சுத்த தமிழுக்காகவே இக்கதை எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. வாழ்த்துகள்.

பிரசன்ன குமார் said...

கதையும் உங்க தமிழும் நல்லா இருக்கு. Continue the good work :)

SRK said...

அலுவலக கடித பாணி பிடித்திருந்தது. வாழ்த்துகள்.

ரவிபிரகாஷ் said...

சாதுர்யம் ததும்பும் கதை! அழகான தமிழ் நடை! அசத்திட்டீங்க ஜனா!

KALYANARAMAN RAGHAVAN said...

அருமையான தமிழ் சொல்லாடல், 'நச்' முடிவு. மொத்தத்தில் கதை அமர்க்களம். வெற்றி பெற வாழ்த்துகள்.

ரேகா ராகவன்

வி. நா. வெங்கடராமன். said...

ஜனா சார், நல்ல கதை. சர்வேசன் 500 - "நச்" கதை போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்
வெங்கட், புது தில்லி

சதங்கா (Sathanga) said...

//சுத்த தமிழுக்காகவே இக்கதை எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. வாழ்த்துகள்.//

டிட்டோ :))

ரிஷபன் said...

அசத்திட்டீங்க நிஜமாவே என்னால முடிவை யூகிக்க முடியல மனப்பூர்வமான வாழ்த்துகள்

கே.ரவிஷங்கர் said...

கதை நல்லா இருக்கு.வழக்கமாக முடிவை யூகிக்கும்
வழக்கம்(பல கதைப் படிப்பதால்)உண்டு.இதில் யூகிக்க முடியாதபடி செய்கிற்து மாற வர்மனின் கடிதத்தின் நம்பகத்தன்மை.


வாழ்த்துக்கள்!

ராம்குமார் - அமுதன் said...

அருமையான கதை... வெற்றி பெற உளமார்ந்த வாழ்த்துக்கள்...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நச்.., நச்...,

முகிலன் said...

அருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்

Enthir said...

Very good.

K.B.JANARTHANAN said...

திரு. நிலா ரசிகன்,
சத்தமான பாராட்டுக்கு நன்றி.
திரு. பிரசன்ன குமார்,
சத்தான பாராட்டு! நன்றி!
திரு. சத்ய ராஜ் குமார்,
ரசனைக்குரியதாயிருந்ததில் மகிழ்ச்சி.
திரு. ரவி பிரகாஷ்,
சாதுர்யம் என்றதுமே நினைவுக்கு வருவது உங்கள் 'சேலை, வேலை' கதைதான். நன்றி
திரு. ரேகா ராகவன்,
வாழ்த்துக்கு நன்றி.
திரு. வி.நா.வெங்கட் ராமன்,
அன்புக்கு நன்றி.
திரு. சதங்கா,
'டிட்டோ!'
திரு. ரிஷபன்,
நிஜமாவா? நம்ப முடியலே.
திரு. கே. ரவி ஷங்கர்,
பாராட்டுக்கு நன்றி.
திரு. ராம் குமார் அமுதன்,
பாராட்டும் அருமை, நன்றி.
திரு. சுரேஷ்,
நன்றி.
திரு. முகிலன்,
வாழ்த்துக்கு நன்றி.
Mr. Enthir,
Thank you.

அன்புடன்-மணிகண்டன் said...

சூப்பரா இருக்கு!!!

Vidhoosh said...

wow. super...

-vidhya

K.B.JANARTHANAN said...

# அன்புடன் மணிகண்டன்:
மகிழ்ச்சி! நன்றி!
# vidoosh: Wow! Really?

Mohan Kumar said...

மிக வித்யாசமான கதை. E Mail -ல் தவறான attachment வைப்பது நடக்கவே செய்கிறது. இதன் அடிப்படையில் ஒரு கதை !! அதுவும் கடித பாணியில்.. அற்புதம் சார். வெற்றி பெற வாழ்த்துக்கள்

மோகன் குமார்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!