Friday, October 30, 2009

கண்ணாடி அரண்வசரமாக பைக்கில் விரைந்து கொண்டிருந்த நான் ‘டம் டமா... டம் டமா...’ என்ற உடுக்கைச் சத்தம் கேட்டுத் திரும்பினேன்.

ரோட்டோரமாக இரு புறமும் பலர் கூடி நின்று பார்த்துக் கொண்டிருக்க... அந்தரத்தில் கயிற்றின் மீது ஒரு சிறுமி. அஞ்சு வயசு கூட இருக்காது. கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு லாகவமாக அடி மேல் அடி வைத்து அந்த ஒற்றைக் கயிற்றின் மேல் நடந்து கொண்டிருந்த காட்சி என்னை உலுக்கியது.

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினேன்.

சாலையோரமாக தரையில் முளையடித்துக் கட்டிய கயிற்றை ரெண்டு பக்கமும் பெருக்கலாக நிறுத்திய மூங்கில்களின் மேலாகக் கொண்டு போயிருந்தார்கள். அதன்மேல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தாள் சிறுமி.

இறங்கப் போகிறாள் என்று நினைத்தால், குனிந்தவள் தலையில் ஒரு சின்னச் சொம்பை வைத்தான் அந்தச் சிறுமியின் தகப்பன். அதையும் வைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் சொம்பு கீழே விழுந்து விடாமல் மீண்டும் கயிற்றில் அடிகளை எடுத்து வைத்துத் திரும்பி நடந்தாள்.

எங்கே தலை குப்புற விழுந்து விடப் போகிறாளோ என்று எனக்குப் படபடப்பாக இருந்தது.

மூன்றாவது முறையாக அவன் ஓர் அலுமினியத் தட்டைக் கயிற்றின் மீது வைக்க அதை ஒரு காலால் அழுத்திக் கயிற்றின் மேல் நகர்த்தியபடி மறு முனை வரை நடந்து சென்றாள் அந்தச் சிறுமி.

இதோடு இது முடிந்து அந்தப் பெண் குழந்தை கீழே இறங்கிவிடக் கூடாதா என்று நினைத்தேன். கீழே அமர்ந்திருந்த அந்தச் சிறுமியின் தாய் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு காசு வாங்கக் கிளம்பினாள். அப்பாடா, இதுதான் கடைசி ரவுண்ட்!

உலகம் புரியாத வயதில் அந்தச் சிறுமி உயிரைப் பணயம் வைத்து நிகழ்த்திய சாகசத்தில் உருகிப் போயிருந்தேன் நான்.

அவரவர் ஐம்பது காசு, ஒரு ரூபாய், அதிக பட்சம் ஐந்து ரூபாய் வரை தட்டில் போட, நான் முழு ஐம்பது ரூபாய் நோட்டைப் போட்டுவிட்டு, அந்தத் தாய் எவ்வளவு சந்தோஷப் படுகிறாள் என்று ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன். நிமிர்ந்து என்னைப் பார்த்த அவள், சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

ரொம்பச் சின்னதாக ஒரு விசும்பல் கேட்ட மாதிரி இருந்தது. தட்டில் ஒரு கண்ணீர்த் துளி விழுந்து தெறித்தது. இடுப்பிலிருந்த கைக்குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே சட்டென்று நகர்ந்துவிட்டாள்.

அவள் செயல் எனக்குப் புரியவில்லை. ஏன், எதற்காக அவள் அழ வேண்டும்?

வீடு வந்து மனைவியிடம் நடந்ததைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.

''இதில் புரிய என்னங்க இருக்கு? பார்த்திட்டிருந்த யாரோ ஒருத்தராகிய உங்களுக்கே அந்தச் சிறுமி செய்த சாகசம் அவ்வளவு வருத்தத்தை உண்டாக்கியிருந்ததுன்னா, பெத்த தாயான அவளுக்குத் தினம் தினம் அந்தக் குழந்தையை அப்படி ஒரு காரியத்தைச் செய்ய வைக்கிறது எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? கல்லாலானதுன்னு அவள் மனசுக்குப் போட்டிருந்த அரண், வெறும் கண்ணாடிதான்கிறது எப்பவாவது உங்களை மாதிரி சில பேர் இப்படி அதீதக் கருணைங்கிற கோலியை எறியும்போதுதானே அவளால் தெரிஞ்சுக்க முடியுது?''

என்ன தெளிவாகச் சொல்லிவிட்டாள் என் மனைவி! ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க?

(விகடனில் பவழவிழா பரிசு பெற்ற குட்டிக் கதை.) -- கே. பி. ஜனார்த்தனன்.

7 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

முதல் பதிவே அருமையான நெஞ்சை நெகிழவைத்த கதை. தொடரட்டும் உங்கள் கைவண்ணம் பல்வேறு தலைப்புகளில்.

ரேகா ராகவன்

ரவிபிரகாஷ் said...

உளவியல்ரீதியிலான கதை. பொதுவாக, எந்தப் பிச்சைக்காரருக்கும் பிச்சையிட விரும்பாத நான், இம்மாதிரி கழைக்கூத்தாடிக் கூட்டத்தில் சாகசம் செய்யும் சிறுவர் சிறுமிகளைக் கண்டு கரைந்து ரூபாய் ஐந்தோ, பத்தோ தர்மம் அளிப்பதுண்டு. அந்த வகையில் என் நெஞ்சைத் தொட்ட கதை இது.

puduvai said...

ஜெனா , மிகவும் அருமையான கதை அல்ல . நிஜம் . - சந்திரஹரி

ரிஷபன் said...

உங்கள் எழுத்தின் பலமே இயல்பான கதை ஓட்டமும் உணர்வுகளை அழகாக சித்தரிப்பதும்தான் அந்த வகையில் இந்தக் கதையும் வாசகர் மனதில் சட்டென்று இடம் பிடித்து விடுகிறது

Saravanan said...

Super...
S Saravanan, B'lore

ஷைலஜா said...

ஜனா சார்! பெண்ணின் மனதை மட்டுமல்ல ஆணாகிய நீங்க எழுதின இந்தக்கதையையும் புரிஞ்சிக்கிட்டேன் ,,, பல பரிசுகளுடன் அண்மையில்இலக்கியபீடம் சிறுகதைப்போட்டில முதல்பரிசுவாங்கின பிரபல எழுத்தாளருக்கு இங்க இந்தக்கதைமட்டும் நன்றாக இருப்பதாக சொல்லிடறது சரியா? உங்க எல்லா சிறுகதைகளுமே எப்போதும் சூப்பர்!

K.B.JANARTHANAN said...

திரு. ரேகா ராகவன்,
நெகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி!
திரு. ரவி பிரகாஷ்,
கதை நெஞ்சைத் தொட்டதில் நெஞ்சம் மகிழ்ந்தது!
திரு. சந்திரஹரி,
நிஜமாகவா?
திரு. ரிஷபன்,
எப்படியோ உங்க மனசில் இடம் பிடிச்சிட்டேன்!
திரு. சரவணன்
நன்றி.
திருமதி. ஷைலஜா,
'கலைமகளி'ல் உங்கள் 'ரசவாதி நினைவு பரிசு'ச் சிறுகதை அருமை!
அன்புடன், கே.பி.ஜனா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!