Saturday, November 14, 2009

நாளும் பொழுதும் நம்மோடு!
ரை மணி நேரம் தான் அந்த ஸெமினார். தலைக்கு ஐநூறு பீஸ் என்றாலும் அனைத்து சீட்டும் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே விற்றுத் தீர்ந்திருந்தது.

'நேரத்தை நன்றாகப் பயன் படுத்துவது எப்படி?' என்ற தலைப்பில் அந்தக் கூட்டத்தில் உரையாற்றவிருந்த டைம் மேனேஜ்மென்ட் நிபுணர் காலதேவன் இண்டர்நேஷனல் ரேஞ்சில் வெகு பிரபலம் என்பதால்தான் எகிறியிருந்தது ரெஸ்பான்ஸ்.

சரியாக 10. 10. 10 - க்கு உரை ஆரம்பிக்கப்படும் என்று பெரிய எழுத்தில் விளம்பரம் சொன்னது. நேரத்தைப் பற்றிப் பேச வருகிறவர் நேரத்தோடு வருகிறாரா என்று வாட்ச் மேல் விழி வைத்துக் காத்திருந்தனர் எல்லாரும். ஆனால் அவர் வரக் காணோம்!

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் கண்கள் அலை பாய்ந்தன. முணு முணுப்புக்கள். சலசலப்புக்கள். பெருமூச்சுக்கள்.

பத்தாவது நிமிடம் உள்ளே நுழைந்த காலதேவன், ''வணக்கம்,'' என்றார். பின் ஒவ்வொருவராக, ''உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார்? அதில் அவர் எந்த அளவு முன்னேறியிருக்கிறார் அல்லது சாதித்திருக்கிறார்?'' என்று வினவினார்.

விழித்தனர். யாருக்குமே தெரியவில்லை.

கனைத்துக் கொண்டார். ''அன்பர்களே! பேச வேண்டியவர் வரவில்லை. அந்தக் காலம் உங்கள் கையில் இருந்தது. வேறொன்றும் செய்ய இடமில்லை. ஸோ, முன்னேற வேண்டும் என்று வந்திருக்கும் நீங்கள் பக்கத்தில் இருப்பவரின் முன்னேற்றம் குறித்து அறிந்து அதை நான் கேட்ட விதத்தில் உருப்படியாகப் பயன்படுத்தியிருக்கலாமே? ஆக, இதுவரை நீங்கள் கற்றுக் கொண்டது நேரத்தை என்ன செய்யக்கூடாது என்பது.''

எல்லாரும் அசந்திருக்க, தொடர்ந்தார். ''உங்களை நான் மூன்றே கேள்விகள் தான் கேட்கப்போகிறேன்,'' என்றவர் ஒவ்வொருவராக, ''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?'' என்று கேட்டார்.

'' ஸி.இ.ஒ. ஆகணும்!''... ''என் பிசினசை பெரிய லெவலுக்குக் கொண்டு வரணும்!''... ''அஞ்சு லட்சம் சர்குலேஷன் உள்ள பத்திரிகை நடத்தணும்!'' உற்சாகம் கொப்புளிக்க உதட்டிலிருந்து உதிர்ந்தன பதில்கள்.

''கேள்வி ரெண்டு. அதற்காக நீங்கள் என்னென்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?''

''முதலில் ஒரு வொர்க் ஷாப் தொடங்கணும்''... ''டெஸ்ட் பாஸ் ஆகணும்.''... ''சிற்றிதழ் தொடங்கணும்.'' அட, எத்தனை புத்திசாலித்தனமான, சுவையான, கோளாறில்லாத திட்டங்கள் கோலார் சுரங்கமாக வெளிவந்தன!

இப்போது மூன்றாவது கேள்வியைக் கேட்டார். ''அப்படியானால் அதைச் செய்வதை விட்டுவிட்டு இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அதைச் செய்வது தானே உங்களைப் பொறுத்த வரை டைம் மேனேஜ்மென்ட் அட் இட்ஸ் பெஸ்ட்? அதை நோக்கி நீங்கள் எந்த ஒரு அடி எடுத்து வைத்தாலும் அது, அது மட்டும் தானே உங்கள் நேரத்தை உரிய வழியில் உபயோகிப்பது?''

ஒரு நிமிடத் திகைப்பு. புரிந்துகொண்டனர்.

''காலம் என்பது நீங்கள் உபயோகிக்கும் ஒரு பொருள் அல்ல. காலம் என்பதே நீங்கள் தான். ஆகவே காலத்துடன் உங்கள் குறிக்கோள் கலந்துவிட வேண்டும். அதன் பின் காலம் நகர்ந்தது தெரியாமலேயே காலம் உங்களை உருவாக்கியிருக்கும், நீங்கள் உங்களை உருவகித்தது போலவே!''-- கே. பி. ஜனார்த்தனன்

9 comments:

ரிஷபன் said...

அருமையான கற்பனை இல்லை நிஜமான சம்பவம் போல கதை

ரவிபிரகாஷ் said...

சூப்பர்! நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சிங்ளேர் லூயி. அவரை ஒருமுறை ஒரு கல்லூரியில் மாணவர்களிடையே ‘கதை எழுதுவது எப்படி?’ என்னும் தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள். பேச எழுந்த லூயி, “உங்களில் யார் யார் எழுத்தாளராக விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். எல்லா மாணவர்களும் கையைத் தூக்கினார்கள். உடனே லூயி, “பின்னே வீட்டுக்குப் போய் எழுதுங்களேன். இங்கே வெட்டியாக உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டாராம். அது நினைவுக்கு வந்தது தங்கள் கதையைப் படித்தபோது!

பிரசன்ன குமார் said...

//''காலம் என்பது நீங்கள் உபயோகிக்கும் ஒரு பொருள் அல்ல. காலம் என்பதே நீங்கள் தான். ஆகவே காலத்துடன் உங்கள் குறிக்கோள் கலந்துவிட வேண்டும். அதன் பின் காலம் நகர்ந்தது தெரியாமலேயே காலம் உங்களை உருவாக்கியிருக்கும், நீங்கள் உங்களை உருவகித்தது போலவே//

அருமை :)

நிகழ்காலத்தில்... said...

நல்ல பகிர்வு

நன்றி நண்பரே

வாழ்த்துக்கள்

வி. நா. வெங்கடராமன். said...

''காலம் என்பது நீங்கள் உபயோகிக்கும் ஒரு பொருள் அல்ல. காலம் என்பதே நீங்கள் தான்."

Well Said, Mr. Jana.

Venkat Nagaraj
New Delhi

Mohan Kumar said...

பொட்டில் அறைந்தார் போல் கதை. அருமை அருமை ரெண்டே நாளில் 29 ஒட்டு வாங்கியிருக்கு பாருங்களேன்.. நானும் ஒட்டு போட்டாச்சு

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

KALYANARAMAN RAGHAVAN said...

//ஸோ, முன்னேற வேண்டும் என்று வந்திருக்கும் நீங்கள் பக்கத்தில் இருப்பவரின் முன்னேற்றம் குறித்து அறிந்து அதை நான் கேட்ட விதத்தில் உருப்படியாகப் பயன்படுத்தியிருக்கலாமே? //

கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு நேரத்தின் அருமை தெரியவேண்டுமென்பதற்காகவே காலதேவன் வேண்டுமென்றே பத்து நிமிடங்கள் தாமதமாக வந்து அதை உணர்த்திய விதம் அருமை. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பதிவு.

ரேகா ராகவன்.

KALYANARAMAN RAGHAVAN said...

//ஸோ, முன்னேற வேண்டும் என்று வந்திருக்கும் நீங்கள் பக்கத்தில் இருப்பவரின் முன்னேற்றம் குறித்து அறிந்து அதை நான் கேட்ட விதத்தில் உருப்படியாகப் பயன்படுத்தியிருக்கலாமே? //

கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு நேரத்தின் அருமை தெரியவேண்டுமென்பதற்காகவே காலதேவன் வேண்டுமென்றே பத்து நிமிடங்கள் தாமதமாக வந்து அதை உணர்த்திய விதம் அருமை. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பதிவு.

ரேகா ராகவன்.

சேவியர் said...

நல்ல கதை :) எதுக்குடா இதைப் படிச்சு நேரத்தை வீணாக்கறேன்னு கேக்காம இருந்தீங்களே.. அது வரைக்கும் சந்தோசம் :)

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!