சங்கர்லால்! இதை இங்கர்சால் பேரிலிருந்த மதிப்பில் வைத்ததாக அவர் குறிப்பிட்ட ஞாபகம். சங்கர்லால்தான் எங்கள் எல்லாருக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ். சங்கர்லால் மனைவி இந்திரா, டீ (தேனீர் என்றே குறிப்பிடுவார்) போட்டுத்தரும் மாது, உதவிப் பையன் கத்திரிக்காய் என்ற அந்தக் குடும்பமே எல்லாருக்கும் ஃபேவரிட்.
1950 களில் வந்த தொடர். ‘நிழல் மனிதன்’. பயங்கரமான திருடனான நிழல் மனிதனை எப்படியாவது பிடிக்க வேண்டிய ஆகக் கடின அஸைன்மெண்டை பிரபல துப்பறியும் நிபுணர் சங்கர்லாலுக்கு அளிக்கிறார் உதவிப் போலீஸ் கமிஷனர் வஹாப்.
ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த நபரிடம் ஒரு பெரியவர் வந்து, தான் ஒரு திருடன் என்றும் தன்னைப் பிடிக்க போலீஸ் வெளியே நிற்கிறது என்றும் சொல்கிறார்.. நீங்கதான் நிழல் மனிதன்னு எனக்குத் தெரியும், எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க, என்று அவர் கெஞ்ச அவன் பயப்படாதே சொல்கிறான்.
’பேசாமல் என் பின்னால் வா,’ என்றவன் ஒரு அட்டையை எடுத்து அதில் ‘நான்தான் நிழல்மனிதன்’ என்று எழுதி தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு வாசல் நோக்கி நடக்கிறான். போலீசும் மற்றவர்களும் அசந்து அப்படியே நிற்க, அவர் அவனுடன் நடந்து சென்று காரில் ஏறுகிறார். அடைக்கலமாகும் அந்தப் பெரியவர் அவனுடன் சேர்ந்துகொள்ள அவர்தானே சங்கர்லால் என்று ஆவல் சிந்திக் குவிந்த ஆயிரமாயிரம் கடிதங்கள்!
தமிழ்வாணன்! - சொல்லிக்கொண்டே இருக்கலாம்...
திருப்பங்களுடன் தொடர்களை அமைத்துச் செல்வதில், 100 கிராம் சுவாரசியத்துக்கு 150 கிராம் ஆவலை கலந்து கொடுப்பதில் நிகரில்லாதவர்.
கல்கண்டில் 1950களில் ’கண்ணம்மா’ என்றொரு தொடர் எழுதினாரே, அதில் ஒரு அத்தியாயத்தில் ’தொடரும்’ பகுதிக்கான அந்தப் பத்தி இன்னும் என் மனதில் ஒரு அபாரமான எழுத்தாக நிற்கிறது.
சிரமங்களை சந்தித்துவரும் ஏழைச் சிறுமியான கண்ணம்மா அந்த அத்தியாயத்தில் கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருப்பாள். இனி அந்தப் பாரா இப்படி செல்லும்: ‘...என்ன செய்வது என்று யோசித்தபடியே தன் தெருவுக்குள் நுழைந்தாள் கண்ணம்மா. தன் வீட்டுக்கு பக்கத்து வீடு தீப்பிடித்து எரிவதையும் கூச்சலும் பரபரப்புமாக சிலர் ஓடுவதையும்பார்த்தாள். எங்கும் புகை. அருகில் நெருங்க நெருங்கத்தான் எரிவது பக்கத்து வீடு அல்ல தன் வீடு என்று தெரிந்தது அவளுக்கு. (தொடரும்)
கல்கண்டில் முழு எழுத்துக்கும் பொறுப்பேற்ற நேரத்திலும் குமுதத்தில் இவரின் சித்திரக்கதைத் தொடர் வெளியாகி வாராவாரம் கலக்கிற்று. சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிய சிறுவன் வளர்ந்து, மாறுவேடத்தில் வந்து அந்த குடும்பத்துக்கே உதவும்போது அவன் உண்மையை சொல்லவேண்டுமே என்று வாசகர்கள் தவித்த தவிப்பு!
அவர் இயற் பெயரை ஊகிக்க எத்தனையோ வாசகர்கள் முயன்றார்கள். ‘உங்க பெயரைக் கண்டு பிடித்து விட்டேன். ராமசாமி தானே உங்கள் பெயர்? என்ற வாசகருக்கு தமாஷாக பதிலளித்தார்: ‘பாதி சரி..’
திடீரென விகடனில் அறிவிப்பு. ”தமிழ்வாணன் எழுதும் ’மணிமொழி நீ என்னை மறந்துவிடு!’ தொடர்கதை ஆரம்பம்..." பெற்ற வரவேற்பு கலக்கிற்று. மாயா ஓவியம் மனதில் இன்னும்!
எழுதாத ஜானர் இல்லை. இறங்காத துறை இல்லை. 'காதலிக்க வாங்க!' அவர் எடுத்த படம்தான்.
அவர் இன்ட்ரட்யூஸ் பண்ணிய 'இன்சுவை' 'தமிழ் பல்பொடி' எல்லாம் ஏக பாப்புலர் அப்போது...
தமிழ்வாணன்... மே 22. பிறந்த நாள்.

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!