Thursday, May 4, 2023

ஸ்லிம்முக்கு எதுகை...


ரண்மனையின் சம்பிரதாய கெடுபிடிகள் பிடிக்காத இளவரசி அவள். ரோம் வந்தபோது இரவில் வெளியே நடக்கும் கேளிக்கைகளை வேடிக்கை பார்க்க எட்டி குதித்து வெளியே வருகிறாள். லேட்டாக வேலை செய்த தூக்க மாத்திரைகளால் நடு ரோட்டில் குழம்ப, சந்திக்கும் ரிப்போர்ட்டர் கிரிகரி பெக், போதை என்று நினைத்து அந்தப் பேதையை பத்திரமாக தன் அறைக்கு அழைத்து சென்றதினால், இளவரசி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை கவர் செய்வதில் கோட்டை விடுகிறார். அவளேதான் அது என்றறிந்ததும், தனிப் பேட்டியே வாங்கி தருகிறேன் பார் என்று பத்திரிகை ஆசிரியரிடம் சவால் விட்டவர் ஊரைச் சுற்றி காட்டுகிறேன் என்று அவளை அழைத்துப்போகிறார். அவர்கள் அடித்த லூட்டிகளை உடன் அழைத்துச் சென்ற நண்பனைக் கொண்டு போட்டோவும் எடுத்து விடுகிறார். ஆனால் ஒரு பிரியம் பிறக்கவே கட்டுரையைப் பத்திரிகைக்குத் தர மறுக்கிறார். காதல் மலர்ந்தாலும் கடமை அழைக்க 'இளவரசி'க்கு திரும்புகிறாள் அவளும். இளவரசியின் ஃபேர்வெல் விழாவில் நண்பன் அந்த போட்டோக்களை அவளுக்குப் பரிசளிக்க, பை சொல்லி, தன் தனிமைக்கு திரும்புகிறார் ரிப்போர்ட்டர் பெக்.

படங்களுக்கெல்லாம் படமான ‘Roman Holiday’ கதை அது. ஆமாம், அதையொட்டி நாலைந்து படங்கள் வந்துவிட்டன தமிழில் மட்டுமே.
இளவரசியாக Audrey Hepburn.. இன்று பிறந்தநாள்!
ஸ்லிம்முக்கு எதுகை இவர். பிளஸ் அந்த துரு துரு கண்கள்! ஒரு லுக் விட்டார், அவ்வளவுதான், அந்தப் பார்வைக்கு ஆட்ரே ஹெபர்ன் லுக் என்றே பேர் வந்திட்டது!
கிரிகரி பெக் அப்போ டாப் ஸ்டார். ஷூட்டிங் தொடங்கி நடக்கும் போதே புதுமுகமான ஆட்ரே பெயரை தனக்கு இணையாக போட சொல்லிவிட்டார். பதறிய ஏஜென்டிடம், ‘ஆஸ்கார் வாங்கப் போகிறாள் பார்!’ என்றார். அப்படியே வாங்கினார் ஆட்ரே.
கடைசி காட்சியில் அழுகை வரவில்லை அவருக்கு. டைரக்டர் வில்லியம் வைலர்(Ben Hur) போலியாகப் போட்ட அதட்டலில் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
Wait, அந்த ‘Wait Until Dark’ பத்தி சொல்லிடறேன்... அவளுக்கு கண் தெரியாது. தனியே இருக்கிறாள் வீட்டில். அங்கே கொள்ளையடிக்க மூன்று பேர் நுழைகிறார்கள். எப்படி தப்பிக்கிறாள்? வினாடிக்கு வினாடி த்ரில்! நுனி அல்ல, சீட்டுக்கு வெளியேவே வரவழைத்துவிடும் சஸ்பென்ஸ்! ஆஸ்கார் நாமினேஷன் வாங்குகிற அளவு அபாரமாக நடித்தார் ஆட்ரே.
அப்புறம் My Fair Lady. ப்ச்! வேறெதுவும் சொல்ல வேண்டாம். மனங்களை வாரி முடிந்து கொண்ட அந்த பூக்காரியை யாரால் மறக்க முடியும்?
ஜஸ்ட் 31 படங்கள்தான். முக்கிய கதாநாயகர்கள். பிரபல டைரக்டர்கள். ஏராளம் அவார்டுகள். யார் செய்வார்கள், உச்சத்தில் இருக்கும்போதே விலகிக் கொண்டதும், சொச்ச வருடங்கள் லத்தீன் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள ஏழைக் குழந்தைகளுக்காக உழைத்ததும்.. கான்சர் வாரிக்கொண்டது வரை.
பிரபல பிரிட்டிஷ் பத்திரிகை நடத்திய உலகின் கண் கவர் பெண்களின் போட்டியில் நம்பர் ஒன்னாக வந்தார் என்றால் மற்றொரு போட்டியில் உலகின் இயற்கையான அழகிகளில் முதலாவதாக! 50 கிலோ தாஜ்மஹால் என்றிவரை வர்ணிக்க முடியாது. ஏன்னா 47 கிலோ தாண்டியதேயில்லை வாழ்நாளில், தான் வைராக்கியம் வைத்திருந்தபடியே.
சினிமாவால் பலரைப் பல்லைக் காட்ட வைத்திராவிட்டால் பல் ஆஸ்பத்திரியில் காட்ட வைத்திருப்பார், ஆம், முதலில் பல் டாக்டர் உதவியாளராகப் பயின்றிருந்தார்.
‘Cleopatra’ வுக்கு முதலில் யோசிக்கப்பட்டவர்.. ‘The Exorcist’ படத்தில் நடிக்கவில்லை, மகன்களுடன் இருக்கணும் என்று ரோமில் படப்பிடிப்பு வைக்கக் கேட்டதற்கு அவர்கள் சம்மதிக்காததால்.
இவர் பிரபலத்துக்கு ஒரு சாம்பிள், ‘Breakfast At Tiffany’s’ படத்தில் அணிந்த உடை சுமார் மில்லியன் டாலருக்கு ஏலம் போயிற்று.
Quotes? மூன்றும் முத்தானவை...
“அவங்க நடிக்கச் சொல்லும்போது எனக்கு நடிக்கத் தெரியலே. அவங்க பாடச் சொல்லும்போது எனக்குப் பாடத் தெரியலே. அவங்க ஆடச் சொல்லும் போது எனக்கு ஆடத் தெரியலே. அப்புறம் ஒரு ஆவேசத்தோட எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.”
“ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் வாழ்க்கையை அனுபவிப்பதுதான். சந்தோஷமாக இருப்பது! அது ஒண்ணுதான் விஷயம்!”
“எப்பவாவது உங்களுக்கு ஒரு உதவிக்கரம் தேவைப்பட்டால் அது உங்கள் தோளின் அற்றத்தில் இருக்கிறது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வளர்ந்து வரும்போது உங்களுக்கு இன்னொரு கையும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். முதல் கரம் உங்களுக்கு உதவ. இரண்டாவது மற்றவர்களுக்கு உதவ.”

>><<>><<

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!