Thursday, May 18, 2023

200 பிரதி....


உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் ஜார்ஜின் லட்சியம். ஆனால் தன் ஒரே கிராமத்தை விட்டு போக முடியாத நிலை. அப்பா விட்டுச்சென்ற வங்கியை நடத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஊரை விழுங்கி ஏப்பம் விடக் காத்திருக்கும் வட்டி கடைக்காரன் பாட்டர் கைக்குப் போய்விடும். பொறுப்பை ஏற்கிறான். என்ன துரதிர்ஷ்டம், பேங்க் பணத்தை அவர் மாமா தவறவிட அது பாட்டர் கைக்கு போய்விடுகிறது. பணத்தை வைத்தாக வேண்டும் பேங்கில், இல்லாவிடில் போலீஸ்தான்.

செத்துப் போவதுதான் ஒரே வழி என நினைக்கிறான். குடும்பமும் தன் இன்சூரன்ஸ் பணத்தை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் என்று பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்கிறான். அவனை அழைத்துப் போக வந்திருக்கும் தேவதை க்ளாரென்ஸ், அவன் உலகில் இல்லாவிடில் என்னவெல்லாம் ஆகியிருக்கும், ஆகும் என்று அவனுக்கு வரிசையாகக் காட்டுகிறது. எல்லாம் பாட்டர் கைக்குப் போய் அந்தக் கிராமமே குட்டிச் சுவராகிறது. அவன் குடும்பம் அல்லாடுகிறது. எல்லாம் பார்த்தவன் நான் வாழணும் வாழணும் என்று கத்துகிறான், பாலத்தின் மேலிருந்து. ஓடிவரும் போலீஸ் நண்பர் அவன் உதட்டிலிருக்கும் பழைய வடுவைக் காட்ட இன்னும் உயிரோடிருப்பதை அறிந்து வீட்டுக்கு ஓடுகிறான். ஊர்மக்கள் அனைவருமே அவன் வீட்டுக்கு வந்திருக்கின்றனர் அவரவருக்கு முடிந்த தொகையுடன், அவனைக் காப்பாற்ற. வாழ்க்கைக்குத் திரும்புகிறான். தேவதை தன் சிறகுகளை, பதவி உயர்வு, பெறுகிறது.
உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றான ‘It’s a Wonderful Life (1946)
தயாரித்து இயக்கியவர் உலகப் புகழ் பெற்ற இத்தாலிய அமெரிக்க இயக்குநர்...
Frank Capra… இன்று பிறந்த நாள்!
ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை பெஸ்ட் டைரக்டர் ஆஸ்கார் வாங்கியவர். (‘It Happened One Night’, ‘Mr Deeds Goes to Town’, ‘You Can’t Take It with You.’)
கேப்ராவுக்குப் பிடித்த படமும் இதுதான். ஜார்ஜ் பாத்திரத்தில் வெளுத்து வாங்கியவர், அவர் தான் நடிக்க வேண்டுமென்று கேப்ரா விரும்பிய, ஜேம்ஸ் ஸ்டீவர்ட்.
இந்தக் கதையைத் தழுவி தமிழிலும் ஒரு படம் வந்தது 1954 இல். ‘முதல் தேதி.’ அந்த அசத்தலான ரோலில் உருக்கமான நடிப்பைத் தந்தவர்.. வேறு யார், சிவாஜிதான்.
இந்த 135 நிமிடப் படத்துக்கு உபயோகித்த ஃபிலிம் சுருள் 3,50,000 அடி. போட்ட கிராமத்து ஸெட் பரப்பு 89 ஏக்கர்.
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் No.1 All Time Inspirational Movie யாகத் தேர்ந்தெடுத்த இந்தப் படத்தைக் கதையாகமுதலில் எழுதிய Philip Stern, யாருமே பப்ளிஷ் செய்யத் தயாராக இல்லாததால் சின்ன புக் லெட் ஆக 200 பிரதி அடித்து கிறிஸ்துமஸ் வாழ்த்தாக அனுப்பி வைத்தாராம் நண்பர்களுக்கு.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!