Saturday, May 13, 2023

அம்மாவே முதல் குரு...


எட்டு வயதிலேயே பாட்டுப் போட்டியில். தங்க மெடலை எட்டிவிட்டார் என்பதும், 14 வயதிலேயே தனிக் கச்சேரி நடத்தி விட்டார் என்பதும் நாம் தெரிந்துகொண்டு பிரமிக்கும் விஷயம். ஆனால் எப்படி அவர் பாட்டைக் கேட்டதும் ஒரு உற்சாகம் மனதில் தோன்றுகிறது என்பது தெரியாமலேயே பிரமிக்கும் விஷயம்.

அருணா சாய்ராம். May 13. பிறந்த நாள்!
இசைக் குடும்பம். அம்மாவே முதல் குரு. அம்மா ஆலத்தூர் சகோதரர்களின் சிஷ்யை. அப்பா வீட்டில் அழைத்து வராத கலைஞர் இல்லை. அவர்களில் சங்கீத கலாநிதி பிருந்தா அறிமுகமாக, அவரிடம் இசை பயின்றார். குரலில் உணர்வையும் புதுமையையும் கொண்டு வர துணை புரிந்தவர் ஒரு ஜெர்மானியர். (Eugene Rabine)
லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடக்கும் BBC Proms, அப்புறம் பாரிஸ், நியூயார்க் என்று உலக அளவில் ஒலித்த பாடல்கள் இவருடையவை. தென்னிந்திய கர்நாடக சங்கீதத்தின் சுகந்தம் உலக அளவில் வீச இவரும் காரணம். சங்கீத கலாநிதி பட்டம், பத்மஶ்ரீ விருது...
ஏற்றமும் இறக்கமும் அந்த கணீர்க் குரலில் இசைந்து வரும் கம்பீரம்! கனிவும் உருக்கமும் அந்தக் காந்தக் குரலில் கலந்து வரும் பிரவாகம்!
"ஹிமகிரி தனயே ஹே..." என்று தொடங்கும் போது மனசை அப்படியே இழுத்துச் செல்லும்.
'ஸ்வாகதம் கிருஷ்ணா..' பாடலில் 'மதுரா புரி...' 'மது ராபுரி...' என்று பாடுகையில் அவர் அழைத்துச் செல்லும் இரண்டு அழகிய மதுராபுரியில் எதில் திளைக்க?
'வெங்கடரமணனே பாரோ..' பாடலும் சரி 'தசரத ராம கோவிந்தா..' பாடலும் சரி சரியான பிரார்த்தனை மனநிலைக்கு அழைத்துச் செல்லும்.
"எனகுவானே ரங்கா... நினகுவானே..." பாடும் போதும் காதருகே புஷ்பக விமானம் புறப்படுகிறாற்போல இருக்கிறதென்றால் "லலிதலவங்க லதா பரிசீலன..." பாடும்போது அந்த விமானம் அழகாய் தரையிறங்குகிற மாதிரி...
'எப்படி பாடினரோ?' பாடலை மற்றவர்கள் எப்படி பாடினரோ, இவர் பாடும்போது இப்படியும் பாடலாமோ கனிவாக என்று..
'இகோ நம்ம ஸ்வாமி... 'தருவது ஒருவித இதம் என்றால், மறவாமல் கேட்பது, 'பிறவா வரம் தாரும் பெம்மானே..'
கேட்க மனம் சிறகடிக்கும் மற்றொரு பாடல் 'காக்கை சிறகினிலே...' இவருக்குப் பிடித்த பிருந்தாவன சாரங்காவாயிற்றே அது?
"பக்கத்து வீட்டு பெண்ணை அழைப்பான், முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கு இழுப்பான்.. எனக்கது தெரியாதென்றால்..., நெக்குருக கிள்ளி விட்டு..., அவள் விக்கி விக்கி அழும் போது..., இது தாண்டி முகாரி என்பான்!" என்று அவர் பாடும்போது ('விஷமக்காரன் கண்ணன்..' பாட்டில்) அந்த நாட்டுப்புறப் பாடலின் முழு அழகும் முன்னால் வந்து நிற்கும்.
சிகரமாக.. எல்லார் காதுகளிலும் நர்த்தனமாடும் அவரது 'காளிங்க நர்த்தன தில்லானா...'
'எப்போதும் இசையிலேயே ஆழ்ந்திருக்க விரும்புகிறேன்.' என்னும் அவர் சொல்வது, 'இலக்கணம் என்று இருந்தாலும் ராகம் பெரும்பாலும் உணர்வு பூர்வமானது. நம்பிக்கையுடனும் நேச பாவத்துடனும் பாடும்போது அது கேட்பவரை சென்றடைகிறது. கேட்பவர் அந்த உணர்வை திருப்பி அனுப்ப, பல முறைஅங்கும் இங்கும் பரிமாறப்பட்டு, அது நம்மை மேம்படுத்தும் அனுபவமாகிறது. அதில் எல்லாவற்றையும் நாம் மறக்கிறோம்!'

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!