Wednesday, August 5, 2020

கடவுள் தந்த குரல்...

அண்ணனுக்கு பெண்களைக் கண்டாலே ஆகாது. தம்பிகளுக்கு கண்டிப்பான உத்தரவு: பெண்களோடு பேசக் கூடாது, பழகக் கூடாது. அவர்களுடைய வொர்க் ஷாப்பில் அர்த்தராத்திரியில் கார் ரிப்பேராகி கதவைத் தட்டுகிறார் மதுபாலா. தம்பி மட்டும் தனியாக. மனசு கேட்கலை. காரை சரி பண்ணி கொடுத்து அனுப்புகிறான். அழகின் வீச்சில் காசு வாங்க மறந்து விடுகிறான். சொப்பனத்தில் அவள் வந்து காதல் பல்லவி பாட, அவனோ “பாஞ்சு ருபைய்ய்ய்யா... பாரஹ் அணா..” என்று தரவேண்டிய அஞ்சே முக்கால் ரூபாய் பாக்கியை படுகிறான் சரணமாக.
‘Chalti Ka Naam Gadi’ என்ற அந்த 1954 படம் முழுக்க முழுக்க குபீர் காமெடி. தம்பியாக நடித்தவரும் பாடியவரும் கிஷோர் குமார்.
Kishore Kumar... Aug. 4. பிறந்த நாள்.
நடித்துக் கலக்கியது பல படங்கள் என்றால் பாடிக் கலக்கியது பல ஸ்கொயர் படங்கள்! அந்த Delicately distinct voice! கடவுளின் கொடை என்று சொல்வார்கள் அதை. எப்படி வாய்க்கப் பெற்றது என்பதற்கு அவர் அண்ணன் பிரபல நடிகர் அசோக் குமார் சொன்னது... சின்ன வயசில் ஒரு விபத்தில் கிஷோரின் பாதத்தில் அடி பட்டபோது ஒரு மாதமாக அழுதுகொண்டே இருந்தாராம். அதன் நல் விளைவு இது என்று.
வீட்டில் சும்மா K.S.Saigal பாட்டை அவர் போலப் பாடிக் கொண்டிருந்தார். அசோக்குமாரை பார்க்க வந்த S.D.பர்மன் காதில் விழ, நம் காதுக்கு வந்தது. முதல் பாடல் பாடியது தேவ் ஆனந்துக்குத் தான். படம் ‘Ziddi’ (1948).
ஆரம்பத்தில் அவர் தன்னைத் தவிர தேவ் ஆனந்துக்கு மட்டுமே பாடுவது என்றிருந்தாராம். ‘அடுத்த வீட்டுப் பெண்’ இந்தியில் வந்தது. அதில் நடித்தபோது ‘படத்தில்’ கதைப்படி அவர் சுனில் தத் என்ற நடிகருக்கு குரல் கொடுக்க வேண்டி வந்தது. அப்புறம்தான் ராஜேஷ் கன்னாவுக்கு ‘ஆராதனா’வில் பாடி அது சூபர் ஹிட் ஆகி... அனைத்து ஹீரோவுக்கும் அவர் குரல் ஓர் அணிகலன் ஆகியது ஹிஸ்டரி....
‘ஆராதனா’வில் பாடினாரோ இல்லையோ ஆராலும் அசைக்க முடியாத நம்பர் ஒன் இடத்தில் அடுத்த பதினேழு வருடம். 1970, 80-களின் ஹீரோஸ் வாய்ஸ் இவர்தான் என்றாயிற்று. மொத்த 2678 பாடல்களில், அதிகம் பாடியது ராஜேஷ் கன்னாவுக்கே (245). வெளிவராத அவர் பாடல் ஒன்று பதினைந்தரை லட்சத்துக்கு விற்றது என்றால் ஆச்சரியமில்லைதான்.
இத்தனைக்கும் முறைப்படி எந்த சங்கீதப் பயிற்சியும் எடுத்துக் கொள்ளாதவர். கற்றுக் கொண்டதெல்லாம் பர்மனிடம்தான். ஸைகால் மாதிரி பாடியவர், பின்னர் தனக்கொரு ஸ்டைலை ஏற்படுத்திக் கொண்டார். இன்று வரை அலுக்காமல் நாம் கேட்கும் அந்த கிஷோர் ஸ்டைல். தம்பியிடம் கற்றுக் கொண்ட yodelling தனி. ஆதர்ஷ நடிகர் Danny Kaye.
ஆரம்பத்தில் கிஷோருக்கே ஒன்றிரண்டு பாடல்களுக்கு ரஃபி குரல் கொடுத்திருக்கிறார் என்றால் ஆச்சரியம்.. '' 1959 படத்தில் சங்கர் ஜெய்கிஷன் இசையில் "Ajab Hai Daastan Teri..." பாடல் ஒன்று.
பாடிய பாடல்களில் சூபர் ஹிட் என்றால், ’என் சொப்பனத்தின் ராணி நீ எப்ப வருவே?’, அதாங்க, ”Mere Sapnon Ki Rani Kab Aayegi Tu..”, அதைத்தான் சொல்லுவாங்க. ஆனால் ’Mugaddar Ka Sikandar’-இல், லதா மங்கேஷ்கர் ”Salaam-E-Ishq Meri Jaan..” என்று சில வரி பாட, ‘மீதிப் பாடலை நான் பாடுகிறேன்..’ என்று ஆரம்பித்து, 15 வரி இடைவிடாமல் பாடுவார் பாருங்க கிஷோர், அதில் தெரியும் அந்தக் குரலுக்கேயான தனி இனிமையும் காந்தமும்!
அஷ்டாவதானி! நடிகர், பாடகர், டைரக்டர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர்.
‘The Proud Rebel’ படத்தைத் தழுவி இவர் எடுத்த ‘Door Gagan ki Chaon Mein’ (அதில் Allan Ladd தன் மகனோடு நடித்த மாதிரி இதில் தன் மகன் Amit Kumar உடன்.) தோல்வி அடைந்தாலும், சில மாறுதல்களுடன் 'ராமு'வாக வந்தபோது வெற்றி கண்டது.
மிகச் சிறந்த இசை அமைப்பாளரும் கூட. சான்று வேண்டுமா? கேட்டுப்பாருங்கள். சுலக்‌ஷனாவுடன் இவர் பாடிய “Bekaraar Dil....” படத்தில் பாடுவது அண்ணன். Haunting melody.
தேவ் ஆனந்துக்கு மட்டுமல்ல, ‘நாங்க ரெண்டு பேர்; ஆனா ஒரே வாய்ஸ்!’ என்று அமிதாப் சொல்லும் அளவுக்கு அவருக்கும் பொருத்தமா பாடுவார். சரி, அவருக்கு மிகப் பிடித்த அவர் பாட்டு? ‘Mili’ யில் வரும் “Badi Sooni Sooni Hai..”
தனிமை விரும்பி. தவிர்த்துவிடுவார் பார்ட்டிகளை. காசு பாக்கி வைக்கிறவங்களை கண்டாலே பிடிக்காது. வீட்டின் முன்னால் ‘Beware of Kishore’ என்று ஒரு முறை எழுதி வைக்கிற அளவுக்கு தமாஷ் பிரியர். வீட்டு மரங்களுக்கு பெயரிட்டுப் பேசும் அளவுக்கு இயற்கை நேசர். கஞ்சூஸ், கறார் என்பார்கள் தெரியாமல். சத்யஜித்ரே படத்தில் பாடியபோது காசு வாங்காததோடு படத்துக்கும் உதவினார்.
எனக்குப் பிடித்த அவர் பாடல்களில் நாலைந்தை சொல்லலாமென்றால் செலெக்ட் செய்ய நாலைந்து நாள் வேண்டியிருக்கே...

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!