Wednesday, March 4, 2015

கவனிக்க வேண்டியது...


அன்புடன் ஒரு நிமிடம் - 76

ஒரே அறையில்தான் இருந்தார்கள் என்றாலும்ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டு....

"சந்தர்ப்பம் சரியில்லை போல... அப்ப நான் இன்னொரு நாள் வர்றேன்." திரும்ப யத்தனித்தார் ராகவ்.

யாழினியும் சரி கிஷோரும் சரி ஒரே நேரத்தில் திரும்பினார்கள். "வாங்க, வாங்க!"

"சொல்லுங்க என்ன பிரசினை? நானும் பார்க்கிறேன் நாலு நாளா... போனில் பேசினால் உன்குரலும் சரியில்லை அவள் குரலும்!"

"பின்னே நீங்களே சொல்லுங்க. " யாழினியே ஆரம்பித்தாள்.

"இருங்க மாமா, இவள் சரியா அப்படியே சொல்ல மாட்டாள். நானே சொல்றேன். இந்த டைனிங்டேபிளைக் கொஞ்சம் பாருங்க. பெரிசா ஏதும் டேமேஜ் தெரியுதா?"

கண்ணாடி பதித்த டேபிளை உற்றுப் பார்த்துவிட்டு, "சின்னதா ஒரு க்ராக் தெரியுது. எப்படி நேர்ந்தது?"

"டம்ளரைக் கொஞ்சம் வேகமா வெச்சிட்டேன் அவ்வளவுதான். எப்பவும் ஒரே மாதிரி இருக்குமா? லேசா லைன் விழுந்துடிச்சு. அதுக்குப்போய் அந்தக் கத்தல் கத்தறா."

"எத்தனை அழகான டேபிள்! இப்படி கொஞ்சம் கூட கவனமில்லாம நடந்துக்கிட்டா கத்தமாட்டாங்களா?" என்றாள் அவள்.

"அப்ப இதே போல அவள் செய்த காரியத்துக்கு நான் கத்தினா மட்டும் ஏன் கோபம் பொத்துட்டுவருது?"

"அதென்ன காரியம்?"

"தோட்டத்தில வேப்ப மரத்துக்குக் கீழே ஒரு சிமண்ட் செயர், இள மஞ்சள் கலரில பெயிண்ட்அடிச்சு போட்டிருக்கு இல்லையா, அதில முந்தாநேத்து இவள் ஒரு பாத்திரத்தால இடிச்சதில அதுகை ஒடிஞ்சு போய்... ரிப்பேர் பார்த்த பிறகும் இளிச்சிட்டிருக்கு. நான் உட்கார்றது அது. பார்க்கஎனக்கு எத்தனை கோபம் வரும்?" அவன் அவரைப் பின்னால் அழைத்துப் போய்க் காட்டினான்.பார்த்தார். யோசனையிலாழ்ந்தார் .

"என்ன இங்கே வந்தது சரிதானான்னு யோசிக்கிறீங்களாக்கும்?"

அதுக்கெல்லாம் அயர்கிறவர் அல்லவே அவர்? கவனிக்க வேண்டிய பாயிண்ட் எங்கேஅமர்ந்திருக்கிறது என்று உணர்ந்தார். அதை சரியாக உணர்த்திவிட்டால் வெற்றி தான் அவருக்கு.

" இந்த சிமெண்டு செயர் நீ உட்கார்றதா? எப்ப, தினம் காலையில உட்கார்ந்து பேப்பர்படிப்பாயாக்கும்?"

"அதெல்லாம் இல்லே, எப்பாவாவது தோணினால் போய் உட்காருவது தான்."

"ஆனால் அந்த டைனிங் டேபிள் நீங்க ரெண்டு பேரும் தினம் நாலு நேரம் உட்காருவது. அதனால் சின்னதா இருந்தாலும் இது நம்மை அதிகம் பாதிப்பது. அதனால் அவள் வருத்தம் ஆறுவதற்குகொஞ்சம் அதிகம் அவகாசம் கொடுக்க வேண்டியதுதான்," என்றவர் காதோடு சொன்னார், "ஒருதடவைக்கு நாலு தடவை ஸாரி சொன்னாலும் ஒண்ணும் ஓவராகிவிடாது."

புரிந்து கொண்டு தலையாட்ட அவர் புன்னகைத்தார்.
(’அமுதம்’  மே 2014 இதழில் வெளியானது)
><><
(படம் - நன்றி: கூகிள்)

7 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நல்ல கதை..

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாக உணர்த்தி விட்டார்...

தி.தமிழ் இளங்கோ said...

கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஈகோ. இதுவே இருவருக்கும் இடையே உரசல் ஏற்படக் காரணம் என்பதனை அழகாகச் சொன்னீர்கள்.
த.ம.2

ராமலக்ஷ்மி said...

ஈகோவை விட்டொழித்தால்.. எல்லாம் நலமே:)! அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

மிக அருமையான கதை! மிக எளிதாகப் புரிய வைத்துவிட்டாரா இல்லை கிஷோர் புரிந்து கொண்டுவிட்டானோ...!! தொடர்கின்றோம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சின்னதா இருந்தாலும் இது நம்மை அதிகம் பாதிப்பது. அதனால் அவள் வருத்தம் ஆறுவதற்குகொஞ்சம் அதிகம் அவகாசம் கொடுக்க வேண்டியதுதான்,"//

சரியாகவே ஆராய்ந்து சொல்லியுள்ளார்.

//(’அமுதம்’ மே 2014 இதழில் வெளியானது)//

பாராட்டுக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!