Wednesday, May 1, 2013

எண்ணெயும் துருப் பிடிக்கும்?...




அன்புடன் ஒரு நிமிடம் 32.  

எண்ணெயும் துருப் பிடிக்கும்?.
  
ன் இப்படி இருக்கார்னே தெரியலே. ரொம்ப அசதியா காட்சியளிக்கிறாரு.. என்று ஆரம்பித்தார் சரவணன்.

அப்பாவுக்கு இப்ப என்ன வயசு? சுகர், பிரஷர்னு ஏதாவது?” கேட்டார் சாத்வீகன்.

எழுபது வயசுக்கு நல்ல ஆரோக்கியமாவே இருக்காரு. ரெண்டே மாத்திரையிலே சரியாகி விடுகிற தலைவலி தவிர எந்த கம்ப்ளெய்ண்டும் கிடையாது. மனசுதான் சோர்ந்து போய்... அது முகத்தில தெரியுது.

தவிர, வாயால் ஏதும் சொன்னாரா?”

ஐயோ, அவர் ஒண்ணுமே சொல்லலே. நானாய்த்தான் முகத்தைப் பார்த்து ஊகிச்சு...  ரொம்ப விசனப் படறோம்!

முகத்தில என்ன அப்படி தெரியுது?”

தெரியலே, அதான்!

தெரியலையா?”

அதாவது என்ன தெரியணுமோ அது தெரியலேன்னு சொல்ல வந்தேன். ரிடயரானதிலேர்ந்து வீட்டிலே தான் இருக்கிறார். நல்லாவே பார்த்துக்கறோம். வீட்டிலே இருக்கிற மூணு அறையில் ஒண்ணை அவருக்கு ஒதுக்கியிருக்கோம். நல்ல இசை ஞானம் உண்டு. கச்சேரியெல்லாம் கேட்க இடைஞ்சல் இல்லாம இருக்க அந்த அறையிலேயே ஒரு டி.வி. வைத்துக் கொடுத்திருக்கேன். நிறையப் படிக்கிறவர்.  இலக்கிய ஈடுபாடு ரொம்பவே. அதனால புத்தகங்களை வைக்க ரெண்டு ஷெல்ஃப். போனமாசம் ஒரு லேப்டாப் வாங்கிக் கொடுத்தேன். பதார்த்தங்களை ரசிச்சு சாப்பிடுவார். அவருக்குப் பிடிச்ச அயிட்டம் ஒண்ணு தினம் தவறாம சமையல்லே வந்துடும்...

அப்போது...

கதவு கிறீச்சிட்டது. காபியுடன் உள்ளே நுழைந்தான் அபிஜித்.

அடடா, இன்னிக்கும் மறந்து போனேனே! என்றார் சாத்வீகன்.

என்னது?”

வாசல் கதவுக்கு எண்ணெய் போடணும்னுதான்! இதோ பார், ரொம்பக் கிட்டத்திலே ஷெல்பில தான் வெச்சிருக்கேன் இதுக்காகவேன்னு கிளீனிங் ஆயில்.  ஆனா மறந்து மறந்து போகுது! அப்படியே விட்டால் கதவின் அசைகள்  துருப் பிடிச்சுப் போயிடுமே?”

எண்ணெயும்கூட துருப் பிடிச்சுப் போயிடும்! சிரித்தார் சரவணன்.
எழுந்து போய் எண்ணெய் போட்டுவிட்டு வந்த இவர் விஷயத்தைத் தொடர்ந்தார். 

இவ்வளவு நல்லா கவனிச்ச பின்னும் அவர் திருப்தியா இல்லேன்னா நீ ஏதும் செய்யறதுக்கு இல்லேண்ணுதான் தோணுது, ஒண்ணே ஒண்ணைத் தவிர.
என்ன அது? ஆர்வமானார் சரவணன். அவர் சொல்லும் அந்த ஒண்ணு தான் விடை என்றறிவார்.

நீ ஒரு பிஸினஸ் பண்றே. உன் மனைவி அட்வகேட்டா இருக்கிறாள். உன் தம்பிகள் ரெண்டு பேரும் சாப்ட்வேர் துறையில். மைத்துனிகள் கல்லூரிப் பேராசிரியர்கள். இப்படி ஆறு அறிவு ஜீவிகள் வீட்டை சுத்தி சுத்தி வர்றீங்க. ஆனா இலக்கியத்திலேர்ந்து அறிவியல் வரை தெரிந்த இன்னோர் அறிவு ஜீவியும் அந்த வீட்டிலே இருக்கிறார்னு தோணலே உங்க யாருக்கும்..

என்ன சொல்ல வருகிறார்? அதான் சொன்னேனே, நாங்க எல்லாருமே அவருடைய அறிவு பூர்வமான தேடலுக்கு தேவையான எல்லாத்தையுமே வாங்கித் தர்றோமே?”

பெற்றுக் கொள்ள மட்டுமா துடிக்கும் அறிவோர் மனம்? அள்ளிக் கொடுக்கவும் அல்லவா?  நீங்க ஈடுபடுகிற எத்தனையோ விஷயங்களில் நாலைந்தையாவது அவரிடம் ரெண்டு நிமிஷம் பேசலாமே? அதைப்பத்தி அவர் என்ன சொல்றார்னு... அதன்படி செய்ய வேண்டாம், அதை அவர் எதிர்பார்க்க மாட்டார், ஆனால் கேட்கலாமில்லையா? ஏதோ நமக்குத் தெரிஞ்சதை நம்ம பிள்ளைகளுக்கு சொன்னோம்கிற ஒரு திருப்தி ஏற்படுமில்லையா? அதில் பிறக்கிற சந்தோஷம், அது அவர் முகத்தில தெரியும்தானே?”

கண்டிப்பா! என்றார் சரவணன்.

('அமுதம்' ஜனவரி 2013 இதழில் வெளியானது.)
<<>> 
(படம் - நன்றி: கூகிள்)   

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான கதை. நல்ல தலைப்பு. சிறப்பான முடிவு. பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் (+1) இணைத்தாயிற்று... நன்றி...

கே.முருகபூபதி இலக்கியவட்டம் said...

அருமை...அருமை...

ப.கந்தசாமி said...

உண்மையான நிலை.

கீதமஞ்சரி said...

எவ்வளவு அழகான மனித மனங்களைப் பிரதிபலிக்கிறீங்க. அதுவும் முதிய வயதில் என்னதான் வசதிகள் இருந்தாலும் அதைவிடவும் அவர்களுக்குத் தேவை அன்பான பார்வையும் ஆறுதலான பேச்சும் என்பதை ஒரு சின்ன கதையின் மூலம் அற்புதமா தெளிவா உணர்த்தியிருக்கீங்க. மனம் நிறைந்த பாராட்டுகள் ஜனா சார்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை அய்யா. பேசிப் பழக வேண்டும்

Anonymous said...

ippadithan ellorum vazhgirom..arumaiyana pagirvu

கோமதி அரசு said...

ஏதோ நமக்குத் தெரிஞ்சதை நம்ம பிள்ளைகளுக்கு சொன்னோம்கிற ஒரு திருப்தி ஏற்படுமில்லையா?//
நிச்சயம்.

தினம் கொஞ்சம் கலந்துரையாடல் இல்லை என்றால் எவ்வளவு வருத்தம் வரும் என்று அனுபவித்து பார்த்தவர்களுக்கு தெரியும்.
மிகவும் அழகய் சாத்வீகன் குடும்பக்கலையை கற்பிக்கிறார்.
வாழ்த்துக்கள்.

ஹ ர ணி said...

அன்புள்ள ஜனா..

உண்மைதான் ஜனா. நாமாக ஒரு முடிவுசெய்து கொள்கிறோம். மற்றவர்கள் எண்ணங்களை உணர்வதில்லைதான். பேசிப் பழகுதல் என்பது பல சிக்கல்களைத் தீர்ப்பவை. எதார்த்தமான கதை. எளிமையான உபதேசம். வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

அருமையான கதை. சாத்வீகன் எவ்வளவு அழகாக விஷயங்களை கையாள்கிறார்!!!!

வெங்கட் நாகராஜ் said...

அருமை......

ரிஷபன் said...

ஏதோ நமக்குத் தெரிஞ்சதை நம்ம பிள்ளைகளுக்கு சொன்னோம்கிற ஒரு திருப்தி ஏற்படுமில்லையா? அதில் பிறக்கிற சந்தோஷம், அது அவர் முகத்தில தெரியும்தானே?”

உண்மைதான் .. அவர்களோடு அமர்ந்து பேசினாலே அவர்களூக்கு உண்டாகும் ஆனந்தம்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!