Sunday, April 14, 2013

சந்திக்க வேண்டியவர்கள்...




அன்புடன் ஒரு நிமிடம் 30 

சந்திக்க வேண்டியவர்கள்...

ன்ன கதிரேசன், ரெண்டு வாரமா ஆளையே காணோம் இந்தப் பக்கம்?” இயல்பாகக் கேட்டார் சாத்வீகன்.
ஆமா. கொஞ்சம் பிஸி. பையன் எஞ்சினீயரிங் முடிச்சிட்டு வந்திருந்தான். எம்.என்.ஸி. கம்பெனியில் நாற்பதுக்கு வேலை காம்பஸிலேயே கிடைச்சிட்டது. அதான் அவனுக்கு வேண்டிய எல்லா திங்க்ஸையும் ரெடி பண்றது, அது இதுன்னு நாள் ஓடிட்டது. முந்தாநாள்தான் கிளம்பினான் சென்னைக்கு...
அப்படியா? எத்தனை நாள் இருந்தான் ஊரில்?”
பத்தே நாள்தான்.
அப்ப நேரம் கொஞ்சம் நெருக்கடியாய்த்தான் இருந்திருக்கும்.... திலக் நகர்ல அவனோட பெரியப்பா இருக்கிறாரே, அவர்தானே ஸ்கூல் ஸ்கூலா அலைஞ்சு அவனுக்கு அட்மிஷன் வாங்கித் தந்தவர்? அங்கே போயிருந்திருப்பீங்க, அதில ஒரு நாள் போயிடும்!
இல்லே அங்கே போகலே. அவர்கூட ஊரில இல்லேன்னு இன்னிக்கு கேள்விப்பட்டேன்.
ஓ அப்படியா? அப்ப ஒரு நாள் மிச்சம்தான். அப்புறம் உன் தம்பி புதுசா வீடு கட்டி தனியா இருக்கிறானே, அங்கே ஒரு நாள்! சின்ன வயசில இவனை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு அலைவானே?”
அங்கேயும் போகலே, அடிக்கிற வெயிலைப் பார்த்தா எப்படி புதுசா வேலையில ஜாயின் பண்ணக் கிளம்பறவனை அலைய வைக்கிறது? உடம்புக்கு ஏதாவது வந்துட்டா?”
அதுவும் சரிதான். எனக்கு அது தோணலே பாரு. ஆனா உன் ஃபிரண்ட் வேதசாலம் வீட்டுக்கு ரெண்டு நாள் ஒதுக்கியாகணுமே? எத்தனை சொல்லியிருக்கே அவனைப் பத்தி? அப்படி ஒரு பழக்கம் உன் குடும்பத்தோடு! ஏன், உன் பையன் காலேஜ் ஃபீஸ் கட்ட அவன்தானே அடிக்கடி பர்சை நீட்டுவான்?”
மறப்பேனா? போன மாசமே அவனைப் பார்த்து விவரமெல்லாம் சொல்லி அன்னிக்குப் பூராவும் அவனோடு பழைய நாட்களை எல்லாம் அசைபோட்டு... இப்ப இருக்கிற பத்து நாளில இவனை எதுக்கு அங்கேயெல்லாம் அழைச்சுட்டு போயிட்டுன்னு தான் போகலே.
ஓ இவனை அழைச்சிட்டுப் போகலியா?...  இவன் லீவில் ஊருக்கு வரும்போதெல்லாம் முறுக்கு அதிரசம்னு ஆசையோடு பண்ணிக்கொண்டு வருவாளே உன் சித்தி, அவள் இங்கே எங்கேயோ புது நகர் பக்கம்தானே...உன் பையனையாவது அனுப்பி வெச்சிருப்பியே அவ வீட்டுக்கு?”
அனுப்பலாம்னு தான் இருந்தேன், ஆனா அன்னிக்கு மழை வந்து கெடுத்திட்டது.
ஓ அந்த வெள்ளிக் கிழமையை சொல்றியா? இருக்கட்டும். காலேஜ் எது, பிராஞ்ச் எதுன்னு சரியா தேர்ந்தெடுக்க நிறைய விவரம் சேகரிச்சு ரொம்ப உதவியா இருந்தார்னு சொல்லுவியே உன் ஆபீஸ் சூபர்வைசர் ராமலிங்கம், அவரிடம்...
அதெப்படி மறப்பேன்? இவனை ரயில் ஏற்றி விட்டு அடுத்தாப்பல அங்கேதானே போனேன்? என் நன்றி உணர்வை அவர் ரொம்பவே பாராட்டினார்.
சரி. அப்புறம் உன் பெரியண்ணா, தம்பி, மாமா, தங்கை இவங்கல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்ல, முப்பது கிலோ மீட்டருக்குள்ளேதான், இல்லியா? ஒரு நாலு நாள் அதுக்கு ஒதுக்கியிருப்பியா?”
அதான் நான் இப்ப ஃப்ரீ ஆயிட்டேனே! இந்த வாரம் அதுக்கு ஒதுக்கிட்டேன்.... என்ன ஏதோ யோசிக்கறீங்க? சும்மா சொல்லுங்க.
ஒரு சின்ன சந்தேகம். உன் பையன் படிச்சு ஒரு நல்ல வேலை கிடைச்சு போயிருக்கிறான். அவன் பொறுப்போடு அந்த வேலையை செய்து கவனமா முன்னேறணும்னு நினைக்கிறே இல்லே?
நிச்சயமா!
அப்படியானால் இந்த சந்தர்ப்பத்தில் நீ அவனையும் இவர்களிடம் அழைச்சிட்டுப் போயிருக்கணும் இல்லையா? தான் இன்றைக்கு அமர்ந்திருக்கும் இந்த இடத்துக்கு வருவதற்கு பின்னால் எத்தனை பேருடைய உதவியும் சிரமமும் இருந்திருக்கின்றன என்று உணர்ந்தால் அவனுடைய பொறுப்புணர்வும் கவனமும் அதிகரிக்கும். முன்னேற்றமும் சந்தோஷமும் ஏன் திருப்தியும் எளிதில் வசப்படும்... அதோடு தன் உறவினர், குடும்ப நண்பர்களுடன் அவனுக்கு வலுவானதொரு தொடர்பும் ஈடுபாடும் உண்டாகும் இல்லையா?”
சரியா சொன்னீங்க! அடுத்த விடுமுறை நாளிலேயே அவனை வரவழைத்து இதை செஞ்சிடறேன்!       

('அமுதம்' ஜனவரி 2013 இதழில் வெளியானது) 
<<<>>>
(படம் - நன்றி: கூகிள்)

10 comments:

கோமதி அரசு said...

தான் இன்றைக்கு அமர்ந்திருக்கும் இந்த இடத்துக்கு வருவதற்கு பின்னால் எத்தனை பேருடைய உதவியும் சிரமமும் இருந்திருக்கின்றன என்று உணர்ந்தால் அவனுடைய பொறுப்புணர்வும் கவனமும் அதிகரிக்கும். முன்னேற்றமும் சந்தோஷமும் ஏன் திருப்தியும் எளிதில் வசப்படும்... அதோடு தன் உறவினர், குடும்ப நண்பர்களுடன் அவனுக்கு வலுவானதொரு தொடர்பும் ஈடுபாடும் உண்டாகும் இல்லையா?”//

இப்படி ஒருவர் குடும்பத்திற்கு அறிவுரை சொல்ல இருந்தால் வீடும், நாடும் நலம்பெறும்.
அருமையான கதை.
அன்புக்காக ஒரு நிமிடம் ஒதுக்கினால் வாழ்வில் கிடைக்கும் ஆனந்தம்.

இராஜராஜேஸ்வரி said...

தான் இன்றைக்கு அமர்ந்திருக்கும் இந்த இடத்துக்கு வருவதற்கு பின்னால் எத்தனை பேருடைய உதவியும் சிரமமும் இருந்திருக்கின்றன என்று உணர்ந்தால் அவனுடைய பொறுப்புணர்வும் கவனமும் அதிகரிக்கும். முன்னேற்றமும் சந்தோஷமும் ஏன் திருப்தியும் எளிதில் வசப்படும்... அதோடு தன் உறவினர், குடும்ப நண்பர்களுடன் அவனுக்கு வலுவானதொரு தொடர்பும் ஈடுபாடும் உண்டாகும் இல்லையா?”

சரியான அருமையான வழிகாட்டல் ....சரியா சொன்னீங்க!

கவியாழி said...

“சரி. அப்புறம் உன் பெரியண்ணா, தம்பி, மாமா, தங்கை இவங்கல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்ல, முப்பது கிலோ மீட்டருக்குள்ளேதான், இல்லியா? ஒரு நாலு நாள் அதுக்கு ஒதுக்கியிருப்பியா?”//
இதுதான் உறவுகள் ...........

திண்டுக்கல் தனபாலன் said...

/// ஏன் திருப்தியும் எளிதில் வசப்படும்... ///

நல்லதொரு யோசனையை தான் சொல்லி உள்ளார்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

சந்திக்க வேண்டியவர்கள் பட்டியல் சிந்திக்க வைப்பதாகவே உள்ளது. நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

Rekha raghavan said...

//“சரியா சொன்னீங்க! அடுத்த விடுமுறை நாளிலேயே அவனை வரவழைத்து இதை செஞ்சிடறேன்!” //

ஒருத்தர் சொன்னாத்தான் நமக்கு மண்டையில் உறைக்குது! அருமையா அதே சமயம் நாசூக்காக அறிவுறித்திய சாத்வீகனுக்கு ஒரு 'ஒ' போடலாமே!

ரேகா ராகவன் .

வெங்கட் நாகராஜ் said...

இப்படித்தான் நமக்காக தோன்றாமல் போகிறது பலவிஷயங்கள்.

அதை புரியவைத்த முறை நன்று.

ஷைலஜா said...

இந்தத்தலைமுறையினருக்கும் முந்தைய தலைமுறையினருக்குமான கதை..படிக்கும்போது புரிய மறந்த இருவரும் திருந்தலாம்..நல்ல கதை ஜனா

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை அய்யா. வந்த வழியை மறவாதே . சிறப்பான பதிவு அய்யா நன்றி

Ranjani Narayanan said...

ஏறி வந்த ஏணிகளை மறக்கலாமா?
மிகச் சிறப்பாகச் சொல்லிப் புரிய வைத்துவிட்டீர்கள்.
பாராட்டுக்கள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!