Monday, April 22, 2013

இரண்டே நாளில்...
அன்புடன் ஒரு நிமிடம் 31  

இரண்டே நாளில்... 


ராகவ் அதைக் கேட்டு, வேறே எல்லாவற்றையும் விடுங்க, சிரிப்பார்னு எதிர்பார்க்கவே இல்லை கிஷோர். வேறு யாராவதாக இருந்தால் தன்னை எள்ளி நகையாடுகிறரோ என்றுகூட நினைத்திருப்பான். அவனே மிகக் கவலையில் அல்லவா வந்திருந்தான்?
பேச்சு இப்படி ஆரம்பித்தது.

என்ன கிஷோர் மூட் அவுட்டா இருக்கே?”

அதை ஏன்...? காலையிலேர்ந்து பலத்த சண்டை.

யாழினியோடு என்று அவன் சொல்லவில்லை. சொல்லாமலே தெரிவது அது.

நீ என்ன பண்ணினே?” அவன் முறைப்பைப் பார்த்து, யாழினி என்ன பண்ணினாள்?”

அப்படி சரியாக் கேளுங்க,” என்று தொடங்கி நடந்தவற்றை ஆதியோடந்தமாக விவரித்தான். ...காலையிலே பத்து மணிக்கு ஆரம்பித்த சண்டை. இன்னும் நிற்கலே. பேசாம கிளம்பி வந்துட்டேன்.

அதாவது பேசிட்டு கிளம்பி வந்துட்டே?”

ஆமா. பேசிட்டு கிளம்பி வந்துட்டேன்.

கோபமா அவளை முறைச்சிட்டு?”

கோபமா அவளை முறைச்சிட்டு!

சரி, சொல்லு.

இந்த மாசம் இது நாலாவது சண்டை! வாரம் தவறாம ஒண்ணு முளைக்குது. சில வாரம் ஒண்ணுக்கு ரெண்டா...  ஆ,ஊன்னா பத்திக்குது.

உர்ருன்னு முகத்தை வெச்சுக்கறா. அல்லது நீ வெச்சுக்கறே?”

ஏதோ ஒண்ணு! ஒரு தடவை இப்படி நடந்தா சமாதானமாக ரெண்டு நாளாகுது. மாசம் பத்து நாள் இதிலே போயிடுது. மீதி நேரத்திலேதான் நான் ஆபீஸ் வேலை, வீட்டு விஷயம் எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. சே, என் வாழ்க்கை நகர்ற தினுசைப் பாருங்க! டோட்டல் வேஸ்ட்! கொஞ்சமும் நல்லாயில்லே, அவள் இப்படி சண்டை பிடிக்கிறது...

எத்தனை நாளா இப்படி நடக்குது?”

எத்தனை வருஷமான்னு கேளுங்க.

அவன் அப்படி சொல்ல, அப்பதான் அவர் சிரித்துத் தொலைத்தது.

என்ன மாமா, கேக்கிறதையெல்லாம் கேட்டிட்டு சிரிக்கிறீங்களாக்கும்?”

அவர் எதையோ யோசிக்க ஆரம்பித்தார்.

அது!என்றான். அப்படி நல்ல யோசிச்சு ஒரு வழி சொல்லுங்க, இந்த சண்டைகளை நிறுத்த!

நான் இப்ப யோசிக்கிறது உங்களுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கிறதுண்ணுதான்.

கிஃப்ட்?”

யெஸ். இத்தனை தூரம் பரஸ்பர நம்பிக்கை கொண்ட தம்பதிக்கு ஏதாவது கொடுக்கணுமே நான்?”

முறைத்தான். அது ஒண்ணுதான் பாக்கி!

நோ. நீ சொன்னது எதை காட்டுதுன்னா நீங்க ஒருத்தர் மேலே ஒருத்தர் வெச்சிருக்கிற அபார நம்பிக்கையைத்தான்! சரியா ரெண்டு அல்லது மூணு நாளில் தீர்ந்து போகுது, அதுக்கு மேல் அது நீடிக்காதுங்கிற நிச்சயம்தான் இப்படி அடிக்கடி சண்டை போட வைக்குது. அந்த நிச்சயத்தைத் தருகிற உள் மதிப்பும் பிரியமும் உனக்கு அவள் மேலும் அவளுக்கு உன் மேலும் முழுசா இருக்கு. அப்புறம் என்ன?”

சற்றே துணுக்குற்றான். யோசித்தான். அப்படியும் இருக்குமோ? சரி அப்ப சண்டைன்னு ஒண்ணு ஏன் வருது இன் த ஃபர்ஸ்ட் பிளேஸ்?”

எல்லா அன்புள்ள மனுஷங்களுக்கிடையேயும் வர்ற மாதிரிதான்! அவள் எப்படி எப்படி இருக்கணும், எப்படி எப்படி நடந்துக்கணும்னு உனக்கு ஆயிரம் ஐடியா இருக்கு. அதே போல அவளுக்கும்!  அதான் சண்டையைக் கிளப்புது.  இது நடக்கிறது மேல் மனசில.  அடி மனசில அவள் அவளாகாவே இருக்கிறதும் அதுக்கு நீ உதவறதும்தான் உண்மையிலேயே உனக்குப் பிடிச்சிருக்கு. அவளுக்கும் அதுவே. அதுதான் அந்த சண்டையைத் தோற்கடிக்கிறது. உங்களை நீங்களே ஜெயிக்க வைக்கிறது.   

அவன் முகத்தில் எழுந்த பரவசம் இருக்கிறதே...

('அமுதம்' ஜனவரி 2013 இதழில் வெளியானது)
<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)

10 comments:

உஷா அன்பரசு said...

//நீ சொன்னது எதை காட்டுதுன்னா நீங்க ஒருத்தர் மேலே ஒருத்தர் வெச்சிருக்கிற அபார நம்பிக்கையைத்தான்! சரியா ரெண்டு அல்லது மூணு நாளில் தீர்ந்து போகுது, அதுக்கு மேல் அது நீடிக்காதுங்கிற நிச்சயம்தான் இப்படி அடிக்கடி சண்டை போட வைக்குது.//- நிஜம்தான் நிறைய தம்பதிகள் வாழ்வில் இப்படித்தான்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படைப்பு. அன்புள்ளம் படைத்த அனைத்துக் கணவன் மனைவிகளுக்கிடையேயும் அவ்வப்போது அடிக்கடி நடைபெறும் ந்கழ்வு தான். வரவேற்க வேண்டிய வாய்ச்சண்டைகளே.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

அருமை.

கோமதி அரசு said...

அருமையான கதை.

இராஜராஜேஸ்வரி said...

சண்டையைத் தோற்கடிக்கிறது. உங்களை நீங்களே ஜெயிக்க வைக்கிறது.”

அவன் முகத்தில் எழுந்த பரவசம் இருக்கிறதே...

உள்ளத்தை உள்ளபடி கண்ணாடியாய் பிரதிபலித்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

கீத மஞ்சரி said...

இனிய இல்லற பந்தத்தின் எளிய இரகசியத்தை அழகாகக் கதைமூலம் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகள் ஜனா சார்.

கோவை2தில்லி said...

அருமையான கதை. எல்லார் வீட்டுலயும் உள்ளது தான்....:)

இப்படி ஒருவர் வீட்டுல இருந்தார்னா நன்றாக இருக்கும்னு தோணுது...:)

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - கதை அருமை - வை.கோ வின் மறுமொழியினை அப்படியே வழி மொழிகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!