Saturday, December 22, 2012

முயற்சிக்க ஒரு பயிற்சி


அன்புடன் ஒரு நிமிடம் - 23


முயற்சிக்க ஒரு பயிற்சி

ரைமணி நேரத்துக்கு மேலாயிற்று அவர் உள்ளே நுழைந்து. கிஷோர் அவரைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அத்தனை ஆழ்ந்திருந்தான் தான் செய்து கொண்டிருந்த வேலையில்.

என்ன நினைத்தாரோ ராகவ், தன் இருப்பை காட்டிக் கொள்ளாமலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆச்சரியம் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. என்ன ஒரு ஈர்ப்பு!

கிஷோர் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கவில்லை, ஃபேஸ்புக்கில் மூழ்கியிருக்கவில்லை. துணிகளை அயன் செய்துகொண்டிருந்தான், அவ்வளவுதான். ஆனால் அந்தக் காரியத்தில்தான்  என்ன ஒரு ஈடுபாடு!

உலர்த்திய ஆடைகளை ஹேங்கரோடு எடுத்து வந்து சோபாவில் ஒரு குழந்தையைப் போலக் கிடத்தியிருந்தான். ஒவ்வொரு சட்டை அல்லது பேண்டை எடுக்கும்போதும் அதை நெஞ்சோடு சேர்த்து வைத்து நீவி விட்டு பின் மெதுவாக ஹேங்கரிலிருந்து விடுவித்து, மேஜையில் பிங்க் செவ்வகமாக விரித்திருந்த விரிப்பில் படர்த்தினான்.

அந்த வரிசை! முதலில் காலர், பின் தோள் புறம், கைகள்அதுவே ஒவ்வொரு உடைக்கும் சரியான ஒரு வரிசையில், வேறெப்படி செய்தாலும் சரிவராது என்கிற மாதிரி கச்சிதமாக...

பக்கத்தில் அழகிய பௌலில் தண்ணீர் வைத்திருந்தான். வெல்வெட் போன்ற ஒரு சிறு துணி. அதை அவன் அதில் அமிழ்த்தி எடுத்த விதமே ஒரு தூரிகையை கலரில் முக்கியது போல மிருதுவாக...இதமாக தண்ணீரைத் தெளித்தது ஏதோ கல்யாண வரவேற்பில் பன்னீர் தெளித்த மாதிரி..., இஸ்திரிப் பெட்டியை முன்னோக்கித் தோய்த்தது பெருங்கடலில் கப்பல் செல்லுவது போல...

ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அழகாக, லயித்து லயித்து செய்கிறான்! ஒவ்வொரு அசைவும் எத்தனை நளினமாக! எழும் ஒவ்வொரு சப்தமும் எத்தனை லயத்தோடு! வைத்த கண்ணை எடுக்கவில்லை அவர்.

கடைசி டீஷர்ட் வரை முடித்தபின்தான் மெல்லத்திரும்பினான். அட மாமா, எப்ப வந்தீங்க?”

இப்பதான் ஒரு முப்பது நிமிஷம்

ஆமா எங்கே வந்தீங்க?”

உன் மேட்டர்தான். அன்னிக்கு ஒரு சந்தேகம் சொல்லி வழி ஏதும் இருக்கான்னு கேட்டியே, அது பத்தித்தான் ஒண்ணும் ஐடியா தேறலேன்னு சொல்லிட்டு போக வந்தேன். என்றவர் ஆனா,” என்று சொல்லி நிறுத்தினார். இஸ்திரி போடறதை இத்தனை இஷ்டத்தோட இழைத்து  இழைத்து செய்கிற இளைஞனை நான் இதுவரை பார்த்ததில்லை.”

இந்த ஒரு விஷயம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அயன் பாக்ஸைக் கையில எடுத்தேன்னா போதும் அப்படியே தன்னை மறந்துடுவேன்.

இப்ப ஒரு விஷயம் சொல்லட்டுமா? அன்றாடம் நீ எத்தனையோ வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். கஷ்டமான செய்யப் பிடிக்காத வேலைகள் தான் பெரும்பாலும் அதில் இருக்கும். ஆனா செய்தாகணும். இல்லையா? அப்படி ஒண்ணை எடுத்துக்க. ஒரு நிமிஷம் அதை உனக்கு ரொம்பவும் பிடித்த வேலையாக கற்பனை செய்துக்க. அதாவது அந்த விஷயம் இதோ இந்த அயனிங் மாதிரி உனக்கு மிகவும் பிடித்த வேலையாக இருந்தால் அதை எப்படி செய்வாயோ அந்த மாதிரி நினைத்துப் பார்த்து அப்படி ஒரு முறை செய்து பார். அப்படி செய்தால் கொஞ்ச தடவைகளில் எந்த வேலையுமே அதனோடு சுலபமாக ஒன்ற முடிகிறதாக மாறிவிடும்! ஏன், நாளடைவில் சுலபமாக செய்யக் கூடியதாகக் கூட ஆகிவிடும். ட்ரை இட்! அப்புறம் தாங்க்ஸ்! நீ கேட்ட விஷயத்துக்கு உன்னிடமிருந்துதான் எனக்கும் ஜஸ்ட் நௌ ஒரு விடை கிடைச்சது!

எரிச்சலும் விருப்பக் குறைவுமா இருக்கு, எப்படி என் முன்னாலுள்ள எல்லா வேலைகளையும் கடமைகளையும் முடிக்கிறது?’ என்பதுதான் அவன் கொஞ்ச நாள் முன்பு அவரிடம் கேட்டது.
 <<<>>>
('அமுதம்' அக்டோபர் 2012 இதழில் எழுதியது)


12 comments:

ராமலக்ஷ்மி said...



எல்லோருக்குமான நல்ல தீர்வு.

நல்ல கதை.

Mahi said...

I love ironing! So I can just see the scene of Kishore ironing his shirt in my mind! :)

Nalla thathuvam, Aana athai follow pannuvathu thaane kashtamaa irukku?

Enjoyed your write-up!

Yaathoramani.blogspot.com said...

அருமையான கருத்து
மிகப் பெரிய விஷயத்தை சிறு சிறு
நிகழ்வுகளில் இணைத்துச் சொல்லிப் போகும்
தங்கள் பாணி அதிகம் கவர்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை தெளிவாய் ஒரு பதிலைச் சொல்லி விட்டார். நல்ல பகிர்வு.

cheena (சீனா) said...

அன்பின் ஜ்னா - கதை அருமை - எச்செயலையும் உளமாற விரும்பி - ஈடுபாட்டுடன் செய்தால் அது நிச்சயம் வெற்றி பெறும். அருமையான சிந்தனை. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கரந்தை ஜெயக்குமார் said...

செய்வதை விரும்பிச் செய். அருமை அய்யா

இராஜராஜேஸ்வரி said...

இஸ்திரி போடறதை இத்தனை இஷ்டத்தோட இழைத்து இழைத்து செய்கிற இளைஞனை நான் இதுவரை பார்த்ததில்லை.”

அருமையான சிந்தனையை விதைத்த நிறைவான பகிர்வுக்கு இனிய பாராட்டுக்கள்..

ஹ ர ணி said...

அன்பு ஜனா..

வழக்கம்போல எளிமை. தெளிவு. யதார்த்தம். கதை வாழ்வியலின் துடிப்பை எளிமைப்படுத்துகிறது. வாழத்லின் சுகத்தைப் படம்பிடிக்கிறது.

Rekha raghavan said...

ஒவ்வொரு அன்புடன் ஒரு நிமிடமும் அப்படியே மனதில் பதிகிற மாதிரி சொல்வது அருமை.

ரேகா ராகவன்.

நிலாமகள் said...

சேர்த்து சேர்த்து வேண்டா வெறுப்பாய் அயர்ன் பண்ணும் பழக்கத்தை இன்றோடு விட்டாச்சு.

அன்னிக்கு ஒரு சந்தேகம் சொல்லி வழி ஏதும் இருக்கான்னு கேட்டியே, அது பத்தித்தான் ஒண்ணும் ஐடியா தேறலேன்னு சொல்லிட்டு போக வந்தேன்.//

புன்னகைத்த மனசு இறுதியில் பிரம்மிப்பானது அட, ஆமா இல்ல...!

Ranjani Narayanan said...

சில வேளைகளில் நம்மையும் அறியாமல் ஒரு ஈடுபாடு வந்து விடுகிறது. அந்த ஈடுபாட்டை மற்ற விஷயங்களிலும் கொண்டு சென்றால்... நிஜமாகவே முயற்சிக்கலாம் தான்.
ஒரு நிமிடக் கதை பல நிமிடங்கள் சிந்திக்க வைத்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“இஸ்திரி போடறதை இத்தனை இஷ்டத்தோட இழைத்து இழைத்து செய்கிற இளைஞனை நான் இதுவரை பார்த்ததில்லை.”
//

செய்யும் தொழிலே தெய்வம்.
அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்.

நல்லதொரு நீதி சொலும் சிறுகதை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!