Friday, March 9, 2012

எண்ணிச் சிந்திடுவோம்...



அன்புடன் ஒரு நிமிடம்... ( 1 )   

எண்ணிச் சிந்திடுவோம்... 

''மணி எட்டரை ஆச்சு, இன்னும் நீங்க புறப்படலியா கல்யாணத்துக்கு? என்ன இப்படி உட்கார்ந்திருக்கீங்க?  கிளம்புங்க, சீக்கிரம்!'' என்றாள் தலையை வாரிக்கொண்டு வந்த மீரா. அவள் தொடர்ந்து சொன்னது: ''ஒரு அவசரம், விசேஷம்னா உங்களை புறப்பட வைக்கிறதே எனக்கு பெரிய வேலையாப் போகுது!''

வினோத்  தன் லேப் டாப்பை மூடிவிட்டு எழுந்தான். ''எத்தனை மணிக்கு முகூர்த்தம்? மண்டபம் எது?''

''பத்தரை. ஸ்ரீநிவாஸ் மண்டபம்.''

''முகூர்த்தம் பத்தரைக்குத்தானே? இப்ப அரைமணியில ரெடியாயிட்டேன்னா ஒரு மணி நேரத்தில அங்கே போயிரலாமே?'' என்றான். அவன். தொடர்ந்து சொன்னது: ''நான் என்ன சும்மா தூங்கிட்டா இருக்கேன்? ரெண்டு வாரமாச்சு. பிராஜெக்ட் வேலை முடியலை. அதைத்தான் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்.''

''சரி, சரி. இட்லி ரெடியாயிருக்கு. எடுத்து சாப்பிட்டுக்குங்க. நான் டிரஸ் பண்ணிக்கிறேன்.'' என்றாள் அவள். வேலை ரொம்ப பாக்கின்னா வீட்டிலிருந்து கொஞ்சம் பார்க்கலாமே என்று சொன்னது அவள்தான். ஆகவே அவளுக்கு உறுத்திற்று, நீ சொன்னதைத்தானே நான் செய்தேன் என்கிறானோ? அவள் தொடர்ந்து சொன்னது: ''ஆமா எங்க மாமா வீட்டுக் கல்யாணமாச்சே, அப்பத்தான்  பிராஜெக்டைப் பார்க்கிறதுக்கு உட்காருவீங்க!''

 ''உடனே அப்படிப் போயிருமே நினைப்பு? அதெல்லாமில்லே...'' என்று மறுத்தான். ஷேவிங்கை ஆரம்பித்தவன் தொடர்ந்து சொன்னது, ''நீதான் சில சமயத்தில அப்படி சிறுபிள்ளைத்தனமா நடந்துக்குவே, நானில்லை.''
......
இதற்குப்பின் இந்த உரையாடல் எப்படிப் போயிருக்கும் என்பதை ஊகித்து விடலாம். 

மேலே உள்ள உரையாடலில் எல்லா 'தொடர்ந்து சொன்னது'களையும் கவனிக்கவும். அவற்றை சொல்லுமுன்  ஒரு நிமிடம்,  ஒரே ஒரு நிமிடம், 'இப்ப இப்படி சொல்லணுமா? சொல்லலாமா?  சொன்னால் அது என்ன எதிர் விளைவை அல்லது பக்க விளைவை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்த்துவிட்டு, அப்படி சொல்லவா வேண்டாமா என்று முடிவெடுத்திருந்தால், அநேகமாக அந்த எல்லா 'தொடர்ந்து சொன்னது'களையுமே நிச்சயமாக தவிர்த்திருப்போம் இல்லையா? அந்த இடங்களில் அவை அவசியப்படவும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம். 

தான் சொல்வது சரி என்று வாதாடுகையில், ஒருவரை ஏதும் குறை சொல்லுமுன், அப்படி செய்திருக்கணும் என்று அறிவுரை வழங்குமுன் ஒரு நிமிடம் நாம் என்ன சொல்கிறோம் என்பதை யோசித்துவிட்டுப் பேசினால் உறவுகளும்  நட்புகளும்  எப்போதும் இனிக்குமே? எண்ணிச் சிந்திடுவோம் எண்ணங்களை...! 
 
------------

22 comments:

மனோ சாமிநாதன் said...

இதைத்தான் பெரியவர்கள் 'கொட்டி விட்டால் அள்ள முடியாது' என்று அன்றே சொன்னார்கள்.
எதிர் வாக்குவாதம் இல்லாமலிருந்தாலே இல்லத்தில் என்றும் அமைதி நிலவும்.

நல்ல, கருத்துள்ள‌ பதிவு!!

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப சரியா சொல்லி இருக்கிங்க.

எண்ணிச் சிந்திடுவோம் எண்ணங்களை...!

வெங்கட் நாகராஜ் said...

//அப்படி செய்திருக்கணும் என்று அறிவுரை வழங்குமுன் ஒரு நிமிடம் நாம் என்ன சொல்கிறோம் என்பதை யோசித்துவிட்டுப் பேசினால் உறவுகளும் நட்புகளும் எப்போதும் இனிக்குமே? //

உண்மை.... பேசும் முன் யோசிப்பது நல்லது தான். பேசிய வார்த்தைகளும், சிந்திய பாலும் என்றுமே திரும்பி எடுக்க முடியாது என்பதைத் தெளிவாகச் சொல்லியது உங்கள் பகிர்வு..

சுய முன்னேற்றக் கட்டுரைகளைத் தொடருங்கள்....

Rekha raghavan said...

அருமையான இக் கட்டுரையை ஒரு நிமிடத்தில் படித்துவிட்டபோதும் சொல்லிய கருத்துகள் இனி யாரிடம் பேசினாலும் ஓரிரு நிமிடங்கள் சிந்தித்துவிட்டே பேசவேண்டும் என்ற சிந்தனையை என்னுள் அன்பாக விதைத்துவிட்டு சென்றது .

ராமலக்ஷ்மி said...

//ஒரு நிமிடம் நாம் என்ன சொல்கிறோம் //

யோசிக்க வேண்டிய ஒன்று. நல்ல பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

யோசித்துப்பார்த்து தேவையற்ற சொற்களைத் தவிர்த்து விட்டுப்பேசுவதே என்றும் நல்லது. பின்னால் பிரச்சனைகள் வளராமல் இருக்கும். நல்ல படிப்பினை அளிக்கும் பகிர்வு. பாராட்டுக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!

” இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” -

என்ற திருக்குறளுக்கு விளக்கவுரையாக உள்ளது தங்கள் கட்டுரை. தங்களது “எண்ணிச் சிந்திடுவோம் எண்ணங்களை...!”
என்ற ஒற்றை வரி வாய்ப்பாடு அருமை.

ADHI VENKAT said...

நல்ல கருத்துக்களை சொன்னது இந்த கதை.

நிச்சயம் பேசுவதற்கு முன்னே யோசிக்க வேண்டும்....

இனி எப்போதும் நினைவில் இருக்கும் சார்.

புதுவை சந்திரஹரி said...

எல்லோருக்கும் தேவைப் படும் சிந்தனை .
இது புரிந்தால் பிரச்சனைகள் ஏது?

ரிஷபன் said...

ஒரு நிமிடம் யோசித்துப் பேசினால் அல்லது பேசாமல் விட்டால் பல பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறியலாம்.. தொடருங்கள்.. நாங்க உங்களோடு

பால கணேஷ் said...

பேசிய வார்த்தைகளை திரும்பப் பெற முடியாது என்ற உணர்வினை மனதில் ஏற்றிக் கொண்டால் பிரச்சனையே வராது. அருமையான நற்கருத்தை சுவாரஸ்யமாகச் சொல்லிருக்கீங்க. தொடருங்கள்.... தொடர்கிறேன்!

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்ல தொடர்... நல்லுறவுகளுக்கு நற்பயனளிக்கும்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

மணி மணியாய் பேசுதல் சிறப்பு என்பார்கள். உண்மையில் விலை மதிப்பற்றவை வார்த்தைகள்தான். எங்கு அவை வீணடிக்கப் படுகிறதோ, அர்த்தமற்றுப் போகிறதோ, அங்கே வாழ்க்கை தோற்க ஆரம்பித்து விடுகிறது. மிக நல்ல தொடர். அடுத்த சிந்தனைக்குக் காத்திருக்கிறேன். ஒரு சிறுகதையைப் போல் துவங்கி சிந்திக்க வைத்திருப்பது சிறப்பு.

pudugaithendral said...

நல்ல பகிர்வு. வார்த்தையையும் அளந்து உபயோகிப்பது (அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே) நல்லது.

இடைவெளிகள் said...

நல்ல சிந்தனை விருந்து. வாழ்த்துக்கள்

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

சிந்திக்க வைக்கிறது தொடர் .நல்லதாக சொன்னால் கூட மாற்றி எடுத்துக் கொள்ளும் உலகம் .நல்ல சிந்தனை

Bagavath Kumar.A.Rtn. said...

வாழ்கையில் இதுபோன்ற மிக சின்ன விஷயங்களை நாம் சரியாக நாம் செய்வதில்லை. குடும்பங்களில் மட்டுமல்ல, தொழில் கூடங்களிலும் மனித உறவுகள் வலப்படுவதர்க்கு உங்கள் கருத்துக்கள் நல்ல பலன் தரும். தொடர்ந்து எழுதுங்கள் ஜனா...சரியான இடங்களில் அவை சென்றடையும்.

Sankar Gurusamy said...

அழகான கருத்துள்ள பதிவு.. உறவுகளை பலப்படுத்த நாம் சிந்தித்து பதில் பேச வேண்டும் என உணர்த்தியது..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

எனது கீழ்க்கண்ட பதிவில் இதைப்பற்றி எழுதி இருக்கிறேன்.

http://anubhudhi.blogspot.in/2012/03/blog-post.html

R. Gopi said...

நல்ல விஷயம். நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. சண்டையே இல்லாது இருந்தாலும் போர் அடித்துவிடும்.

'நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது' என்று இவன் சொல்வதிலும், 'பரவாயில்லை, விடுங்க' என்று அவள் சொல்வதிலும் ஒரு அழகு இருக்கவே செய்கிறது:-))

ஷைலஜா said...

சிந்திக்கவேண்டிய பதிவு. உறவுகளோடு உறவை வளர்த்துக்கொள்வதும் ஒரு கலைதான்.

RVS said...

நிமிஷத்துல சொல்லிட்டீங்க சார்! சூப்பர்ப் :-)

சித்ரவேல் - சித்திரன் said...

நானும் என் வாழ்வில் யோசித்தது... மனதினை மீள்பதிவு செய்திட்டமைக்கு நன்றி

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!