தேவ் ஆனந்த்… இன்று (Sept 26.) பிறந்தநாள்!
மழையளவு எழுதலாம் அவரைப் பற்றி, சில துளிகள்…
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி போல அங்கே திலீப், ராஜ் கபூர், தேவ். மற்ற இருவரை விட அதிக வருடம் ஹீரோவாக நீடித்தவர் தேவ். மோஸ்ட் சார்மிங் ஆக்டர் என்று மோஸ்ட் நபர்களால் வியக்கபட்டவர்.
சிவாஜியுடனான முக்கிய ஒற்றுமை இருவரின் தகப்பனார்களும் விடுதலைப் போராட்ட தியாகிகள்.
ஆரம்ப நாட்களில் இவரும் குரு தத்தும் திரை அங்கீகாரத்துக்காக போராடிக் கொண்டிருந்த தருணம் நட்போடு ஒரு அக்ரீமெண்ட் போட்டுக்கொண்டார்கள். நான் படம் எடுத்தால் நீ தான் டைரக்டர் என்று இவரும், நான் டைரக்ட் பண்ணினால் நீ தான் நடிக்கிறாய் என்று அவரும். நடந்தது. குரு தத் டைரக்ட் செய்த ‘C. I. D.’ யில் தேவ் ஹீரோ. மாபெரும் ஹிட். தேவ் தயாரித்த ‘Baazi’ யில் மெகா ஃபோனை பிடித்தவர் குருதத். மாபெரும் ஹிட்.
ஒரு பார்ட்டியில் ஓடிவந்து தன்னை உலுக்கி, ஏன் மறந்துட்டே அமர்? என்று ஒரு பெண் கேட்கும்போதுதான் வினய்க்கு தெரிகிறது, தன்னைப் போலவே உள்ள அமர் என்ற ஜுவல் தீஃப் பற்றி! அமராக நினைத்து அனைவரும் இவனைத் துரத்த... ஆரம்பமாகிறது 'அமர்'க்களம்! ‘Jewel Thief’! எந்தப் படத்திலும் இப்படி காட்சிக்குக் காட்சி வில்லனைத் தேடியிருக்க மாட்டார்கள் ரசிகர்கள். ஹோட்டல் அறையில் தன் டூப்ளிகேட்டைத் தேடிவரும் தேவ் ஆனந்த் கையில் ரிவால்வருடன் வெளியில் வர எதிரே மற்றொரு தேவ் ஆனந்த், கையில் ரிவால்வருடன்! அடுத்த வினாடி புன்னகைக்கிறார். கண்ணாடி! கடைசியில் அந்த 'திடுக்' உண்மையை நாயகி சொல்ல, நாயகனுக்கும் நமக்கும் சரியான அதிர்ச்சி.
ஹிட்ச்காக்கின் ‘North by Northwest’ பாணியிலான தேவ் ஆனந்தின் இந்தப் படத்தை ரெண்டே ஜோடி வார்த்தையில் சொன்னால் 'சூபர் ஸ்டைல்! சூபர் திகில்!' கிளாமரும் இன்னிசையும் போனஸ்! ஹீரோ தேவ் ஆனந்த் அணிந்த மாடல் தொப்பி இளைஞர்களிடையே craze ஆகி அமோகமாக விற்றது. பெங்களூரில் ஒரு டெய்லர் அதை அடித்து விற்றே லட்சாதிபதி ஆனாரென்றார்கள்.
இந்தியாவின் கிரிகரி பெக் என்று அழைக்கப்பட்டவர் வித்தியாசமான ரோல்களை செய்யத் தயங்கியதே இல்லை. ஜால் படத்தில் ஏமாற்றும் காதலனாக வந்ததிலிருந்து அனேக நிழலான கேரக்டர்களை செய்தார்.
க்ரேஸி விளம்பர கேப்ஷன்ஸ் இவருக்கு ஜாஸ்தி! மூணு ஹீரோயினோடு நடித்த ’Teen Deviyan’ படத்தின் போது: Dev and his ‘Teen Deviyan’ என்று!
டைரக்ட் செய்த ‘Hare Rama Hare Krishna’வை மறந்திருக்க மாட்டீர்கள். முதலில் அந்த ‘Dum Maro Dum’ பாடலை நீக்கி விட நினைத்தார்கள். பாடிய ஆஷா பாஸ்லேயின் வற்புறுத்தலால் சேர்க்கப்பட்டது. மிகவும் ஈர்க்கப்பட்டது.
50 வருடம் ஹீரோவாக வலம் வந்தவர்தான் ஜீனத் அமனையும் டினா முனிமையும் அறிமுகப் படுத்தி நட்சத்திரமாக்கியவர். ராஜேஷ் கன்னா மிஞ்சியிராவிட்டால் (106) அதிக படங்களில் ஹீரோவாக நடித்த இந்தி நடிகர் இவராகத்தான் இருப்பார் (92)
அவர் எதைச் செய்தாலும் ஸ்டைல் ஆனது. ஒரு பக்கம் படம் ஃபெயில்யர் ஆகும், மறுபக்கம் அடுத்த படத்துக்கு கூட்டம் அலை மோதும் என்று இருந்த ஒரே நடிகர் ஹிந்தியில் இவர் மட்டுமே.
அப்புறம் அந்தப் பிரபல ‘The Guide’ ஆர் கே நாராயணன் அவர்களின் சாகாத saga. தம்பி விஜய் ஆனந்த் திரைக்கதை எழுதி இயக்க, முதல் முறையாக Filmfare இன் 4 டாப் அவார்டுகளை ஒரு சேரப் பெற்றது (சிறந்த படம், நாயகன், நாயகி, டைரக்டர்). Pearl S Buck திரைக்கதை எழுத தேவ் அதை ஆங்கிலத்தில் தயாரித்தார் கூட்டு தயாரிப்பாக. ஏனோ அங்கே வெற்றி பெறவில்லை. தவிர நடித்த ஒரே ஆங்கில படம் ‘The Evil Within.’
இந்திப் படங்களின் டாப் 10 கிளைமாக்ஸ் காட்சி சொன்னால் அது அதில் ஒன்றாக வந்து விடும், ‘The Guide’ படத்தினுடையது. காதலிலும் வாழ்விலும் ஏமாந்து கஷ்டங்களுக்கு பின் ஒரு கோவிலில் சாதுக்களுடன் தங்குகிறான் ராஜு. அதிகாலையில் சால்வையை போர்த்தி விட்டு அவர்கள் போய்விட இவனைப் பார்க்கும் பக்தன் ஒருவன் இவனையும் ஒரு சாது என்று நினைத்து தன் பிரச்னையை சொல்கிறான். இவன் சொன்ன வழியில் அது தீரவே, பெருகி விடுகிறார்கள் பக்தர்கள் . அடுத்து கிராமத்தில் வறட்சி. மழை பொய்த்துப் போனது. இந்த சாது 12 நாள் உண்ணாவிரதம் இருந்தால் மழை வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். சாதாரண மனிதன் நான் என்று சொல்லிப் பார்த்தால் அவர்கள் கேட்கணுமே? இவனை அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை அவன் நம்புகிறான். விரதம் இருக்கிறான். 12 வது நாள் மழை பாய்கிறது. அவன் மாய்கிறான்.
திரை உலகின் மிக இனிமையான காதல் கதைகளில் ஒன்று தேவ் - ஸுரையாவுடையது. அப்போது ஸுரையா அவரை விட பெரிய ஸ்டார். அவர் வீட்டின் எதிர்ப்பினால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சுரையா கடைசி வரைக்கும்!
தற்கொலை செய்யப் போன ஒருவனை தடுத்து நிறுத்தி அவனை இன்ஷூர் பண்ண வைத்து பணத்தை அடித்துக் கொள்ள நினைக்கிறான் ஒரு கில்லாடி. தப்பி அவன் மகளையே திருமணம் செய்து கொள்ளும் ஹீரோவாக ‘Funtoosh’ இல் கலக்கினார். அப்பா இசையமைக்க, டீன் ஏஜில் இருந்த ஆர்.டி.பர்மன் ட்யூன் போட்டார் அதிலொரு ஹிட் பாடலுக்கு. “Ae Meri Topi Palakte Aa..”
அண்ணனும் (Chetan Anand) தம்பியும்(Vijay Anand) பிரபல டைரக்டர்கள் என்றால் இவரு மட்டும் என்ன, 19 படங்களை இயக்கியதோடு 13 படத்துக்கு கதை எழுதி… மெடிகல் ப்ரஃபஷனை வைத்து A. J. Cronin எழுதிய ‘The Citadel’ நாவலை தழுவி வந்த ’Tere Mere Sapne’ வில் விஜய் ஆனந்தும் இவருடன் நடித்தார்.
காதலி நந்தாவின் துப்பட்டாவின் நுனியை பாக்கெட்டில் செருகியபடி சோளம் கடித்துக்கொண்டே “Likha Hai Teri Aankhon Mein..” பாடும்போதும் பஞ்சாலையில் பொதிகளினூடே மும்தாஜைத் தேடிக்கொண்டு “Kanjire Kanjire..” பாடும்போதும் ஆர்ப்பரிக்கிற வைக்கும் பிரத்தியேக கரிஷ்மாவை அணிந்திருப்பது தெரியும்.
ஆகச் செமத்தியான வசூலைப் பெற்ற படம் இவருக்கு, ஆம், சொல்லிவிட்டீர்களே, ‘Johny Mera Naam’ தான். சிவாஜியின் ‘ராஜா’ பார்த்தவங்களுக்கு ஏனென்று புரிந்திருக்கும்.
மகனுக்கு ஒரு பிரேக் கொடுக்கலாம் என்று ‘Anand aur Anand’ படத்தை எடுத்தார். ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளணுமே? வேண்டாம் சாமி என்று Suneil Anand டைரக்டர் ஆகிவிட்டார்.
தேவ் ஆனந்த் அநேக விதங்களிலொரு ‘வாவ்!’ ஆனந்த்!
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!