Thursday, September 25, 2025

மிடில் கிளாஸின் அவதியை..

“ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம், கொண்டாட்டம்!
இருபத் தொண்ணில இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம், திண்டாட்டம்!”
மிடில் கிளாஸின் அவதியை ரீடிங் கிளாஸ் போட்டுக் காட்டும் இந்த கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் பாடும் பாடலை எழுதியவர்…
தமிழ் சினிமா உலகில் சரித்திரம் படைத்த ‘வேலைக்காரி’ படத்தில் ஒலித்த,
"ஓரிடம் தனிலே.. நிலையில்லா உலகினிலே..
உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே..." பாடலை எழுதியவர்…
உடுமலை நாராயண கவி... இன்று பிறந்தநாள்!
எழுதிய ஏராளம் பாட்டுகளில் இன்றும் இனிக்கும் பல உண்டு.
"மஞ்சள் வெயில் மாலையிலே... வண்ணப்பூங்காவிலே.. .
பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்... " சிவாஜி பத்மினி டூயட் 'காவேரி'யிலும்,
"காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது… தாலி
கட்டிக் கொள்ளத் தட்டிக் கழித்தால் கவலைப்படுகிறது.." எம்.ஜி.ஆர் விஜயா டூயட் 'விவசாயி'யிலும்...
"பெண்களை நம்பாதே... கண்களே, பெண்களை நம்பாதே..." என்று சிவாஜி பாடி வருவாரே ' தூக்குத் தூக்கி'யில், அதுவும், அதே படத்தில்
"குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்... கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்..." என்ற ஜி. ராமநாதனின் சூப்பர் ஹிட் பாடலும்…
சிருங்கார பாட்டுகளிலும் ஜொலித்தார்... "சிங்காரப் பைங்கிளியே பேசு.. ." ஏ.எம்.ராஜாவின் குழல் தோற்கும் குரல் ஒலித்ததே 'மனோகரா'வில்? அந்தக் காலத்திலேயே இந்த பாடல் எழுத ஒரு பெருந்தொகை கொடுத்தார்களாம்.
"பொன்னாள் இது போலே வருமோ புவி மேலே..." இது 'பூம்புகார்' படத்தில்.
"ஆடல் காணீரோ... திருவிளையாடல் காணீரோ..." எம். எல். வசந்தகுமாரியின் மதுரகானம் 'மதுரை வீரனி'ல் என்றால் "ஆளை ஆளை பார்க்கிறார்..." பிரபல பாடல் 'ரத்தக்கண்ணீர்' படத்தில்.
“ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க... கா கா கா…” என்று இவர் அழைத்தது 'பராசக்தி'யில்.
இவரது பல்லவிகள் நச்சென்று இருக்கும். மருதகாசியின் குருவாயிற்றே?
"அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்…
அம்புவியின் மீது நான் அணிபெறும் ஓர் அங்கம்..."
"தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்... அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்..." ('தெய்வப்பிறவி')
எளிமையான வார்த்தைகளில் அருமையான கருத்துக்கள்... "நல்ல நல்ல நிலம் பார்த்து. நாமும் விதை விதைக்கணும்.. நாட்டு மக்கள் மனதினிலே நாணயத்தை வளர்க்கணும்...". (‘விவசாயி')
சந்திரபாபுவுக்கும் பாடல் தந்தார். "உல்லாசமாகவே உலகத்தில் வாழவே .. மாப்பிள்ளையாக மலர் மாலை சூட கல்யாணம்.. ஆஹாஹா கல்யாணம்..." ('பெண்')

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!