Sunday, February 18, 2024

ஒரு புது உலகத்திற்கு...


சின்னப்பெண் லூயிஸுக்கு சுற்றியுள்ள உலகைக் கண்டால் பயம். வானம் கறுப்பா இருக்கே? மரத்துக்குள் என்ன ஒளிந்திருக்குமோ? அந்த வீடு பாழடைந்து போயிருக்கே? ...தனிமை அவளை வாட்டுகிறது. லைப்ரரிக்கு செல்லுகிறாள். அங்கேயுள்ள புத்தகங்கள் அவளை ஒரு புது உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. விதவிதமான விஷயங்களைப் படிக்கிறாள். கற்பனை ராஜ்ஜியத்தில் கோலோச்சுகிறாள். இப்பொழுது அவள் ஒரு புது உலகத்தை பார்க்கிறாள். புத்தகங்கள் அவள் பயத்தை அகற்றி விட்டன. காணும் உலகை நேசிக்கிறாள்..
இது பிரபல அமெரிக்க நாவலாசிரியர் Toni Morrison தன் மகனுடன் சேர்ந்து எழுதிய சிறுவர் சித்திரக் கதை. (‘Please Louise')
Toni Morrison… இன்று பிறந்த நாள்!
நோபல், புலிட்ஸர் இரண்டு பரிசும் பெற்றவர் என்றால் இவரைப் பற்றி வேறு சொல்ல வேண்டுமா என்ன?
புலிட்சர் பரிசு பெற்ற 'Beloved'... அந்த இருபத்தைந்து வருடங்களில் எழுதப்பட்ட புதினங்களில் மிகச் சிறந்தது என்று கொண்டாடப்பட்ட புத்தகம் அது. பிற்பாடு திரையிலும் ஒளிர்ந்தபோது பிரபல Oprah Winfrey அதில் நடித்தார்.
மாபெரும் புத்தக பதிப்பகமான Random House இல் எடிட்டராக இருந்ததும் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியில் ஆசிரியராக இருந்ததும் இங்கே ஞாபகப்படுத்தலாம். 2012 இல் அதிபர் பரக் ஒபாமாவிடம் Presidential Medal of Freedom ஐ பெற்றுக்கொண்டார்.
பொதுவாக விமர்சகர்களால் கொண்டாடப்படும் நாவல்கள் விற்பனையில் சறுக்குவது உண்டு, இவருடையது விற்பனையும் படைத்தது.
வாடகை தர முடியாததால் வாழ்ந்திருந்த வீடு தீ வைக்கப்பட்டபோது இவர் வயது இரண்டு. வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள குடும்பம் தனக்குக் கற்றுக் கொடுத்தது என்று சொல்லும் இவர் சின்ன வயதில் விரும்பிப் படித்தது லியோ டால்ஸ்டாயும் ஜேன் ஆஸ்டினும்.
பிரபல வாசகம் மூன்று இதோ..
‘நீங்கள் படிக்க விரும்பும் ஒரு புத்தகத்தை இதுவரை யாரும் எழுதியிராவிட்டால், அதை நீங்கள் எழுதவேண்டும்.’
‘உங்களால் கற்பனை செய்ய முடியாத ஒன்றை உங்களால் அடைய முடியாது.’
‘அறிவின் சக்தியிலும் அழகின் வீரியத்திலும் நம்பிக்கை உடையவள் நான். ஆகவே என்னுடைய பார்வையில் உங்கள் வாழ்க்கை ஏற்கனவே கலாபூர்வமானது. அதை நீங்கள் கலை ஆக்குவதற்காகக் காத்திருக்கிறது.’
இவர் நாவலில் வரும் வசனம் இரண்டு:
‘காதலிப்பவரை விட காதல் ஒருநாளும் பெரிதல்ல.’
‘நேசிக்கும் எந்த ஒன்றையும் ஒருநாளும் இழக்க மாட்டோம்.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!