Thursday, July 9, 2020

காகிதப் பூக்கள்....


அந்தப் பெரிய அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறாள் அந்தப் பெண். உள்ளே ஒரு தெருவே இருக்கிறது. ஓரமாய் ஒரு குடிகாரன். மிரட்சியுடன் அவள் நோக்க, அரை டஜன் விளக்கு வெளிச்சம் அவள் மீது பாய, காமிராவுடன் க்ரேன் ஒன்று கீழே இறங்கி வர, திகைப்பும் திகிலுமாக அவள். மழையில் உதவிய சினிமா டைரக்டரிடம் ரெயின் கோட்டைத் திருப்பித்தர ஸ்டூடியோ வந்தவள் அல்லவா அவள்?
ரஷ் பார்த்த டைரக்டர் அவள் முகபாவங்களில் அசந்து போக, அவர் தேடிய கதாநாயகி கிடைத்து விடுகிறாள். ஏற்கனவே மணமுறிவில் மனைவி, குழந்தைகளை பிரிந்து மனமுறிவில் இருக்கும் அவர் வாழ்வில் அவளால் மேலும் ஒரு முடிச்சு என்று தொடர்கிறது படம்.
‘Kaagaz Ke Phool’ இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படம். படத்தில் டைரக்டராக நடித்த படத்தின் டைரக்டர் குருதத். ஆம், மறக்கமுடியாது குருதத்! இன்று பிறந்த நாள்...
39 வயதில் மறைந்துவிட்ட முன்னணி நடிகர் -டைரக்டர். கமெர்சியல் படங்களை கலாபூர்வமாக எடுத்தவர். இவரின் ‘Pyasa’ டைம் மாகஸின் தயாரித்த உலகின் 100 சிறந்த படங்களில் ஒன்று. (திலீப் குமார் நடிக்க வேண்டிய படம். பூஜை நாளில் அவர் வரத் தாமதமாகிவிட, குருதத்தே நடித்தார்.) ‘Chaudvin Ka Chand..’ படத்தையும் சரி, பாடலையும் சரி மறக்கவே முடியாது. அப்புறம் ‘Sahib Bibi Aur Ghulam’, ‘Mr. & Mrs. 55’, ‘Aar Par’...

ஆரம்ப காலத்தில் தேவ் ஆனந்தும் இவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். தேவ் படமெடுத்தால் இவர் டைரக்டர், இவர் படம் எடுத்தால் தேவ் ஹீரோ என்று. அப்படி இவர் தேவ் ஆனந்தை வைத்து எடுத்த படம் தான் ‘C. I. D.’ என்ற மிகப் பெரும் ஹிட்.
அப்படி இவர் டைரக்ட் செய்த தேவ் படம் ‘Baazi’ அந்தப் படத்துக்கு பூஜை அன்று பாடவந்த கீதா ராய் பாடிய பாடலில் அசந்து போனார் குருதத். விரைவில் கீதாராய், கீதா தத் ஆனார்.
கார் ஆக்சிடெண்ட் ஒன்றினால் ஹைதராபாத்தில் மூன்று நாள் தங்க வேண்டி வந்தபோது இவர் காண நேர்ந்தது தெலுங்கு பட ஆடல் காட்சி ஒன்று. விளைவாக இந்தியில் அறிமுகமாவர்தான் வஹிதா ரஹ்மான்.
கமலுக்கும் இவருக்கும் ஓர் ஒற்றுமை. ஆரம்ப காலத்தில் நடன இயக்குநர்.
‘வாழ்க்கை என்கிறது ரெண்டே வார்த்தை தான்: வெற்றி, தோல்வி! இரண்டுக்கும் நடுவில் வேறு எதுவும் கிடையாது,’ என்பார் சிரித்துக் கொண்டே.
100mm லென்ஸைப் போட்டு இவ்ர் எடுக்கும் க்ளோஸ் அப் குருதத் ஷாட் என்றே பிரபலமாகிவிட்டது. பாடல்களை இவர் படமாக்குவது கிடையாது. எல்லாமே கவிதைகள்தான். ஃப்ரேம்களில் உணர்வு பூசப்பட்டிருக்கும். நிழல்களால் ஓவியங்கள் வரையப் பட்டிருக்கும்! 14 வயதினிலே விளக்கொளியில் விரல்களால் சுவற்றில் நிழல் பிம்பங்கள் காட்டியவராயிற்றே?
ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட படம் ‘Love and God’ இவர் மறைவால் நின்றது. பின்னால் அதில் சஞ்சீவ் குமார் (இதே பிறந்த நாள்) நடித்தார்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!