Friday, July 3, 2020

மனதில் மங்காத ‘வாவ்’!

அப்பா ரோலுக்கான ஜிப்பா, தப்பாமல் பொருந்துவது இவருக்குத்தான்.
கம்பீரம், கண்டிப்பு, கனிவு மூன்றையும் கொடுப்பதில் அப்படி ஒரு கச்சிதமான மிக்ஸ்!
பாத்திரத்தின் பாதியை முக பாவமே நிரப்பி விடும். மீதியை அந்தக் குரல்.
ரங்கா ராவ்...இன்று பிறந்த நாள்!
இவரை நினைத்தாலே போதும் அப்பாவின் வசனம் தானாக தோன்றிவிடும் வசனகர்த்தாவுக்கு!
ஏழை அப்பாவாக ரங்கா ராவ் என்றால் இ'ரங்கா'த மனமே இராது.
'படிக்காத மேதை'யில் அந்த ரங்கனோடு சேர்ந்து இந்த ரங்கா நம்மை உருக்கிய உருக்கம்!
விரக்தி, வேதனை, தோல்வி, இயலாமை அத்தனையும் அழுத்த மகள் சாவித்ரியிடம் வெடிப்பாரே கடைசிக் காட்சியில்… ‘கை கொடுத்த தெய்வத்'துக்கு அது எத்தனை கை கொடுத்தது!
நளினமாகப் பொருந்திக் கொண்டார் நரசிம்ம பல்லவராக, பார்த்திபன் கனவில். ‘அன்னை’யில் ஆனானப்பட்ட பானுமதியை சமாளிக்கும் விதமே அலாதி…
கேரக்டர் இவருக்குள் நுழைகிறதா, இவர் கேரக்டருக்குள் நுழைகிறாரா.. அது அந்த கேரக்டருக்குத்தான் வெளிச்சம்.
நாயகனுக்கு (சிவாஜி) நெஞ்சுவலி. டாக்டருக்கு போன் பறக்கிறது. ஏற்கெனவே ஜோசியர் கெடு வைத்த நேரம் வேறு நெருங்குகிறது. கொஞ்ச நேரத்தில் தான் செத்துப் போய்விடுவோம் என்ற நிச்சயமான பயத்தில் சிவாஜியும் சுற்றியுள்ளவர்களும் கதி கலங்க...
அப்போது கதவு திறக்கிறது. என்டர் எமன்! "எம்மா, எமன் வந்துட்டான்!" என்று அவர் அலற.. விடமாட்டேன்னு தாய் கதற..
"எல்லாருமா சேர்ந்து என் உயிரை வாங்கிடுவீங்க போலிருக்கே? விலகுங்க நான் டாக்டர்!"
நாடகத்திலிருந்து நேராக எமன் வேடத்தில் வந்து இறங்கும் ரங்கா ராவ் கிளப்பும் சிரிப்பலை! காமெடியிலும் தூள்! ('செல்வம்')
ரங்கா ராவ்! மனதில் மங்காத ‘வாவ்’!

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

ரங்கா ராவ் - நல்ல நடிகர்.... தகவல்கள் நன்று.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!