Sunday, July 5, 2020

களமாடியதில் உளமாடியவர்...

சர்க்கஸ் கூடாரம் ஒவ்வொன்றும் சொல்லும் பெயர் பார்னம். இத்தனைக்கும் அவர் தன் 60 வயதுக்கு மேல், இறங்கிய ஒவ்வொரு தொழிலிலும் சக்சஸ் பெற்றபின் தான் சர்க்கஸ் தொடங்கினார். .
அட்வெர்டைஸிங்கின் ஷேக்ஸ்பியர் என்கிறார்கள் அவரை. விளம்பர மன்னர்.
P T Barnum... இன்று பிறந்த நாள்!
மிட்டாய் தின்னும் வயதிலேயே மிட்டாய் விற்க ஆரம்பித்தவர். வயது 21 -இல் ஒரு  ஸ்டோர், ஒரு லாட்டரி பிசினஸ், ஒரு பத்திரிகை (Herald of Freedom) மூன்றுக்கும் சொந்தக்காரர் ஆகி விட்டிருந்தார்.
விசித்திர, புராதன, அதிசய பொருள்களைக் கொண்டு தொடங்கினார் தன் மியூசியத்தை 31 வயதில். அமெரிக்காவின் முதல்  அக்வேரியம் அவருடையதுதான். Fejee Mermaid என்ற மச்சக்கன்னி மற்றொரு ஹிட். 1871-இல் அது நடமாடும் மியூசியமானது. மொத்த அயிட்டங்களின் எண்ணிக்கை எட்டரை லட்சம்.
ஒட்டிப் பிறந்த பிள்ளைகளை Siamese Twins என்று சொல்லுவதற்குக் காரணமாயிருந்த அந்த ஒரிஜினல் சயாமீஸ் ரெட்டையர்களைப் ( Chang, Eng )  பற்றிக் கேள்விப்பட்டாரோ இல்லையோ, ஓடிச்சென்று சேர்த்துக் கொண்டார் அவர்களைத் தன் குழுவில் . 
ஐரோப்பியர் காதுகளை தன் soprano-க்களால் குளிர்வித்துக் கொண்டிருந்தார் ஜென்னி லிண்ட்.  ஒபேரா  பாடகி. ஒப்பேறுமா இங்கே என்று ஒரு கணமும் தயங்கவில்லை. ஒப்பந்தம் போட்டார். ஒன்றுக்கு 1500 டாலர் என்று150 நாளைக்கு. ‘ஸ்வீடிஷ் நைட்டிங்கேல்’ என்று அட்டகாசமாக அட்வெர்டைஸ்மெண்ட் செய்ய, நியூ யார்க்கில் லிண்ட் காலை வைத்தபோது முண்டியடித்துக் கொண்டு காண வந்தவர்கள் முப்பதாயிரம் பேர்.  ஆக, ஐந்து லட்சம் டாலர் வசூலித்து விட்டார். இருவரிடையே காதல் என்று வந்தது வெறும் வதந்தி. 
ரெண்டு முறை தீ விபத்து என்று விதி சர்க்கஸ் காட்ட, சர்க்கஸ் பிசினஸில் காலை வைத்தார். Arena இன்னும் விரிந்தது.
ஜம்போ சைஸ் என்று சொல்கிறோமே, அந்த வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? லண்டனில் இருந்து இவர் வாங்கி வந்த பத்தடி உயர யானைக்கு இவர் இட்டபெயர் ஜம்போ. மூன்று வருடம் அது இவர் சர்க்கஸில் முக்கிய அட்ராக் ஷன். 25 அங்குல உயர மனிதர் சார்லஸ் ஏற்படுத்திய விற்பனை மட்டுமே ரெண்டு கோடி டிக்கட்.  சேர்த்து மொத்தம் எட்டு.
ப்ரூக்லினில் புதிதாய்ப் போடப்பட்ட பாலம் பலவீனம் அல்ல என்று காட்ட, அதில் தங்கள் பட்டாளத்தை, யானை 21 ஒட்டகம் 17, நடக்க விட்டதில் பணத்தோடு போனஸாக கிடைத்தது சரியான விளம்பரம்!

இவர் கதை படமாக 2017 இல் வந்தது ‘The Greatest Showman’.  பார்னம் அவர்களை படா ஸ்டைலாக அமர்க்களப் படுத்தியவர் Hugh Jackman. அதில் பார்னம் சொல்லும் பஞ்ச் லைன் ஒன்று: "வெளிப்படையா ஒத்துக்காவிட்டாலும் வெளிநாட்டிலேர்ந்து வந்ததாவோ, பயங்கரமாவோ இருந்தா மக்கள் அதால கவரப் படறாங்க. கண்ணை அகல விரிச்சுப் பார்க்கிறது அதனாலதான்."
1891 இல் அவர் மறைய, அவர் காலத்துக்குப் பின்னும் பல்லாண்டு நீடித்த அந்த உலகின் முதல் த்ரீ ரிங் சர்க்கஸ் தன் கதவை மூடியது 2017 இல்தான்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

வியப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!