Sunday, May 10, 2020

தப்பட்… (இந்தி)


‘பளார்!’ இந்த ஒற்றை வார்த்தையைக் கொண்டு ‘பளீர்’ என்று ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள்.
லண்டன் பிராஞ்சுக்கு சி.இ.ஓ. ஆக அவனுக்கு கிடைத்துவிட்டது வாய்ப்பு. கொண்டாடுவதற்காக அந்த பார்ட்டி. ஓடியாடி ஏற்பாடு செய்யும் மனைவி. பார்ட்டி நடக்கும்போது போனில் அந்த செய்தி. சி.இ.ஓ அவனில்லையாம்! வருகிறது ஆத்திரம். வந்திருந்த சீனியரிடம் காலை வாரிட்டீங்கன்னு சாடுகிறான். குறுக்கே புகுந்து இழுத்த மனைவியை விடுகிறான் ஒரு பளார்!
விட்ட அறை விழுந்தது அவள் கன்னத்தில் அல்ல, உள்ளத்தில்!
‘அமு, உன்னோட இன்டர்நெட் சரியா வேலை செய்யலை,' என்று சொல்லும் கணவனிடம், 'எதெல்லாம் சரியா வேலை செய்யலையோ அதெல்லாம் என்னோடதாயிடும் இல்லையா?'ன்னு சிரிச்சிட்டே, 'யெஸ் சார்'னு அதை சரி பண்ணும் முதல் காட்சியிலேயே ஒரே வரியில் அவன் அறியாமல் செய்துவரும் ஆளுமையையும், உணராமலேயே நடந்து கொண்டிருக்கும் பாதையையும் விளக்கி விடுகிறார் டைரக்டர்.
அமுவின் விவாக ரத்து மனுவை ரெடி செய்த வக்கீல் தோழி அவளைக் கேட்கிறாள், "நல்லா யோசிச்சியா?"
அவள் கேட்கிறாள், ‘உனக்கு இது நடந்தா நீ என்ன பண்ணியிருப்பே?’
‘அவனை மன்னிச்சிருப்பேன்.’
‘அப்ப நான் செய்யறது தவறா?’
‘இல்லை!’ என்கிறாள்தோழி. படத்தின் ஜீவ நொடி அது. ஆமாம், எல்லாருக்கும் மனதில் தெரியும், அவன் செய்தது தப்புன்னு. ஆனா அடுத்த அடியெடுத்து வைக்க முடியாது அவங்களால். அந்த அடியைத்தான் அவள் எடுத்து வைக்கிறாள். அதை எப்படி தப்பென்று சொல்ல முடியும்?
ஒரு ஸ்க்ரிப்ட் எப்படி நகர வேண்டும்? எப்படி ஒவ்வொரு காரக்டரும் சுபாவமாக ரீயாக்ட் செய்ய வேண்டும்? சில பாடங்கள் இந்தப் படத்தில்.
படத்தின் ஹைலைட் டயலாக்தான். கதைக்குப் பொருத்தமோ, தேவையோ இல்லாமல் ஒரு வார்த்தை இருக்க வேண்டுமே? ஊஹூம்! வருடும் பின்னணி இசை! இல்லாமலிருந்து வலு சேர்க்கிறது நிறைய இடத்தில்.
படம் க்ளைமாக்ஸ் இல்லாமலே முடிகிறது… அமைதியாக. கதையே ஒரு நீண்ட க்ளைமாக்ஸாக இருக்கும்போது க்ளைமாக்ஸ் என்று ஒன்று தனியே வேண்டுமா என்ன?
டாப்ஸி.. Topஸி! முதல் மார்க் அவருக்குத்தான். வெறித்த, பிரமித்த, கனிந்த என்று விதவிதமாக வீசும் பார்வைகளே போதும்!
சிரிச்சிக்கிட்டே கிரிக்கெட் பந்தை எறியும் சுனிதா. அவளால அந்தப் பந்தைத் தான் எறிய முடியும், அதை ரசிச்சு அவள் இன்னும் இன்னும் உயரன்னு எறியும்போது அவள் முகத்தில கொப்பளிக்கும் சந்தோஷம், நம் உதட்டில புன்னகையாக… ஆனால் அவளுடைய பாத்திரத்துக்கு ஒரு முடிவு வேணுமேன்னு கடைசியில அவள் திருப்பி அடிச்சி நொறுக்கறதெல்லாம் தேவையா? அந்தப் பாத்திரத்துக்கெல்லாம் முடிவு ஏது என்பதே அதன் முடிவு, இல்லையா?
அவங்க செய்யறது சரியோ இல்லையோ ஆனால் எல்லாருமே ஒரு வித மெச்சூரிடியுடன் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, அமுவைப் போலவே, நமக்கும் இதமாக இருக்கிறது.
சில மைனஸ் பாயிண்டுகளும்... மெயின் காரக்டரை அந்தச் செதுக்கு செதுக்கினவர்கள் பேரல்லலாக வரும் பெண் வக்கீல் காரக்டரை எப்படி இத்தனை கவனக் குறைவாக.. எதற்கெல்லாம்தான் விட்டு வெளியேறுவது என்று ஒரு லிமிட் இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறதே?
2020 ஐ நினைவில வெச்சு 20, 20 நிமிஷம் எடிட் பண்ணி எடுத்திருந்தால் படம் இன்னும் பளிச்சிட்டிருக்கும்.
தீம் சாங் உருக்கம். அதிலொரு வரி:
'உறவு உடைந்து நாம் பிரிந்தபோது
மிச்சம் இருந்தது கொஞ்சமே:
கதிரொளியில் ஒரு கற்றை,
பனித்துளியால் நிரம்பியதாக!'

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க முயல்கிறேன். நல்லதொரு அறிமுகம்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!