Monday, August 12, 2019

அவர்கள்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 132

கடைத்தெருவில் சம்பத்தை சந்தித்த சாத்வீகன் புருவங்கள் உயர்ந்தன.

”சௌக்கியமா அங்கிள்?” என்றபடியே வந்தவனிடம், ”ஆ, சம்பத்! உன்னை எதிர்பார்க்கலை நான். இப்ப பசங்களுக்கு லீவாச்சே? எங்கானும் அழைச்சிட்டுப் போயிருப்பேன்னு...” என்றார்

”அதை ஏன் கேக்கறீங்க?” என்று அவரை நிழலுக்கு அழைத்தவன், ”அழைச்சிட்டுத்தான் போகணும். முடியலே.”

”ஏன் வரமாட்டேங்கறாங்களா?”

”அவங்க துடிக்கிறாங்க. என்னாலதான் அழைச்சிட்டுப் போக முடியலே.”

”புரியறாப்பல...”

”அவங்க இந்த முறை கிராமத்துக்குப் போகணும்னு ஆசைப்படறாங்க, அதான்.. நேச்சர் பத்தி நிறைய பார்க்கிறாங்க, கேள்விப் படறாங்க. வயல்காடு, மலையோரம், தென்னந்தோப்பு, சிற்றாறு, குளம் இப்படி ஒரு வாரம் தங்கி அனுபவிக்கணுமாம்.” 

”கூட்டிப்போக வேண்டியதுதானே உங்க ஊருக்கு?”

”அங்கேதான் வீடு இல்லையே... லாட்ஜும் கிடையாது. எங்கே போய்த் தங்குவேன்?”

”என்னப்பா இப்படி சொல்லிட்டே? அங்கே உனக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்கிறாங்களே? அவங்க வரசொல்லி அழைச்சிருப்பாங்களே வருஷா வருஷம்? இந்த வருஷம் ஜம்முன்னு போய் இறங்கிட வேண்டியதுதானே?”

”யாருமே அழைக்கலே. அதான் பிராப்ளம்!”

”என்னது?”

”ஆமா. இத்தனைக்கும் ஊரிலேர்ந்து எங்க வீட்டுக்கு வந்து தங்காதவங்க கிடையாது. ஆனா ஒருத்தராவது நம்மைக் 
கூப்பிடணுமே? ஒருத்தருக்கும் அந்தளவு அன்பு, பாசம் இல்லே. எல்லாம் வேஷம்.” 


”தெரியும். நான் ஒரிரு தடவை  உன் வீட்டில் சொந்தக்காரங்களைப் பார்த்திருக்கேன்.” நினைவு கூர்ந்தார் அந்த நாட்களை. 

”எல்லாம் வேஷம் போடற ஆட்கள், மாமா.”

யோசித்த இவரோ மறுத்தார் தலையைப் பலமாக ஆட்டி. ”உன் கிராமத்து சொந்தக்காரங்களை அப்படி சட்டுனு தவறா எடை போட்டுடாதே, எனக்குப் புரியுது ஏன்னு.”

”ஏன்?”

”அவங்க பயப்படறாங்க....நினைவு படுத்திப் பாரு. இங்கே உன் வீட்டில் வந்து தங்கியபோது நீங்க எப்படி வாழறீங்கன்னு 
அவங்க பிரமிப்போட கவனிக்கிறாங்க. உங்க வாழ்க்கை முறை அவங்களை திகில் படுத்தியிருக்கு. அதான் தயங்கறாங்க உங்களை அங்கே அழைக்க.’ 

”அப்படி என்ன தயக்கம்?”

”ஆமா. அது குக்கிராமம். ஓட்டு வீட்டிலே வாழறாங்க. நீங்க வந்தா அவங்களால உங்களை திருப்தியா கவனிச்சுக்க முடியுமான்னு பயம். உங்களால ஏ. சி. இல்லாம தூங்க முடியுமா, தூசியில புழங்க முடியுமா, புழுதி கிளம்பும் மண் சாலையில நடக்க முடியுமா, கலங்கின ஆற்று வெள்ளம் ஒத்துக் கொள்ளுமா, இண்டர்நெட் இல்லாம இருக்க முடியுமா, ஷாப்பிங் மால் ஏதுமில்லாம பொழுது போகுமா, பர்கர் பீட்சாவை மறக்கமுடியுமா... இப்படி பல சந்தேகங்கள். அதான் அந்தத் தயக்கம்.”

”அப்படீங்கறீங்க?”

”ஆமா,” என்றவர், ”நீ மட்டும் அங்கே வர விரும்பறோம்னு சொல்லு. அப்புறம் பாரேன் அவங்க துள்ளிக் குதிக்கிறதை!” 

”இதோ இன்னிக்கே போன் பண்றேன்,” என்று சென்றவன் அடுத்தவாரம் அங்கிருந்து உற்சாகமாக பேசினதைக் கேட்டு சந்தோஷமடைந்தார் தன் ஊகம் சரியானதில். 

('அமுதம்' டிச.2015 இதழில் வெளியானது)

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. சரியான புரிதல்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!