Saturday, August 3, 2019

அந்த சந்தோஷமும்...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 131

வாசு வீட்டுக்குள் நுழைந்த போது மணி நாலு. பெயிண்ட் அடிக்க வந்தவர்கள் கையில் கேன்களை எடுத்துக் கொண்டு ஹாலுக்குள் நுழைந்திருந்தனர். அப்போதுதான் டீ குடித்துவிட்டு வந்திருந்த திருப்தி முகத்தில் ஒளியிட்டது.
ஜனனியிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார், நாலு மணிக்கு டீக்கு பணம் கொடுத்துவிடு என்று. கொடுத்திருக்கிறாள் கரெக்டாக.  
”டீ சாப்பிட்டிட்டு வந்தவுடன் அவங்க கிட்ட ஒரு உற்சாகம் தொற்றிக்கிச்சு பார்த்தியா ஜனனி?” 
”ஆமா. ரொம்பவே. அதைப் பார்த்து நமக்கொரு சந்தோஷம் வருது,” என்றவள், ”இப்பதான் நான் போட்டுக் கொடுத்தேன்,”
”என்னது, நீயா?” சுர்ரென்று கோபம் மேலிட்டது. காட்டிக் கொள்ளவில்லை. இப்ப வேண்டாம். அவள் மூடைக் கெடுக்க வேண்டாம்.
ஆனால் அடுத்த  நிகழ்வில் அவராலேயே கட்டுப்படுத்த முடியவில்லை கோபத்தை.
கண்ணாடி பதித்திருந்த ட்ராயிங்க் டேபிளை காட்டி எப்படியிருக்கு என்றாள்.
பள பளவென்று அழகாக மின்னிற்று. ஒரு கம்பீரம் வந்து ஏறிக் கொண்டிருந்தது. 
”ஆஹா! நாம உபயோகிக்கிற டேபிளை நல்லா துடைச்ச பிறகு பார்த்தா எத்தனை சுகமா இருக்கு!"
”ஆமாங்க,” ஆமோதித்தாள். 
”செண்பகத்துக்கு ஏதாச்சும் தனியா காசு கொடு.” வேலை செய்யும் பெண் அழகாகத் துடைத்ததில்   அவருக்கு திருப்தி. 
”ஐயோ நான்தான் துடைச்சேன்.” 
”நீயா? உனக்கு ஏன் இந்த வேலையெல்லாம்? வயசாச்சேன்னு கொஞ்சம் கூட பொறுப்பில்லாம ... அதான் இதையெல்லாம் செய்யத்தான் அவங்க இருக்கிறாங்களே, அப்புறம் நாம ஏன் செய்யணும்? சொன்னா கேக்கிறதேயில்லை.” படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டார்.
”நான் ஒண்ணு சொல்லட்டுமா... எனக்கு கொஞ்சம் ஆசை அதிகம். அதனாலதான் நானே துடைச்சேன்.”
”என்னது?”
’இப்ப நீங்க சொன்னதுதான். இந்த டேபிளை நல்ல சுத்தமா துடைத்தபின் பார்க்கிறது சுகம் தானே?” 
”ஆமா.”
”எனக்கு துடைக்கிற சுகமும் வேணும்!”
”என்னது?”
”ஆமா. நாம உபயோகிக்கிற டேபிளை  விதம் விதமா அழகா கிளீன் பண்றதும் ஒரு சுகம் தான். எனக்கு அதும் வேண்டியிருக்கு.”
”ஓஹோ?”
”நேத்து அவங்களுக்கு டீ போட்டுக் கொடுத்ததும் அப்படித்தான். அவங்களுக்கு டீ கொடுக்கிறது ஒரு திருப்தின்னா அதை நானே என் கையால் தயாரிச்சுக் கொடுக்கிறதிலே இன்னொரு திருப்தி ஏற்படுது. அதும் எனக்கு வேணும். நான் டபிள் சந்தோஷம் அடையறதில ஏன் நீங்க வருத்தப் படறீங்க?”
அவளை அவர் பார்த்ததில் ஒரு பெருமை வந்து தொற்றிக் கொண்டது.
>><<
('அமுதம்'நவ. 2015 இதழில் வெளியானது)

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

பதிவு படித்து எங்களுக்கும் டபுள் சந்தோஷம்!

Thulasidharan V Thillaiakathu said...

கதை நன்றாக இருக்கிறது

கீதா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!