Thursday, August 18, 2016

அதுக்கும் மேலே...(நிமிடக்கதை)அன்புடன் ஒரு நிமிடம் - 105

வந்தவர் கையைப் பிடித்துக் கொண்டார். “தாங்க்ஸ். பையன்கிட்ட நல்ல மாற்றம்... எல்லாம் உங்களாலதான். நல்லாவே அட்வைஸ் பண்ணியிருக்கீங்க!“ 

”அட்வைஸா? மூச் விடலே நான். போனேன், தங்கினேன், வந்தேன்!” என்றார் சாத்வீகன்.

”அப்படியா? அவனைப் பார்த்து நல்லது சொல்லத்தான் சென்னைக்குப் போனீங்கன்னு..”

போன மாதம் அவர் வந்து சாத்வீகனிடம் தன் மகனைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டது உண்மைதான்.   பி,இ. முடித்ததும் மூன்று மாதத்துக்குள் நல்ல ஒரு வேலை தேடப் போறேன், ஏதோ ஸாஃப்ட்வேர் படிக்கப் போறேன்னு சென்னைக்கு போனவன் அங்கே ஏதும் உருப்படியாக பண்ணாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று  சொல்லி, நான் சொன்னா கேட்கமாட்டான், நீங்க ஒரு முறை அவனைப் பார்த்து கொஞ்சம் அட்வைஸ் பண்ணினாத் தேவலை என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

“நோ நோ. நீங்க வந்து சொன்னது ஞாபகம்தான். சென்னைக்கு போனேன்தான். அவனோடதான் தங்கினேன்.ஆனால் இந்தக் காலத்துப் பசங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்வைஸ் ஆச்சே? அப்படியிருக்க அவனிடம் என்னத்தை சொல்றது நான்? அவனைப்பற்றி வாயே திறக்கலே.”

“ஓஹோ?”

என்னதான் நடந்தது சென்னையில்?

காலை ஆறு மணிக்கு போய் இறங்கினார் அவன் அறையில்.  குளிச்சுட்டு வாங்க மாமா, டிபன் சாப்பிடலாம் என்றவனிடம் கொஞ்சம் இருப்பா என்றவர் ”என்னோட பிளானை தெளிவா ட்ராஃப்ட் பண்ணிக்கிறேன்,” என்று பையிலிருந்து பேனாவை எடுத்தார்.  அடுத்த முப்பது நிமிடம் மும்முரமாக அவர் இயங்கினார். 

”ரெண்டு பகல் ஒரு இரவு இருக்கு இங்கே எனக்கு. குளியல் சாப்பாடு தூக்கம் போக மொத்தம் 26 மணி நேரம் கிடைக்குது.” என்று சொல்லிக் கொண்டார். பார்க்க வேண்டிய நபர்கள், ஆஜராக வேண்டிய மீட்டிங் என்று வேலைகளை எழுதினார் வரிசையாக. அததுக்கு ஆகும் நேரத்தை குறித்தார்.  அப்புறம் அதில் தன் ப்ரியாரிட்டியை எண்ணிட்டார்.

அதை வைத்துக் கொண்டு காலை 8 மணிக்கு இங்கே, பத்து மணிக்கு அவர் என பொருத்தமாக அடுக்கினார். அதை எடிட் செய்து குறைக்க கூட்ட செய்ததில்  ஒரு வழியாக ஒரு டைட் கால அட்டவணை உருப்பெற்றது.
வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் சொன்னார். “எல்லா வேலைகளையும் சக்ஸஸ்ஃபுலா முடிக்கணும் இல்லையா எனக்கு இருக்கிற ரெண்டு நாளில்? அதான் இப்படி திட்டம் போட்டுக்குவேன்.  அதுபடி ஸ்டிரிக்டா இயங்கினா மட்டும்தான் விஷயம் ஒழுங்கா நடந்து முடியும். என்ன அப்படியே உட்கார்ந்திருக்கே? எழுந்திரு டிபன் சாப்பிடப் போகலாம்.”

அடுத்த இரு நாளும் அவர் நொடிக்கொரு தரம் அந்த டைம் டேபிளை எடுத்து பார்த்துக் கொள்வதும் புறப்பட்டு போவதும் வருவதுமாக இருந்ததை அவன் பார்த்தான். இந்த வயசில ரெண்டு நாள் விசிட்டுக்கே இப்படி திட்டமிட்டு உறுதியாக இயங்கும் அவருடன், படித்து வேலை தேட வந்திருக்கும்  தன்னை ஒப்பிட முடியாமல் இருக்க முடியவில்லை அவனால்.

எந்த அட்வைஸும் அவர் செய்யவில்லைதான். ஆனாலும் அவர் செய்தது அதுக்கும் மேலே என்பதை  அவன் மட்டுமே அறிவான்.  

(’அமுதம்’ மார்ச் 2015 இதழில் வெளியானது) 

3 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையான கதை! வழிகாட்டியாக செய்துகாட்டி அசத்திவிட்டார்!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
அருமை நண்பரே
இந்தக்கால இளைஞர்கள்அறிவுரையை விரும்புதில்லைதான்

வெங்கட் நாகராஜ் said...

சொல்லிப் புரியவைப்பதை விட செயலில் புரியவைப்பது நல்லது. நல்ல பகிர்வு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!