Wednesday, January 14, 2015

உள்ளம் உள்ள நீ...


அன்புடன் ஒரு நிமிடம் - 72
விசேஷ நாள் என்பதாலோ என்னவோ பல சரக்குக் கடையில் கூட்டமான கூட்டம். யமுனா கொடுத்த லிஸ்ட் வினோத் கையில்.
அலுத்துக் கொண்டான் தியாகுவிடம். “என்னடா எத்தனை நாழியா நிக்கிறோம் நம்மளைக் கவனிக்கிறாங்களா பாரு. இனி எப்ப வாங்கி முடிச்சு… எப்ப வீட்டுக்குப் போய்…”
அவன் அனத்தல்களுக்கு வெறுமே உம் கொட்டிக் கொண்டிருந்தான் தியாகு.
அடுத்தாற்போல் அவர்கள் ஸ்டேஷனை அடைந்து மின்ரயிலுக்கு நிற்க அங்கும் ரயில் தாமதம், இருபது நிமிஷமாக ப்ளாட்ஃபார்மிலேயே நிற்கவேண்டியதாயிற்று.  
அங்கேயும் அவன் எரிச்சல் தொடர்ந்தது. ”சே! என்ன, இன்னிக்குப் பார்த்து இப்படி லேட் ஆகுது!”  நொடிக்கொரு முறை சொல்ல இவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. “இருடா, இதோ வந்துரும்,”
இந்த ஸ்டேஷன் வந்து வெளியே  நிறுத்தியிருந்த பைக்கை எடுத்து வரும்போது ரெண்டு சிக்னலிலும் முழுசாக மூணு நிமிஷம்.
“பாரு நமக்குன்னு சொல்லிவெச்ச மாதிரி ரெட் விழுது. நடு ரோட்டில நின்னுட்டு… அவஸ்தைடா!”
வீட்டுக்கு வந்து சேர்ந்து அவன் அறையில் அமர்ந்தார்கள். டீப்பாயிலிருந்த வாரப் பத்திரிகையை விரித்தான் வினோத். “அப்பாடா!”
27 ஆம் பக்கத்தில் அந்த கவிதைகள் பகுதி. அவர்கள் இருவருமே ஆவலுடன் ரசிப்பது.
வரி வரியாக படித்து சிலாகித்தான் வினோத்.
“ஒரு ஏழை முதியவரின் கண்ணில் தெரிகிற பரிவை அப்படியே கண் முன் கொண்டு வர்றார் பாரு, அருமை!”
இன்னொன்றைப் படித்துவிட்டு...
”இலைப் பந்தலிட்ட மரங்களிலும் இளந்தண்டு வளைந்த பசுங் கொடிகளிலும் இன்னமும் மிச்சமிருக்கும் இயற்கையின் அழகை  நமக்கு நினைவூட்டுது இந்த வரி, பார்த்தியா.”
இன்னொன்று.
“அட, இத பாருடா, ஒரு பஸ் ஸ்டாண்டில் பேப்பர் விற்கிறவரின் கூக்குரலிலிருந்து பஸ்சை ரிவர்ஸில எடுக்கிற அந்த சவுண்டு வரை கலந்து கேட்கிற தினுசை நமக்கு அறிமுகப்படுத்தறார் பாரு.  ஆமா, என்ன யோசனை, பதிலே சொல்லாம?”
அவனைக் கூர்ந்து பார்த்தான் தியாகு, “ஒண்ணு சொல்லவா?” என்றான், “நீ இங்கே வந்து ரசிக்கிற இந்த விஷயங்கள் மாதிரிதானேடா  நாம காத்திருந்த இடத்திலெல்லாம் இருந்தது? அந்த பலசரக்குக் கடைக்கு பக்கத்தில பச்சைப் பசேல்னு எத்தனை மரங்கள், செடிகொடிகள் இயற்கை அழகு சொட்டச் சொட்ட! ரயிலுக்கு நிற்கிறப்ப  நம்மை சுத்தி கலவையா எழுந்த அந்த சப்தங்களில் எத்தனை ஸ்வரங்கள்! சிக்னலில் காத்திருந்தப்ப வழி கேட்ட ஸ்கூட்டி பெண்ணுக்கு விலாவாரியா விளக்கிட்டிருந்த அந்த முதியவர் கண்ணில் எவ்வளவு பரிவு! இங்கே வரிவரியா சிலாகிக்கிற, இத்தனை ரசனை உள்ளம் உள்ள நீ, அந்த நேரங்களில் அந்த இடங்களில் பக்கத்தில் கொட்டிக் கிடக்கிற படைப்பின் அதிசயங்களைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளாமல் ஏன் வீணா எரிச்சலும் டென்ஷனும் அடையணும்? அதான் எனக்குப் புரியலே!”
அவனுக்குப் புரிந்தது.

('அமுதம்’ ஏப்ரல் 2014 இதழில் வெளியானது)
><><><><
(படம்- நன்றி : கூகிள்)

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அறிவுரை....

தி.தமிழ் இளங்கோ said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

Raghavan Kalyanaraman said...

அவனுக்குப் புரிந்தது.
எங்களுக்கும்.
நாங்களும் இனி வாழ்க்கையை எப்படி ரசிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டோம்.
அருமை.
வாழ்த்துகள்.

‘தளிர்’ சுரேஷ் said...

அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ரிஷபன் said...

நச் !

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இத்தனை ரசனை உள்ளம் உள்ள நீ, அந்த நேரங்களில் அந்த இடங்களில் பக்கத்தில் கொட்டிக் கிடக்கிற படைப்பின் அதிசயங்களைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளாமல் ஏன் வீணா எரிச்சலும் டென்ஷனும் அடையணும்?//

அதானே! அருமை.

//அமுதம்’ ஏப்ரல் 2014 இதழில் வெளியானது//

பாராட்டுக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!