Saturday, January 24, 2015

நமக்கு நாமே...


அன்புடன் ஒரு நிமிடம் - 73
”அப்ப சாப்பாடெல்லாம் எப்படி, செல்ஃப் குக்கிங்தானே யாழினி வர்ர வரைக்கும்? பின்னே? உனக்குத்தான் சமைக்க தெரியுமே…” என்றபடியே வந்தார் ராகவ், “பார்க்கலாம் டேஸ்ட் எப்படின்னு? இன்னிக்கு உன்னோடதான் சாப்பாடு.”
“அதெல்லாம் ஆரு உட்கார்ந்து சமைக்கிறது? அதுவும் பக்கத்தில நாலஞ்சு ஹோட்டல் இருக்கிறப்ப? கால் மணியில போய் சாப்பிட்டுட்டு வந்துடலாம் அதை விட்டிட்டு ரெண்டு மணி மெனக்கெட்டு….” அலுத்துக் கொண்டான் கிஷோர்.
”அப்படீங்கிறே?” என்றவர் ஏதோ யோசித்தபடி டிவியை உயிர்ப்பித்தார்.
“முதல்ல போய் சாப்பிட்டுட்டு வந்துரலாமே மாமா?”
“உட்கார்! அருமையான படம் ஓடுது எச்.பி.ஓவில!”
படம் முடிந்தபோது…“ஆச்சு மணி பத்து. இனி ஆரு திறந்திருப்பா? இன்னிக்கு பட்டினிதான்!”
சொன்ன மாதிரியே எவரும் திறந்திருக்கவில்லை.
“கவலையே படாதே, இந்த ஏரியாவில் எனக்குத் தெரிஞச ஓட்டல் ஒண்ணு உண்டு.”
“சரி, இந்நேரம் எதும் இருக்காதே அங்கே?”
“அதெல்லாம் கிடைக்கும் பார். எனக்கு தெரிஞ்சவராக்கும்.”
“அட நம்ம சாரு! வாங்க வாங்க!” வரவேற்பு மட்டுமே அங்கே கிடைத்தது.சொன்னமாதிரியே எல்லாம் தீர்ந்திருந்தது. ஒரு வடைகூட இல்லை.
“ஐயோ, என்ன இப்படி சொல்லிட்டே? உன்னை நம்பியில்ல அழைச்சிட்டு வந்தேன் என் மருமானை!”
“அப்படியா? சரி என்ன வேணும் சொல்லுங்க. உடனே பண்ணிக் கொடுத்துடறேன்.”
கிஷோருக்கு சிரிப்பு வந்தது. இனிமேல் என்ன பண்ண ஆரம்பித்து எப்ப சாப்பிட்டு… இதிலே என்ன வேணும்னு சாய்ஸ் வேறேயா?
“சொல்லுங்க, சப்பாத்தி? பூரி? கோதுமைதோசை? பரோட்டா? இடியாப்பம்? இல்லே கொஞ்சம் சிம்பிளா சாப்பாடு?”
”எனக்கு நைட்ல சாப்பாடுதான்.. இவனுக்கு சப்பாத்தி கிடைச்சா ஒரு வெட்டு வெட்டுவான்.. என்ன கிஷோர்?”
அவன் கிண்டலாய் தலையசைக்க அந்த நபர் வேலையில் இறங்கினார். கடையில் வேறு ஆளும் இல்லை. சின்ன ஹோட்டல். பார்த்தாலே தெரிந்தது அடுப்பு கிரைண்டர் மிக்ஸி எல்லாம்.
”பார்க்கலாம் என்ன பண்றார்னு!” என்று இவனுடன் அடுப்புக்கு பக்கத்து சீட்டுக்கு நகர்ந்தார்.
எண்ணி முப்பதாவது நிமிஷம் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தயாராகி வந்துவிட்டது டேபிளுக்கு.
இவன் புருவங்கள் உயர்ந்தன. குக்கரில் வைத்த சாதம், மணக்க மணக்க மிளகு ரசம், பூசணிக்காய்க் கூட்டு, பொரித்த அப்பளம்…. போதுமே அவருக்கு!
இன்னொரு பக்கம் சப்பாத்தியும் தொட்டுக்க தக்காளியைப் போட்டு ஒரு குருமா. சுடச்சுட….
ஆச்சரியத்தையும் சேர்த்து விழுங்கினான் சப்பாத்தியுடன்.
மறுநாள் இரவு.
”என்னடா சாப்பிடப் போய்விட்டு வந்திட்டியா? நேத்து என்னால நேரமாயிடுச்சே?” போனில் ராகவ்.
“இல்லே மாமா,  நேத்து கவனிச்சேன். இன்னிக்கு இருக்கிற வசதிக்கு ஒரு பிளானைப் போட்டு ரெண்டு கைகளையும் உபயோகிச்சா என்ன வேணா பண்ணலாம் நிமிஷத்திலேன்னு!  இத்தனை சீக்கிரமா ஒரு சமையலை நாம செஞ்சு முடிக்க முடியும்னு இருக்கிறப்ப நமக்குப் பிடிச்ச மாதிரி வெளியே அலையாம  நானே பண்ணி சாப்பிடறது எத்தனை நல்ல விஷயம்னு  நினச்சுப் பார்த்தேன். வர்றீங்களா இன்னிக்கு அடையும் வெங்காய சட்னியும்.”

“எதிர்பார்த்தேன்!” என்றார் ராகவ்.
(’அமுதம்’ ஏப்ரல் 2014 இதழில் வெளியானது)
(படம்- நன்றி; கூகிள்)

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... என்ன வேணா பண்ணலாம்... திறமையும் வளர்க்கலாம்...

Rekha raghavan said...

ஆஹா அருமை. படிக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறதே!

ராமலக்ஷ்மி said...

//ரெண்டு கைகளையும் உபயோகிச்சா என்ன வேணா பண்ணலாம் நிமிஷத்திலேன்னு! //

அருமை!

ப.கந்தசாமி said...

அருமையோஓஓஓஓஓஓஓ அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம்.

சென்னை பித்தன் said...

அருமையான கதை

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இத்தனை சீக்கிரமா ஒரு சமையலை நாம செஞ்சு முடிக்க முடியும்னு இருக்கிறப்ப நமக்குப் பிடிச்ச மாதிரி வெளியே அலையாம நானே பண்ணி சாப்பிடறது எத்தனை நல்ல விஷயம்னு நினச்சுப் பார்த்தேன்.//

மிகவும் நல்ல விஷயம். சுத்தம் + சுகாதாரமாக இருக்க இதுதான் ஒரே வழி.

//அமுதம்’ ஏப்ரல் 2014 இதழில் வெளியானது//

மகிழ்ச்சி. பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!