Thursday, June 19, 2014

நினைப்பதற்கு நேரமில்லை...



அன்புடன் ஒரு நிமிடம் - 60 

நுழையும்போதே கோபம் நுரை தள்ளிற்று கிஷோர்  முகத்தில் 

"ஏன் மாமா, நீங்க பண்ணினது உங்களுக்கே நல்லாயிருக்கா?"

எதைச் சொல்றே? என்றது பார்வை.

"ஊருக்குப் போய் எங்கப்பா, அம்மாவைப் பார்த்துட்டு வந்தீங்க. நல்லது... அக்கறையா விசாரிக்கிறானே தம்பின்னு அவங்களும் ஊரில தனியா இருந்துகொண்டு படற கஷ்டங்களை கொஞ்சம் சொல்லியிருக்காங்க. அவர்களால் இங்கே வரமுடியலே. எங்களுக்கு அங்கே போய் இருக்க முடியலே. சிரமம் தவிர்க்க முடியாதது. சொல்ற கஷ்டங்களுக்கு கொஞ்சம் காது கொடுத்துட்டு நாலு வார்த்தை ஆறுதல் சொல்லிட்டு வர வேண்டியதுதானே? அதை விட்டிட்டு.."

"விட்டிட்டு?"

"அவங்களை மேலும் பயமுறுத்தி.. அங்கே ஒருத்தி வேலை பார்த்துட்டு இருந்தாள், அவளைப் பார்த்தா சந்தேகமா இருக்குன்னு சொல்லி... இந்தக் காலத்தில யாரையும் நம்ப முடியாது, வரவர திருட்டு, கொள்ளை அதிகமாய்ப் போச்சுன்னு அங்கலாய்ச்சு... உங்களுக்குத்தான் ஹெல்த் பிரசினை ஏதும் இல்லையே, உங்க வேலைகளை, கொஞ்சம் தானே இருக்கும், அதை  நீங்களே பார்த்துக்கலாமேன்னு உசுப்பிவிட்டு...ஆக இப்ப அவளை வேலையிலிருந்து நிறுத்திட்டாங்க. நாலு நாளா  அவங்க வேலையை அவங்களே செஞ்சிட்டு இருக்காங்க. போய்ப் பார்த்தா அவங்களுக்கு வரிசையா ஏதாவது வேலை இருந்திட்டே இருக்கு. ஏன்  மாமா, ஏற்கெனவே அவங்க மகன்களைப் பிரிஞ்சு தனியா வாழ்ந்துட்டு எப்பவும் எங்களைப் பத்தியே நினைச்சிட்டு சதா கவலைப்பட்டுட்டு இருக்கிறாங்க. அதுக்கு  மேலே இது வேறயா?"

"அப்படியா? ஸாரி.  பொறுத்துக்க.  எப்படியாவது நம்பகமான இன்னொரு வேலைக்காரியை ஒரு மாசத்துக்குள்ளே பார்த்துக் கொடுக்கறேன்," என்று அவனை சமாதனப் படுத்தி அனுப்பினார் ராகவ்.

சொன்ன மாதிரியே ஒரு மாதத்துக்குப் பின் அவனை சந்தித்தபோது கேட்டார், "என்ன கிஷோர், நம்பகமான ஒரு ஆளை பார்த்துட்டேன், அடுத்த வாரமே அனுப்பி வைக்கவா?"

"அது வந்து மாமா... வேணாம். அவங்க இப்ப நல்ல ஹாப்பியா இருக்கிற மாதிரி தெரியுது. நேத்துகூட  பார்த்தேன். எதைப் பத்தியும் கவலைப் பட நேரமில்லாம அவங்க வேலையை அவங்களே செய்துட்டு அப்பப்ப  டி.விபத்திரிகைகள்னு ரெஸ்ட் எடுத்திட்டு பிசியா இருக்கிறாங்க.  கொஞ்ச நாளா  நல்ல தூக்கமும் வருதுன்னு சொல்றாங்கரெண்டு பேருக்கும் நோய் ஏதும் இல்லைங்கிறதால அதெல்லாம் செய்யறதில கஷ்டமும் இல்லேன்னு சொல்றாங்க. ஏன், செடிகளுக்கு தண்ணீர் விடறது நல்ல பொழுதுபோக்காவும் வேலையாகவும் இருக்கும்னு சொன்னதால.  போன வாரம் ரெண்டு ஆளை விட்டு ஒரு தோட்டம் போட்டு கொடுத்திருக்கேன்ஒரு வகையில நல்லது தான் நடந்திருக்குநீங்க என்ன காரணத்துக்காக சொல்லியிருந்தாலும்!"

"அந்தக் காரணத்துக்காகத்தானேப்பா அப்படிச் சொன்னேன்?" என்று அவர் சொல்லவே இல்லை
  

 (’அமுதம்’ டிசம்பர் 2013 இதழில் வெளியானது)
><><><
(படம்- நன்றி: கூகிள்)

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள யோசிக்க வைக்கும் சிறுகதை.

அமுதம் இழதில் வெளியானதற்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

மாற்றி யோசித்தல் என்பது இதுதானோ
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

வணக்கம்

அமுதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Mahi said...

:) Good thought and interesting execution! :)

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது நடந்ததை புரிந்து கொண்டது சரி...

இராஜராஜேஸ்வரி said...

காரண விதை ஊன்றி அது செழித்து வளர்ந்து பூத்துக்குலுங்வது
மனதிற்கு நிறைவாக இருக்கிறது..

வெட்டி நினைவுகளால் ஆரோக்கியம் சீர்கெடாமல் நலமளிக்கிறது..

பாடமாக அமைந்த பதிவுக்குப் பாராட்டுக்கள்.!

ADHI VENKAT said...

நல்லதொரு விஷயம். சிறப்பான கதை.

கீதமஞ்சரி said...

To rest is to rust என்பார்கள். சோம்பிக்கிடக்கும் மனத்தில்தான் பலவித தேவையற்ற எண்ணங்களும் சிந்தனைகளும் உருவாகிக் கொண்டு மனத்தையும் உடலையும் வருத்திக் கொண்டிருக்கும். பிரச்சனையின் வேரைத் தேடி சரிசெய்த மாமாவுக்கும் அழகிய கதையால் அதை வாசகர்க்கும் உணர்த்திய தங்களுக்கும் பாராட்டுகள் ஜனா சார்.

கீதமஞ்சரி said...

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.
http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு முறையும் ஒரு நல்ல அறிவுரையைச் சொல்லும் உங்கள் பதிவுகள்.........

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி ஜனா சார்.

மனோ சாமிநாதன் said...

மிக அருமை!

உடலும் உள்ளமும் தேங்கிக்கிடக்கும்போது தான் குழம்பிய குட்டையாகி மன நோய்க்கும் உடல் சார்ந்த நோய்களுக்கும் காரணங்களாகின்றன! சுறுசுறுப்பான உடலும் உற்சாகமான மனமும் என்றுமே புத்துணர்ச்சிக்கு காரணங்களாகி விடுகின்றன. இந்த ஆழமான உண்மையை அழகான கதையாக்கி பலருக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய பதிவாக வெளியிட்டிருக்கிறீர்கள்! அன்பு நன்றி!!

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். செய்வதற்கு ஏதுமற்ற வேளைகளில்தான் தேவையற்ற சிந்தனைகள் ஆக்ரமிக்கின்றன. நல்ல கதை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!