Wednesday, May 7, 2014

தொடங்குவது தொடரும்...


அன்புடன் ஒரு நிமிடம் - 58

"பலத்த யோசனை போலிருக்கு!" என்றார் சாத்வீகன்.

'மோட்டுவளை'யிலிருந்து பார்வையை இறக்கினான் அபிஜித். 'இவரிடமும் கேட்கலாமே?' புன்னகைத்தான். "ஒரு சாய்ஸ் தீர்மானிக்கணும். காலையிலிருந்தே யோசனை. நீங்க சொல்லுங்களேன் தாத்தா..."

"சொன்னால் அது என்னோட சாய்ஸாக அல்லவா இருக்கும்?"

"அத்தனைக்கத்தனை பெட்டராகவும் இருக்குமே?" சிரித்தான். "இன்னிக்கு லீவாச்சே, உருப்படியா ஒரு விஷயம் செய்யலாம்னு நினைச்சேன். ரெண்டு முக்கியமான காரியம், ஏற்கெனவே மனசிலே போட்டு வெச்சிருந்தது, இருந்தது. அதிலே எதை செய்யறதுன்னுதான் தீர்மானிக்க முடியலே...."

"ஏன், ரெண்டையுமே..." என்று ஆரம்பித்தவர் வாயை மூடிக் கொண்டுவிட்டார். அதில் ஒன்றைத்தான் செய்யணும் என்பதில் அவன் உறுதியாக இருக்கிறான் என்பதுதான் எழுதாத குறையாக முகத்தில் தெரிகிறதே ... "சரி, ஷூட் தம்."

"ஒண்ணு இந்த வெண்டைக்காய் வித்துக்களை விதைக்கிறது. நம்ம வீட்டு முற்றத்தில சும்மா கிடக்கிற அந்த இடத்தில..."

"சின்ன வேலைதான். அடுத்தது?"
"
அது கொஞ்சம் கஷ்டமானது. இந்த நாலு புத்தகத்தையும் படிச்சுப் பார்த்து அஞ்சு பக்கத்தில ஒரு கட்டுரை எழுதணும்."

யோசிக்க ஒரு நிமிட அவகாசம் கூட எடுத்துக் கொள்ளவில்லை அவர் . " கிளீயர் சாய்ஸ். இதில குழம்ப என்ன இருக்கு? சரி வேறே யாரிடமாவது எதைச் செய்யறதுன்னு கேட்டியா?"

"மூணு பேரிடம்! அம்மா, அப்பா, அப்புறம் என் ஃப்ரண்டு வேணு...."

"என்ன என்ன சொன்னாங்க?"

"எல்லாருமே ஒரே மாதிரி... கட்டுரை எழுதறதைத்தான்! தெரியும் எனக்கு, உங்க சாய்ஸும் அதுவாய்த்தான் இருக்கும்."

"நோ. முதலாவது! அந்த வெண்டைக்காய் விதைக்கிறது."

இவனால் நம்ப முடியவில்லை. ஆச்சரியம் மின் விசிறியாய் மனதில் சுழன்றது.

எல்லாருமே அவனிடம், ஒரு விஷயம் உருப்படியாய் செய்யணும்னு தீர்மானிச்சுட்டே. அப்படீன்னா இரண்டில் எது ரொம்ப கஷ்டமானதோ, முக்கியமானதோ அதை செய்யறது தானே திருப்தி தருவது? என்று அழகாய்க் காரணம்கூட சொன்னார்கள்.

அதை சொன்னான் அவரிடம்.

"அஃப் கோர்ஸ், அவங்க சொன்னது சரிதான் ஒரு கோணத்தில். ஆனா அவங்க ஒரு விஷயத்தைக் கவனிக்க மறந்துட்டாங்க. கட்டுரை எழுதறது கஷ்டமான வேலைதான். சிறப்பானதும் கூட. மூளையை நல்ல ட்ரில் வாங்கறதுதான். ஆனா அந்த வேலையை நீ செஞ்சிட்டா அது இன்னியோட முடிஞ்சிடுது. வெண்டைக்காய் விதைக்கிறது வெகு சிறிய காரியம். என்றாலும் அது ஒரு தோட்டத்தின் தொடக்கம். ஒரு பிராஜெக்டின் ஆரம்பம். நாளையிலிருந்து அதில் உனக்கு தினமும் வேலையும் பொறுப்பும் இருக்கு. விதைக்கிறதுன்னு இன்னிக்கு நீ கமிட் செய்துவிட்டால் தொடர்ந்து உன் உழைப்பையும் யோசனையையும் செலுத்தணும். பின்னாட்களில் வரும் திருப்தி அளவிட முடியாதது. ஆக ஒண்ணைத்தான் என்றால் அதைத் தேர்ந்தெடுக்கிறதுதானே உத்தமமான சாய்ஸா இருக்கும்? அந்த இன்னொரு முக்கியமான விஷயம்... அதை நீ எப்படியும் செய்து விடுவாய். ஆனால் இதை நீ தொடங்கினால் மட்டுமே தொடர்ந்து அந்த விஷயம் நடக்கும்."

யோசித்தான். 'அட, இதை யோசிக்கலியே?'

(’அமுதம்நவம்பர் 2013 இதழில் வெளியானது.’)
><><
(படம் - நன்றி: கூகிள்)

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஒரு தோட்டத்தின் தொடக்கம். ஒரு பிராஜெக்டின் ஆரம்பம்.

உத்தமமான பசுமையான யோசனை....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆனால் இதை நீ தொடங்கினால் மட்டுமே தொடர்ந்து அந்த விஷயம் நடக்கும்."//

அழகாகத்தான் யோசனை சொல்லியுள்ளார்,

//அமுதம்’ நவம்பர் 2013 இதழில் வெளியானது.//

வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - நல்லதொரு ஆலோசனை - பதிவு நன்று - அமுதம் இதழில் சென்ற ஆண்டே வெளியானது குறித்து மிக்க ம்கிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஆலோசனை தான் கொடுத்திருக்கிறார்.....

ராமலக்ஷ்மி said...

யோசிக்க வைக்கிறீர்கள் எல்லோரையுமே.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கதை! வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

ஒரு தோட்டத்தின் தொடக்கம். ஒரு பிராஜெக்டின் ஆரம்பம். நாளையிலிருந்து அதில் உனக்கு தினமும் வேலையும் பொறுப்பும் இருக்கு//

அருமையான ஆலோசனை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!