Saturday, September 28, 2013

மூன்றில் ஒன்று....

 
 
அன்புடன் ஒரு நிமிடம் - 45

 
 
பொதுவாக பிறந்த வீட்டுக்குச் சென்று வந்தால் முகம் மலர முதல் நாள் கழியும் மனைவிக்கு என்றறிவார் வாசு. ஆகவே வழக்கத்துக்கு விரோதமாய் வாடிய முகம் ஜனனி காட்டியதில் அதிர்ந்தார். கவலையுடன் விசாரித்தார் காரணத்தை.
 
பின்னே என்னங்க, மூணு அட்டெம்ப்டும் தோல்வின்னா? அசந்து போயிட்டேன்.
 
வீட்டில என்ன நடந்தது? கொஞ்சம் விலாவாரியா...
 
என்ன விஷயமா போனேன்னுதான் உங்களுக்குத் தெரியுமே?”
 
தெரியும். அவள் தங்கை எழிலிக்கு புகுந்த வீட்டில நேருகிற பிரசினைகள் எதனாலென்றும் எப்படி அதை சரிப்படுத்துவதென்றும் இவர்கள் பேசியதை விளக்கத்தான் போனாள். போன வாரம் நடந்த அந்த சம்பவம்... அதை உதாரணமாகச் சொல்லலாம் என்று.
 
அடுத்தவார மெல்லிசைக் கச்சேரிக்கு எழிலி தன் கணவனிடம் ரெண்டு டிக்கட் மட்டும் எடுத்துட்டு வரச் சொன்னது பிரசினையாகி விட்டது. கூட்டுக் குடும்பம். மாமனார், மாமியார், கொழுந்தன், நாத்தனார் சேர்த்து ஆறு பேர். குடும்ப பட்ஜெட் போடறது அவள்தான். டிக்கட் விலைக்கும் நம்ம பட்ஜெட்டுக்கும் ரெண்டு பேர்தான் போகமுடியும், யார் யார்னு அப்புறம் யோசித்து முடிவு பண்ணிக்கலாம்னு சொல்லிவிட்டாள். அது பெரிய பிரசினையாகி விட்டது.
 
சாதாரணமாய் பலரும் உணர்வால் அணுகும் இந்த மாதிரி விஷயங்களை இப்படி அவள் அறிவு பூர்வமாக அணுகி சமயோசிதமாக முடிவெடுப்பதால்தான் அந்தக் குடும்பத்தில் அவளுக்கு பெரும்பாலான பிரசினைகள் ஏற்படுகிறது, பொறுப்பைக் கொடுத்தவர்கள் தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் கொடுக்கவேணும் அல்லவா? என்பதுதான் இவர்கள் ஜனனியின் வீட்டாருக்கு உணர்த்த நினைத்த கருத்து.
 
சொன்னியா?”
 
மூணு தடவை! மூணு விதமா சொல்லிப் பார்த்தேன். பலன் பூஜ்யம்.
 
மூணு தடவையா? ஏன்?”
 
முதல்ல அப்பாவிடம் சொன்னேன். அந்த சம்பவத்தை நடந்ததை நடந்தபடி அப்படியே விவரமா சொன்னேன். அவரே புரிந்து கொள்வார் எங்கே தவறென்று என்று. எல்லாத்தையும் கூர்ந்து கேட்டுவிட்டு யோசனையில் ஆழ்ந்தார். என்ன சொன்னார் தெரியுமா? எழிலி பேரில்தான் தப்பு, இந்த மாதிரி எல்லாரும் பிரியப்படக்கூடிய விஷயத்துக்கு பட்ஜெட் பார்க்கக்கூடாது,  அப்படீன்னு!
 
ஆக நடந்ததை நடந்தபடி ஒண்ணு விடாமல் அப்படியே விவரித்ததில், எடுத்துக் கொள்ளவேண்டிய கருத்தை அவர் எடுத்துக் கொள்ளவில்லை அப்படித்தானே?”
 
அதான் என் முதல் வருத்தம். அடுத்தது அண்ணன்கிட்டே! சாயங்காலம் அவனிடம் பேசும்போது அந்த சம்பவத்தில் அவள் எப்படி அதை உணர்வு பூர்வமாக அணுகிக் குழப்பவில்லை என்பதில் அழுத்தம் கொடுத்து சம்பவத்தை மறுபடி விளக்கினேன். கேட்டுட்டு அவனும், நோ, நோ, இதுலே எல்லாம் அவங்க அவங்க ஆர்வத்தை முதலில் கேட்டுவிட்டுத்தான் அவள் தீர்மானிக்கணும்னு  சொன்னான்.
 
அப்ப அதே சம்பவத்தை உன் பார்வையில் சொன்னபிறகும் அதே முடிவுக்குத் தான் அண்ணன் வந்தான்?”
 
ஆமா. அதனாலதான் மூணாவதா அக்காவிடம் மறுநாள் காலை பேசும்போது எழிலியோட விவரமான செயல்பாட்டை நல்லாவே பில்ட் அப் கொடுத்து அந்த சம்பவத்தை விவரித்துப் பார்த்தேன். அவளிடமும் அதே  ரீயாக் ஷன்! தங்கை பேரில்தான் தவறுன்னு.
 
அதாவது உன் பாயிண்டுக்கு ஏற்ற மாதிரி மிகைப் படுத்தி சொன்னபின்னும் அதே  முடிவுக்குத்தான் அக்கா வந்தாங்க?!
 
தலையை ஆட்டினாள். எப்படிங்க? எப்படிங்க?”
 
எல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்! என்றார். அதான் மனுஷங்க இயல்பு! நாம என்ன விதத்தில் சொன்னாலும் தாங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கிறார்களோ அந்தக் பார்வையில்தான் பலர் ஒரு விஷயத்தை தீர்மானிக்கிறாங்க. ஆக நீ இதில் வருத்தப்பட ஏதுமில்லை. நீ முதலில் செய்தது சரியான விஷயம்தான். நடந்ததை நடந்தபடி சொன்னது! அதையே எப்பவும் செய். அவங்க என்ன பாயிண்டை எடுத்துக் கொள்கிறாங்களோ அதை எடுத்துக் கொள்ளட்டும். அப்படி எடுத்துக் கொள்ளுவது எப்படி தவறுன்னும், நீ எப்படி எடுத்துக்கிட்டே, அதுக்கான காரணம் என்னன்னும் சொல்றதோட உன் பொறுப்பு தீர்ந்தது. பல வேளைகளில் அவ்வளவுதான் நீ செய்யவும் முடியும்! என்றார், "சரிதானே?” 
 
விசனம் விலகியது அவள் முகத்தில்.
 
('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது)
<<>>
 (படம்: நன்றி : கூகிள்)
 

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

யதார்த்தமானதொரு விஷயத்தை வெகு அழகாகச்சொல்லி முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு கட்டுரை...

அவரவர் பார்வையில் வாழ்க்கை வேறுபடும்...

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

கீதமஞ்சரி said...

குடும்பப்பிரச்சனைகளுக்கு வெகு சுலபத் தீர்வாக தங்கள் குறுங்கதைகளைக் கொண்டு ஒரு கையேடு தயாரித்து வைத்துக்கொள்ளலாம் போலுள்ளது. அவ்வளவு சிறப்பான கருத்துக்களை மிக எளிமையான முறையில் கதையாகச் சொல்லி அசத்துகிறீர்கள். மனமார்ந்த பாராட்டுகள் சார்.

கோமதி அரசு said...

எந்தக் கோணத்தில் பார்க்கிறார்களோ அந்தக் பார்வையில்தான் பலர் ஒரு விஷயத்தை தீர்மானிக்கிறாங்க.//
உண்மைதான்.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கும் பார்வையில் தான் எல்லா விஷயமும்.....

நல்ல கருத்து.

ராமலக்ஷ்மி said...

சரிதான். அவ்வளவுதான் செய்ய முடியும்.

கதை அருமை.

ராமலக்ஷ்மி said...

சரிதான். அவ்வளவுதான் செய்ய முடியும்.

கதை அருமை.

இராஜராஜேஸ்வரி said...

நடந்ததை நடந்தபடி சொன்னது! அதையே எப்பவும் செய். அவங்க என்ன பாயிண்டை எடுத்துக் கொள்கிறாங்களோ அதை எடுத்துக் கொள்ளட்டும். அப்படி எடுத்துக் கொள்ளுவது எப்படி தவறுன்னும், நீ எப்படி எடுத்துக்கிட்டே, அதுக்கான காரணம் என்னன்னும் சொல்றதோட உன் பொறுப்பு தீர்ந்தது. பல வேளைகளில் அவ்வளவுதான் நீ செய்யவும் முடியும்!

விசனத்தை விலக்கி
விளக்கமளித்த அருமையான தீர்ப்பு..பாராட்டுக்கள்..!

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - கதை அருமை - அமுதத்தில் வெளிவந்ததற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!