Tuesday, November 27, 2012

தனக்கே தெரிகிறபோது...


அன்புடன் ஒரு நிமிடம் - 21

தனக்கே தெரிகிறபோது...

வாசல் பக்கம் சென்று சென்று மீண்டது யமுனாவின் பார்வை. காலையில் லேட்டாகிவிட்டது என்று கோபத்தோடு ஆபீஸ் சென்ற வினோத் என்ன மூடில் வருகிறானோ?

காலையில் மகன் யுவனைப் பிடித்து விரட்டிக் கொண்டிருந்தான்.

என்ன அங்கே நாய்க்குட்டியோட விளையாடிக்கிட்டிருக்கே? கணக்குப் பாடம் எடுத்து போடக்கூடாதா?... அன்னிக்கு ஏதோ பாஸ்ட் பெர்ஃபக்ட் டென்ஸ் புரியலேன்னு சொன்னியே, வா, ரென் அன் மார்டினை எடுத்து அந்த சேப்டரை படிச்சு எக்ஸர்சைசைப் போட்டுப் பாரு முதல்ல... காலையில படிச்சாதானே மனசில நிற்கும்?...” அப்படி இப்படி அவனை செலுத்தியதில் அரைமணிக்கு மேல் காணாமல் போய்விட்டது. பாக்கி தினசரி விஷயங்களை அரக்கப் பரக்க முடித்துக் கொண்டு அவசரம் அவசரமாகக் கிளம்பினான். லேட்டு, லேட்டுதான் இன்னிக்கு!

ஆனால் என்ன ஆச்சரியம்! சிடுசிடு முகத்தை எதிர்பார்த்தவளுக்கு சிரித்த முகம் காட்சி தந்தது. உள்ளே நுழைந்த கணவன் முகத்தில் உற்சாகம் பொங்கி வழிந்தது.

தெரியுமா இன்னிக்கு ஆபீஸில? மேனேஜர் என்னை மட்டம் தட்டப் பார்த்தார். ஆனா நான் அவரை அவுட்விட் பண்ணிட்டேன்! Showed him his place!” என்று ஆரம்பித்தான்.

அப்படி என்னங்க பண்ணினார்?”

மத்தியானத்திலிருந்தே தேவையில்லாம என்னை ஒட்டிட்டிருந்தாரு. அடிக்கடி காபினுக்கு அழைத்து, என்ன வினோத், அந்த பாலன்ஸ் ஷீட் என்னாச்சு? போனவாரமே தொடங்கினீங்களே அந்த இண்டெரிம் ரிப்போர்ட் இன்னும் முடியலையாக்கும்? எனக்கு இந்த காஸ்ட் ரிடக்ஷன் ப்ரஜக்ஷனை போட்டுக் கொடுங்கன்னு வற்புறுத்த ஆரம்பிச்சார்.  பார்த்தேன். இது சரியில்லையே, இப்படியே விட்டால் நல்ல பிரிச்சி மேஞ்சிருவாரு நம்மை. அப்புறம் நம்ம திறமையோட வேல்யூ நமக்கே ஜீரோவாகப் படுமேன்னு சுதாரிச்கிக்கிட்டேன். சார், இத பாருங்க, எனக்கென்ன வேலை செய்யறதில இன்ட்ரஸ்டே இல்லைன்னு சொல்ல வர்றீங்களா? எல்லாம் இருக்கு. எல்லாம் அந்தந்த டைமில தான் முடியும்னு காட்டமா பதில்களை சொன்னேன். அவ்வளவுதான். அசந்து ரிட்ரீட் ஆயிட்டார். பின்னே நம்மகிட்டே நடக்குமா?”

அப்புறம் என்ன ஆச்சு?”

அப்புறம் என்ன, நான் நான்தான்னு புரிஞ்சிக்கிட்டாரு. மூணு மணிபோல இருக்கும். கிட்டே வந்தார். என்ன வினோத், ஒண்ணும் சீரியஸா எடுத்துக்கலையே? ஒரு சின்ன ரிக்வஸ்ட். எனக்கு இந்த ப்ரஜக்ஷனை இன்னிக்கு அனுப்பியாகணும். நீங்க நினைச்சா முடியும். நல்லாவே போடுவீங்களே? போட்டுக் கொடுத்தீங்கன்னா ரொம்பவும் அப்ரிஷியெட் பண்ணுவேன்னு முகத்தில புன்னகையோட சொன்னாரு. நானும் உடனே அதைப் போட்டுக் கொடுத்தேன். அதட்டாம வற்புறுத்தாம இப்படி சொல்ல வேண்டிய விதத்தில சொன்னால்தானே நானும் மனப்பூர்வமா மனம் ஒன்றி அதில ஈடுபட முடியும், ரிசல்டும் நல்லாயிருக்கும்?” என்று தன் சாமர்த்தியத்தையும் சமர்த்தையும் அவளிடம் சமர்ப்பித்தான்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. மனதில் ஏதோ ஓட, வேறெங்கோ தாவிற்று பார்வை.

யமுனாவின் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தான் வினோத். மூலையில் மேஜையடியில் அமர்ந்து பாடம் படித்துக்  கொண்டிருந்த விகாஸ்!

காலையில் அவனை தான் அதட்டியதும் விரட்டியதும் நினைவுக்குள் விரிந்தது இவனுக்கு. அவனிடம் நானும் இப்படி நடந்து கொண்டிருந்தால் இன்னும் முனைப்பாக இறங்கியிருப்பானோ தன் படிப்பில்?’
<<<>>>>
('அமுதம்' அக்டோபர் 2012 இதழில் எழுதியது)

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்கிற விதத்தில் சொன்னால் எல்லாம் நடக்கும்...

ADHI VENKAT said...

பணிவாக சொன்னால் எல்லாம் நடக்கும்...

நல்லதோர் பகிர்வு. பாராட்டுகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகானதோர் படிப்பிணை. தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால், வேலை செய்பவருக்கும் வேலை வாங்குபவருக்கும் டென்ஷன் இல்லாமல், சுலபமாக அந்த வேலை முடிந்து வெற்றி கிடைக்கும்.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ரிஷபன் said...

தன்னைப் போலவே பிறரும் என்று உணர்ந்து விட்டால் அப்புறம் சிக்கல் ஏது

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு. தனக்கு எது நியாயமோ அதுதானே மற்றவருக்கும்....

Admin said...

வெளிப்பாடு எப்படி என்பதை பேசும் சொற்கள் சொல்லிவிடுகிறது,,

ராமலக்ஷ்மி said...

/ நானும் இப்படி நடந்து கொண்டிருந்தால் /

சிந்திக்க வேண்டும் ஒவ்வொருவரும். நல்ல கதை.

தி.தமிழ் இளங்கோ said...

அலுவலகத்தில் அவன் பெற்ற பாடமும் அவன் மகன் வீட்டில் பெற்ற பாடமும் என்று நல்ல ஒப்புவமை.

cheena (சீனா) said...

அன்பின் ஜனா

சிறு கதை அருமை - எப்பணியினையும் புன்முறுவலோடு கூறீனால் செய்பவர்களும் ஈடுபாட்டுடன் செய்வார்கள். இருவருக்குமே மகிழ்ச்சியாக இருக்கும். அமுதம் இதழில் வெளியானது குறித்து மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Yaathoramani.blogspot.com said...

அருமையான கருத்து
அனைவருக்குமானதும் கூட
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Rekha raghavan said...

வாழ்க்கையில் வெற்றி பெற இது நல்லதொரு தாரக மந்திரம். அருமை

ரேகா ராகவன்

இராஜராஜேஸ்வரி said...

தனக்கே தெரிகிறபோது...
பணியுமாம் என்றும் பெருமை !!!

Ranjani Narayanan said...

தனக்குத் தெரிகிற போதுதான் பிறரைப் பற்றிப் புரியும்.
நல்லதொரு கதை.
பாராட்டுகள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!