Wednesday, May 9, 2012

இதற்காகத்தானா?




 (இது என்னுடைய 101 -வது பதிவு!)

அன்புடன் ஒரு நிமிடம் - 5

இதற்காகத்தானா?

ண்பன் தியாகு வீட்டில் இருந்தான் வினோத். ஒரே பிராஜக்டில் தற்போது இருவரும் அதைப் பற்றித்தான் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். உள்ளே தியாகுவின் மனைவி சித்ரா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள். மகன் ரவீன் விளையாடிக் கொண்டு…

“...எப்படியும் அந்த டேட்டாவை நாளைக்குள்ளே வாங்கிடணும்... சொல்லிக் கொண்டிருந்தான் தியாகு. பலத்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். ரவீன்தான் தன் கையிலிருந்த கார் பொம்மையை தூக்கி எறிந்தது. எழுந்து சென்ற தியாகு அவனை ஒரு அதட்டல் போட்டுவிட்டு வந்து உட்கார்ந்தான். ”இவன் இப்படித்தான் திடீர்னு எதையாவது தூக்கி எறிவான்.”

பேச்சு தொடர்ந்தது. கொஞ்ச நேரம் பேசுவதற்குள் ரவீன் அழ ஆரம்பித்தான். காலில் எதையோ போட்டு விட்டான் போல. ஓவென்று அழுகை. எழுந்து சென்ற தியாகு அவனை லேசாய்க் கடிந்துவிட்டு, எடுத்து வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான். விளையாட ஒரு புது பொம்மையையும் கொடுத்தான். பார்த்துக் கொண்டிருந்த வினோத், “பாருடா அவன் ஏன் அழறான்னா...” என்று தொடங்கவும் அவன் செல் அலறியது. “என்னங்க, தண்ணீர் வரலை குழாயில...” என்றவள் யமுனா, அவன் மனைவி. “வந்து பார்க்கிறேன், என்றான்.

அவர்கள் பிராஜெக்டைப் பேச ஆரம்பித்தார்கள். கொஞ்ச நேரத்தில், விளையாடிக் கொண்டிருந்த ரவீன் இவன் சட்டையைப் பிடித்து பின்னாலிருந்து இழுக்க இவனால் தொடர்ந்து பேச முடியாது போயிற்று. கோபம் தலைக்கு மேல் எறிற்று. “சித்ரா, வந்து இவனைக் கொஞ்சம் உள்ளே எடுத்துட்டுப் போயேன், என்று குரல் கொடுத்தான். “என்னமோ தெரியலே, ரெஸ்ட்லெஸா இருக்கான்.’’

வினோத் சொன்னான், “உனக்கு ஒண்ணு தெரியுமா? : ரவீன் ஏன் இப்படிப் பண்றான்னான்னு யோசிச்சியா? எல்லாமே காரணத்தோடுதான்! உன் கவனத்தை தன்பால் ஈர்க்கத்தான் அப்படியெல்லாம் செய்யறான். ஏன்னா நீ அவனைக் கவனிக்காம என்கிட்ட பேசிட்டிருக்கே, அவன் அம்மா காப்பி போட போயிட்டா. அதான் இப்படி எல்லாம் பண்ணி உங்களை அவங்கிட்ட இழுக்கிறான்!” என்று அதை விளக்கினதும் கேட்டுக் கொண்டிருந்த தம்பதிகள் முகத்தில் பிரகாசம். “அட சரியாச் சொல்லிட்டே!” என்ற தியாகு மனைவியிடம், “காபி எல்லாம் அப்புறம் போடலாம். நாங்க பேசி முடிக்கிற வரை ரவீனை நீ பார்த்துக்க!” என்று அவளிடம் பையனை ஒப்படைத்தான்.


நண்பர்கள் பிராஜெக்ட் விஷயம் தொடரலாயினர். அப்போது மறுபடி செல்லில் யமுனா அழைத்தாள். ”என்னங்க,  அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் ஆயுத பூஜை கொண்டாடறதைப் பற்றிப் பேச வந்திருக்கிறாங்க. உடனே வாங்க!”

“ரைட். அப்புறம் பேசலாண்டா!” புறப்பட்டான் வினோத்..

“பாவம் முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ணணும்னு வந்து உட்கார்ந்தார். பாதியில போகும்படி ஆகிவிட்டதே? என்று வருந்தினாள் உள்ளிருந்து வந்த சித்ரா, “என்ன பிரசினையாம்?

சொன்னான். ஒரு நிமிடம் யோசித்தாள் சித்ரா, “இதை அவங்களே சமாளிச்சிருக்கலாமே!”

அவள் தோளில் சாய்ந்திருந்த ரவீனைப் பார்த்தான் தியாகு. “எல்லாமே காரணத்தோடுதான்!” என்றான்.


('அமுதம்' ஏப்ரல் 2012 )


<<<<>>>>

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

// “எல்லாமே காரணத்தோடுதான்!” //

அருமை. 101 க்கு என் அன்பான வாழ்த்துகள்.

Rekha raghavan said...

நீங்க எழுதின பதிவுகள் எல்லாமே ஒரு நல்ல மெசேஜை தாங்கி வருவதால் நூத்தி ஒண்ணு என்ன ஆயிரத்து ஒண்ணு போட்டாலும் படிக்க காத்திருக்கிறோம்!

தி.தமிழ் இளங்கோ said...

கவன ஈர்ப்பு தீர்மானம் என்பது இதுதான். வேறு வழியில்லை. கவனித்துதான் ஆக வேண்டும்.

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்

Yaathoramani.blogspot.com said...

கடைசி வார்த்தை அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை.

சதத்துக்கு வாழ்த்துகள். நூற்று ஒன்று ஆயிரத்து ஒன்றாக நானும் வாழ்த்துகிறேன்:)!

மனோ சாமிநாதன் said...

101-க்கு இனிய வாழ்த்துக்கள்!
கதை சிறப்பாக இருக்கிறது!!

ரிஷபன் said...

101-க்கு இனிய வாழ்த்துக்கள்!

எங்கள் கவனம் எப்போதும் உங்கள் பக்கம்தான்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

Already read in Amutham But Allukavillai! kathai super!!

விச்சு said...

சூப்பரான கதை. எல்லாமே காரணத்தோடுதான். அருமையான முடிவு.சதத்துக்கு வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்க.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!