Wednesday, January 18, 2012

பகிர்ந்திடப் பகர்ந்திட..

முதலில் சின்னப் பெண் அஞ்சனாவை அழைத்து வந்து விட்டு பையனை ஸ்கூலிலிருந்து 'இட்டார' கிளம்பினாள் என் பொண்ணு. வழக்கம் போல டெடி பியரையும் கையில் எடுத்துக் கொண்டு அம்மா கூட நடக்க ஆரம்பித்தது அந்த மூன்று வயது சுட்டி.

எப்பவும் போலவே அந்த லண்டன் தெருவில் ஆள் நடமாட்டம் குறைவாயிருந்தது. குளிர் நாடு ஆயிற்றே? கையைப் பிடித்துக் கொண்டு அம்மாவும் பொண்ணுமாக நடக்க... தினமும் பார்க்கிற கட்டிடங்கள்,வழக்கமாய்ப்எதிர்ப்படுகிற நபர்கள் தாம் என்றாலும் எதிர்பாராத சம்பவம் அன்று நடந்துவிட்டது. 

அந்தப் பெரியவர் அழைத்து வரும் மூன்றடி உயர நாய் அஞ்சனாவை நோக்கிப் பாய அதிர்ந்து விட்டாள் அவள் அம்மா. பாய்ந்த வேகத்தில் குழந்தை கையிலிருந்த டெடி பியரைக் கவ்வி இழுக்க அஞ்சனாவோ ஆபத்தை அறியாமல் ''வேணும் வேணும்,'' என்று  தன் பக்கம் இழுக்க நாய் ஜெயித்து பொம்மையைக் கொண்டே போய் விட்டது. நாய் கடிக்கும் என்பது தெரியாததால் அஞ்சனா அஞ்சாமலும் தெரிந்ததால் அவள் அம்மா நடுங்கியும் போனார்கள்.

நல்ல வேளை, கடிக்கவில்லை.  நகக்  காயம்? குளிருக்காக நாலைந்து டிரஸ் முழுக்க கவர் செய்து போட்டு விட்டிருந்ததால் படவில்லை போல..

ஒரு முறைக்கு நாலு முறை ஸாரி சொன்னார்  பெரியவர். நாயிடமிருந்து அதை மீட்க முடியவில்லை. இவளோ ஒரே அழுகை. அதற்கான விலையை தந்து விட முன்வந்தார்.
''அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்,  பையனை அழைச்சிட்டு நாங்க இந்த வழியா தான் திரும்ப வருவோம். உங்க நாயிடமிருந்து பொம்மையைத் திரும்ப பெற முடிஞ்சதுன்னா வாங்கி வையுங்கள்.''

நம்பிக்கை இல்லாமலும், நடந்தது நடந்தாச்சு இனி 'போனது போயாச்சு' என்பதும் சுலபப் படலாம் என்ற எண்ணத்திலும், அவருக்கு ஆறுதலாக வார்த்தைகளை உதிர்த்து விட்டு அகன்றாள்.

வரும்போது அவர்கள் அதே இடத்தில்... சந்தோஷ ஆச்சரியமாக நாய் பொம்மையைத் திருப்பித் தர முன் வந்திருந்தது. அப்பாடா! அதை - நாய் வாய்ப் பற்றியதை திரும்ப தன்  தாய்  கைப் பற்றுகையில் அஞ்சனாவுக்கு எத்தனை மகிழ்ச்சி!

''பாவம் அந்த டாக், அதுக்கும் இந்த பொம்மையோட விளையாட ஆசையா இருந்திருக்கு!'' என்று அவள் அண்ணன் சொல்ல சிநேகத்தோடு பார்த்தாள்.  

வீட்டுக்கு வந்து அதை சுத்தம் செய்து அவளுக்கு கொடுத்தாள் என் மகள். சந்தோஷம் முகத்தில் தெறிக்க அவள் சொன்னது: ''அம்மா...  டாக் இந்த டெடி பியரை அஞ்சா (அஞ்சனா) கூட ஷேர் பண்ணிக்கிட்டது!''

'உன்னோட டாய்ஸை மற்ற பசங்களோட ஷேர் பண்ணி விளையாடணும்,'  என்று சொல்லிய தடவைகள் உண்டு. அது அவள் மனதில் ஆழமாகப் பதிந்து, இப்போது  அழகாக வெளிப்பட்டிருக்கிறது!    

<><><>


14 comments:

ரிஷபன் said...

அருமையான கதையை பகிர்ந்தமைக்கு நன்றி.
உன்னோட டாய்ஸை மற்ற பசங்களோட ஷேர் பண்ணி விளையாடணும்,' என்று சொல்லிய தடவைகள் உண்டு. அது அவள் மனதில் ஆழமாகப் பதிந்து, இப்போது அழகாக வெளிப்பட்டிருக்கிறது!

குழந்தைகள் மனதில் எதை விதைக்கிறோமோ அது துளிர் விடுகிறது அழகாய்.

ரேகா ராகவன் said...

எதையும் ஷேர் பண்ணிக்கணும் என்பதை உங்கள் பேத்தியோடு நாங்களும் உணர்ந்துவிட்டோம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அந்தப் பெரியவர் அழைத்து வரும் மூன்றடி உயர நாய் அஞ்சனாவை நோக்கிப் பாய அதிர்ந்து விட்டாள் அவள் அம்மா. பாய்ந்த வேகத்தில் குழந்தை கையிலிருந்த டெடி பியரைக் கவ்வி இழுக்க அஞ்சனாவோ ஆபத்தை அறியாமல் ''வேணும் வேணும்,'' என்று தன் பக்கம் இழுக்க நாய் ஜெயித்து பொம்மையைக் கொண்டே போய் விட்டது. நாய் கடிக்கும் என்பது தெரியாததால் அஞ்சனா அஞ்சாமலும் தெரிந்ததால் அவள் அம்மா நடுங்கியும் போனார்கள்.//

படிக்கும் போது நானும் நடுங்கிப்போனேன், லண்டனிலும் நாய்த்தொல்லையா என்று.

முடிவு அருமை. குழந்தைகள் மனது விசித்திரமானது. பகிர்வுக்கு நன்றி.

Lakshmi said...

நாய் இல்லாத ஊரே இல்லே போல இருக்கே. ஆனாலும் நல்ல கருத்தை சொல்லி இருக்கீங்க.

கோமதி அரசு said...

அம்மா... டாக் இந்த டெடி பியரை அஞ்சா (அஞ்சனா) கூட ஷேர் பண்ணிக்கிட்டது!''//

பேத்தியின் வார்த்தை அருமை.

விக்கியுலகம் said...

பகிர்ந்து விளையாடனும்னு நச்சின்னு சொல்லி இருக்கீங்க..அது விளையாட்டுக்கு மட்டும்னு இல்லன்னு சொல்லாம சொல்லி இருக்கீங்க போல மாப்ள!

கோவை2தில்லி said...

குழந்தை அழகாக பகிர்ந்து விளையாடியதை எங்களிடம் நீங்களும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

Malauthandaraman said...

அன்புள்ள ஜனா,
0,5மற்றும்6அறிவு கதாபாத்திரங்களைக் கொண்டு
'ஷேர் ஹேப்பினஸ் வித் ஆல்' எனும் உயரிய கருத்து அடங்கிய நிஜக்கதை வெகு அருமை !
இனிய 2012 நல்வாழ்த்துகள் -மாலா உத்தண்டராமன்

ஷைலஜா said...

பகிரும் எண்ணம் பரந்த எண்ணம்...இதை அழகாய்ப்பகிர்ந்த உங்களைப்பாராட்டணும் ஜனா.

Ramani said...

ந்த நிகழ்வும் குழ்ந்தைகளின் நோக்கில்
வித்தியாசமானதாகவும் உயர்வானதாகவும்தான உள்ளது
அவர்களிடம் நாம கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம2

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு... எதை விதைக்கிறோமோ அது தானே விளையும்.... ஷேரிங் என்பதை அழகாய்ச் சொல்லி இருக்கீங்க....

தொடர்ந்து பதிவுகளை எதிர்நோக்கி.....

Vetrimagal said...

Touching. Child teaches adults how to view others, and how to behave.

Wonderful.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு தடவை சொல்லி விட்டால் போதும்..குழந்தைகள் அதை பிடித்துக் கொண்டு தேவையான சமயத்தில் நச்சென்று அடிப்பார்கள்..கதை அருமை!!

மனோ சாமிநாதன் said...

நல்லனவற்றை சொல்கிற‌ விதத்தில் சொன்னால் குழந்தைகள் மனதில் அவற்றை அழகாகப் பதிய வைத்துக்கொள்ளும் என்பதற்கு இந்த சிறுகதை நல்ல உதாரணம்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!