Tuesday, November 17, 2026

உதட்டிலிருந்து...


உதட்டிலிருந்து...
கே.பி.ஜனார்த்தனன்
('கல்கி' 10 11 91 இதழில்...)
பத்து ஒன்றுக்கு பரக்கப் பரக்க சீட்டில் வந்து அமர்ந்த தனுஷ் அரை மணி நேரத்துக்கு அக்கம் பக்கம் திரும்பவில்லை. பக்கத்து செக் ஷன் உமாவுடன் பேசவும் இல்லை.
காலையில் நடந்த எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி விட வேண்டும் என்ற தவிப்பு. துடிப்பு. ஆனால் அவள் கேட்கட்டும் என்று காத்திருந்தான். அவன் தோற்றத்தைப் பார்த்தாலே கேட்பாள். தலை மிகக் கலைந்திருந்தது.
கௌன்டர் ஓய்ந்தது. ஆனால் உமா வாயே திறக்கவில்லை. கடைசியில் அவனே தொடங்க வேண்டியதாயிற்று.
“காலையிலே ஃபுல்லா நான் தான் எல்லாம். அதான்!” என்றான்.
உமா அப்போதுதான் பார்ப்பது போல் அவன் கலைந்த தலையை பார்த்தாள். “ஏன், என்ன?” என்றாள்.
“மறுபடி சுமதிக்கு உடம்புக்கு வந்ததிட்டது. லீவும் இல்லை எனக்கு. ஒண்ணும் செய்ய முடியலே. பெட்லேயே படுத்துக்க,இன்ஸ்ட்ரக் ஷன் மட்டும் கொடுன்னு சொல்லிட்டேன்.”
உமா தன் ஒயிலான நாடியை கைத் தூண்களில் வைத்தாள். அவன் தொடர்ந்தான்.
“ரெண்டு மணி நேரம் கூட இல்லை. அதுக்குள்ளே எல்லா வேலைகளையும் முடிச்சாகணும். நானும் புறப்பட்டாகணும். கேஸ் அடுப்பில் ஒண்ணிலே டிகாக் ஷனுக்குத் தண்ணீர் வெச்சேன். இன்னொண்ணிலே சாதத்துக்கு தண்ணீரைக் கொதிக்க வெச்சேன். ஒரு பக்கம் ஸ்டவ்வில் குளிக்க வெந்நீர் வெச்சேன்.
“பசங்க ரெண்டு பேரையும் எழுப்பி ட்யூஷனுக்கு அனுப்பினேன். பில்டரில் வெந்நீரை விட்டிட்டு அரிசியை எடுத்து களைஞ்சேன். அதுக்குள்ளே பால் பாக்கெட் வந்தது. சூடாக்கி காபி கலந்து அவளுக்கும் கொடுத்து நானும் குடிச்சேன். தண்ணீர் சூடானதும் அரிசியைப் போட்டேன்.”
“குக்கர் இல்லையா?”
“பயறு மாதிரி இருக்கும். ஒத்துக்காதே வயித்துக்கு! அப்புறம் தேங்காயைத் துருவி மிளகாய், உப்பு, கருவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் சட்னி அரைச்சுக்கிட்டேன். வாணலியில் தண்ணீர் விட்டு நாலு முட்டை கொதிக்கப் போட்டேன். இன்னொரு பக்கம் தோசைக் கல்லைக் காயப் போட்டேன்.”
“தினசரி தோசைக்கு மாவு போட்டுருவீங்களா?”
“நேத்து போட்டிருந்தது. வேறே டிபன்னா இன்னும் கஷ்டம். பசங்க டியூஷன் முடிச்சு வந்தாங்க. வெந்நீரை ஊற்றிக் கொடுத்து குளிக்க சொன்னேன். தோசை சுட ஆரம்பிச்சேன். இடையிடையே வந்து இவங்களுக்கு டிரஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்தேன். அவங்களை சாப்பிடச் சொல்லிட்டு மீன் டைம் நான் குளிச்சேன்.
“முட்டைகளை உரிச்சு மசாலா தடவி பொரிச்சி எடுத்துக்கிட்டேன். இன்னொரு அடுப்பில் ரசம் தாளிச்சேன். இடையில் சுமதியை எழுப்பி தோசையை சாப்பிடக் கொடுத்தேன்.”
“பசி எல்லாம் இருந்ததா?”
“ஒரு ரெண்டு தோசை சாப்பிட்டா. மணியைப் பார்த்தா ஒன்பது. பஸ்ஸுக்கு பத்து நிமிஷம் கூட இல்லை. ஒரே ஒரு தோசை. அதுக்குத்தான் அவகாசம் கிடைச்சது. எப்படியோ ஓடிவந்து பஸ்ஸைப் பிடிச்சிட்டேன்!”
சொல்லி முடித்துவிட்டு, கோல் போட்டவன் கூட்டத்தைப் பார்ப்பது போல அவள் முகத்தைப் பார்த்தான்.
உமா முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஒரு செகண்ட், தான் சொன்னது அவளுக்குப் புரிந்ததா ஏதாவது குழப்பியடித்து விட்டோமா என்ற சந்தேகம் வந்தது. இல்லையே, அழகாய்க் கோர்த்துச் சொன்னேனே?”
“உங்க செக் ஷன்லே ஏதாவது வொர்க் பெண்டிங் இருக்கா?” என்று கேட்டாள்.
என்ன இவள் பேச்சை மாற்றுகிறாள்?
“அது ஒண்ணும் இல்லை. எனக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாயிட்டது. ஆனா காலையிலே அத்தனை வேலையையும் செய்தால்தானே மூணு பேரும் புறப்பட முடியும்? ஒரு சேலஞ்ச் மாதிரி எடுத்துட்டு செய்து முடிச்சேன்.” இவன் அதே விஷயத்துக்கு வந்தான்.
திரும்பவும் பார்த்தான். அவள் முகம் விசேஷ அலைகளை ஒளிபரப்பவில்லை.
தனுஷுக்கு ஆச்சரியம் ஒரு பக்கம். ஏமாற்றம் ஒரு பக்கம்.
உமாவுக்கு அவனை ரொம்பப் பிடிக்கும் என்பதை அவன் அறிவான். அதில் சந்தேகமே இருக்கவில்லை. காரணமும் அவனுக்குத் தெரியும்.
அந்த ஆபீஸில் உள்ள மற்ற ஆண்களை மாதிரி அல்ல அவன். பெண்களின் நிலை பற்றி பெரிதும் பேசுபவன் இதனால் ஆபீஸில் ஒரு வித்தியாசமான இமேஜ் அவனுக்கு இருந்தது. அதிலும் பெண்கள் மத்தியில் அவனுக்கு தனி மரியாதை.
உமா ரொம்ப நேரம் செலவு செய்வது அவனுடன்தான். பத்திரிகைகளில் வரும் பெண்கள் பிரச்சினைக் கதை ஒவ்வொன்றையும் அவனுடன் விவாதிப்பவள்.
“பெண்கள் உணர்ச்சிகளை எப்படி சார் நீங்கள் இத்தனை அழகாய்ப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்பாள் பார்வையில் வியப்பொழுக.
‘ஆணுக்குப் பெண் சமம்,’ என்று சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் அவன் அடித்துப் பேசுவான், ‘பெண்களை மட்டும் ஏன் வித்தியாசமாப் பார்க்கணும்? அதுவே தப்பு!’ என்பான். ‘ஹியர் ஹியர்,’ என்பாள் உமா.
அவளா இப்படி வெறுமனே கேட்டுக் கொண்டு நகருகிறாள்? இத்தனை விஷயம் ஒரு பெண்ணுக்காக பண்ணி விட்டு வருகிறேன், துளி ரியாக் ஷன் இல்லையே?
அவனால் பொறுக்க முடியவில்லை. அவளிடமே கேட்டு விட வேண்டியதுதான். நேரடியாக கேட்க முடியாது. வெட்கமாக இருந்தது. ஒரு வேளை நிறைய விஷயங்கள் விட்டுப் போச்சோ? லஞ்ச் டயத்தில் மறுபடியும் அதே பேச்சை எடுத்தான், “பாருங்க, இத்தனை காரியம்.. நான் ஒரு ஆம்பளை செய்யறதை வீட்டுக்கு வந்து ஒரு பொம்பளை பார்த்தா அப்படியே அசந்து போவா இல்லை?” என்றான்.
கேட்டுவிட்டான், ‘ஏன் நீ அசரவில்லை?’ என்பதை மறைமுகமாக.
உமா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இப்போது அவள் கண்ணில் லேசாய் ஆச்சரியம் தலை காட்டிற்று. “ஒரு சாதாரணப் பெண் அசருவாளோ மாட்டாளோ நான் அசரமாட்டேன்,” என்றாள் நிதானமாக.
‘அப்படியா?’ அவன் கேட்காவிட்டாலும் பார்வை சொல்லிற்று.
“ஏன், ஏன் அசரணும்?” என்றாள், “தினசரி நான் செய்துட்டு வர்றதைத்தானே இன்னிக்கு ஒரு நாள் நீங்க செய்யறீங்க? அதிலும் ஆணும் பெண்ணும் சமம்னு பேசற நீங்க இப்படி செய்யறதைப் பார்த்து ஆச்சரியப்படறதற்கு என்ன இருக்கு? அப்படி ஆச்சரியப்பட்டால்தானே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்? ஏன் எரிச்சலாக் கூட இருக்கும். உள்ளத்திலே உங்களுக்கு அந்த நிச்சயம் - ஆணும் பெண்ணும் ஒண்ணுங்கிற நிச்சயம் இருக்கிறபோது கோபம் தானே வரும்?”
அவனுக்கு வெட்கம்தான் வந்தது. வார்த்தைக்கும் இதயத்துக்கும் உள்ள தூரத்தை எப்படி குறைத்துக் கொள்வது என்று யோசிக்கத் தொடங்கினான்.

No comments: