Monday, June 22, 2026

விதை அவர் போட்டது...



கம்ப்யூட்டர் உலகின் நோபல் பரிசு என்பார்கள் அதை. ஒரு மில்லியன் டாலரும் கூகுளின் நிதி உதவியும். ‘டூரிங் அவார்ட்’ என்பது பெயர். யார் அந்த டூரிங்?
Alan Turing ...கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட். கணித மேதை… இன்று பிறந்த நாள்!
கம்ப்யூட்டரும் கையுமாக கம்பீரமாக உட்கார்ந்து இருக்கிறோம். உட்கார்த்தி வைத்தவர்களை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்வோமே?
1936 இல் காலேஜில் படித்தபோது அவர் கையில் எடுத்ததுதான் அக்காலத்தில் பெரும் புதிராக இருந்த Decision Problem. அதை தீர்ப்பதற்காக, அப்போதுதான் அந்த Turing Machine-ஐ பேப்பரில் வரைந்தார். இன்றைய கம்ப்யூட்டர் விஞ்ஞானத்திற்கு அதுவே ஆதார வித்து. அதனால் தான் அவர் ஃபாதர் அஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ்.


அவரே பத்து வருடத்துக்கு பின் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் இறங்கினார். பிளக் போர்டுகளில் இருந்த ப்ரோக்ராம் ஆணைகளை மெமரியில் வைத்துக் கொள்ள முடிகிற கம்ப்யூட்டரை முதன் முதலில் வடிவமைத்தார். அந்த 1946இரண்டாம் உலகப்போர் ரெண்டு வருஷம் முந்தியே முடிந்ததற்கு ஓர் முக்கிய காரணமாக இவரை சொல்கிறார்கள்.
என்ன செய்தார் இவர்? யுத்த சமயத்தில் கப்பல்களை அழிக்க உபயோகிக்கப்பட்ட எனிமா மெஷினின் மிகக் கடினமான சங்கேத மொழியைத் தகர்த்தறிவதற்கான வழியைக் கண்டுபிடித்தார். எந்த வார்த்தையின் முடிச்சையும் 15 நிமிடத்தில் அவிழ்த்து விடும் அது.
திரைமறைவில் ஒரு மனிதனும் ஒரு கம்ப்யூட்டரும் வீற்றிருக்க, இந்தப் பக்கமிருந்து நடுவர் ஒரு கேள்வியை வீசுகிறார். இருவரிடமிருந்தும் வரும் பதில்களைப் பார்த்து எது கம்ப்யூட்டர் என்று சொல்ல முடிந்தால் தோல்வி. சொல்ல முடியா விட்டால் அந்த கம்ப்யூட்டர் டெஸ்டில் தேறி விட்டது என்று அர்த்தம். என்ன அது? Artificial Intelligence Test! 1950இல் அவர் உருவாக்கிய இந்த டெஸ்ட் மாடல் தான் இன்றளவும் A. I. இன் I. Q. அளவை அளக்கப் பயன்படுகிறது.
பயாலஜியையும் விட்டுவைக்கவில்லை. சின்ன வயதிலேயே ஹாக்கி விளையாடப் போனால் அங்கே முளைத்திருக்கும் டெய்ஸிச் செடி எப்படி வளர்கிறதுன்னு பார்த்தபடியே நிற்பவராச்சே... தாவரங்களின் வளர்ச்சியில் எப்படி கணிதம் ஒளிந்திருக்கிறது என்பதைக் காட்டினார். மாட்டுக் கன்றின் உடலில் படர்ந்திருக்கும் நிறங்களின் வடிவமைப்புக்கு பின்னால் உள்ள கணித விதிகளையும்!
ஓட்டம் என்றால் நாட்டம்! கூட வேலை பார்ப்பவர்கள் பஸ்ஸில் வந்து சேர்வதற்குள் அந்தப் பத்து மைலையும் ஓடிக் கடந்து வந்து விடுவார். ஒலிம்பிக் மாரத்தான் டைமுக்கும் அதற்கும் ரொம்ப வித்தியாசம் கிடையாது. கேட்டால் வரும் பதில்: ‘நான் பார்க்கிற வேலை ரொம்ப மன அழுத்தம் தருவது, ஓடுவது ஒன்றுதான் அதிலிருந்து என்னை விடுவிப்பது!’
சொன்னவை: ‘எந்திரங்களால் சிந்திக்க முடியுமா? சற்றே சிந்தியுங்கள்.’
‘சற்று தூரத்துக்குத்தான் நாம் நம் எதிர் காலத்தை உற்று நோக்க முடியும் ஆனால் அதற்குள்ளாகவே நாம் செய்ய வேண்டியவை அனேகம் இருப்பதைப் பார்க்க முடியும்.'
'அது ஒரு மனிதன் என்று ஒரு மனிதனை நம்ப வைத்து விட்டால் அந்தக் கம்ப்யூட்டர் ஒரு புத்திசாலி என்று சொல்லத் தகுதியுடையது.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!