Thursday, January 4, 2018

தானே யோசிக்க... (நிமிடக்கதை)

ரிலாக்ஸ், ரிலாக்ஸ் என்றார் சாத்வீகன். வந்தவளோ அமைதியாவதாகக் காணோம்.
"என் பொண்ணு ஏதோ ஒரு உதவாக்கரைப் பையனை லவ் பண்றா மாமா. எப்படி அவளை தடுக்கறது... எப்படி எப்படி..."
"தடுக்க வேண்டிய அவசியமே இல்லை." என்றார் இவர். "சொல்லு, என்ன நடக்கிறது?..."
அழுது கொண்டே விவரித்தாள் சாவித்திரி.
எல்லாம் கேட்டு விட்டு அவர் சொன்ன வழி?
”இப்ப நீ என்ன பண்றே.. அவகிட்டபோய் லவ் பண்ண சொல்லப்போறே..."
"என்ன இப்படி சொல்றீங்க?"
"சில சமயம் பிரசினைக்குள்ளேயே தீர்வு இருக்கும் இல்லையா?" சிரித்தார்.

றுநாள்.
மகளைக் கூப்பிட்டு கவலையோடு பேசினாள் இவள். "ஆமா. அந்த சுரேஷுக்குத்தான் உன்னைக் கொடுக்கணும்னு பிடிவாதமா இருக்கார் உங்கப்பா. அவர் தங்கையைக் கொடுத்த இடத்திலேர்ந்து வந்த வரன். அதனால அவருக்கு தலைகால் புரியலே.  அவளோட மதிப்பு அங்கே நல்லாயிருக்குமாம். உறவும் பலப்படுமாம்.  கேட்டதிலேரந்து  தூக்கம் போச்சு. அந்தப் பையனுக்கு சரியான படிப்பும் இல்லே. வேலையும் ஏதோ டெம்பரரியா ஒரு சிமண்டு கம்பெனியில... இத பாரும்மா, அப்பா இப்பத்திய சௌகரியங்களையும் பையன் அழகையும் பார்க்கிறாரு. ஆனா நாளைக்கு? உனக்கு குழந்தைங்க பிறந்து அதுகள் நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கணும், தரமான பள்ளியில படிக்கணும்... உன் ப்ரண்ட்ஸ் உன்னைப் பார்த்து பரிதாபப்படக் கூடாதில்லையா?"
அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்த மாதிரி...
"நான் என்ன சொல்லியும் அவர் கேட்கற மாதிரி இல்லை. அவரை எதிர்த்து நான் ஒண்ணும் செய்ய முடியாது. வேறே வழியில்லே. அதிலேர்ந்து தப்பணும்னா நீ லவ் மேரேஜ் பண்றதுதான் ஒரே வழி.”
“என்னம்மா சொல்றே? நிஜமாவா?”  
”நீ புத்திசாலிடி. ஒரு ஸ்கூட்டி வாங்கறதானா கூட அதோட தரத்தை நல்ல அலசிப் பார்த்துத்தானே வாங்குவே? நிச்சயமா நீ தேர்ந்தெடுக்கிற பையன் நல்ல வேலை, ரொம்பவே  திறமை உள்ளவனா உன்னோடவும் அவனோடவும் உங்கள் குழந்தை களோடவும் எதிர்காலம் முழுக்க சிறப்பா விளங்கிற மாதிரி சகல தகுதியும் உள்ளவனாகத்தான் இருப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கு."
"என்னம்மா.. நீ.. என்கிட்ட போய் இப்படி சொல்லிட்டு.....நான் இப்ப யாரயும் லவ் .... " இழுத்தாள்.
டுத்த வாரம் சாத்வீகனிடம் நன்றி சொன்னாள் சாவித்திரி.
"நேத்திக்கு பொண்ணு வந்து சொல்லிட்டா. அவளால அப்படியெல்லாம் பார்த்து சரியாக தேர்ந்தெடுத்து லவ் பண்றதெல்லாம் முடியாதாம். நீங்க பார்த்து நல்ல வரனா தேர்ந்தெடுத்து தீர்மானியுங்க. அப்பாவை எதிர்த்து போராடி நாம ஜெயிக்கலாம்னு சொல்லிட்டா. நீங்க எதிர்பார்த்த மாதிரியே அவள் தன் தேர்வை சரியா உட்கார்ந்து எடை போட்டு பார்த்துட்டா. சுருக்குன்னு விலகிட்டா.”

(’அமுதம்’ ஆகஸ்ட், 2015 இதழில் வெளியானது - அன்புடன் ஒரு நிமிடம் - 120)

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

கலியபெருமாள் புதுச்சேரி said...

பொண்ணுங்க எப்பவுமே தெளிவாதான் இருக்காங்க

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யோசனை தான். புரிய வைப்பதில் தான் இருக்கிறது சூட்சுமம்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!