Monday, December 19, 2016

மனக்குறை...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 111

புலம்ப ஆரம்பித்த காமாட்சி புலம்பிக் கொண்டேயிருந்தார்.

சொல்லித்தான் அழைத்து வந்திருந்தார் சாத்வீகனை அவர் நண்பர் விசு. காமாட்சியின் தம்பி. எப்பப் பார்த்தாலும் குறைப்பட்டுக்கொண்டே இருக்கிறாள் என்று.

பார்த்து நாளாச்சு உங்க அக்காவை... என்று ஆர்வமாக வந்த சாத்வீகன் அவளது சலிப்புகளை நிஜமான அக்கறையுடன் கேட்டார்.

“...இந்த சின்னவன் சேகர் இருக்கானே, பக்கத்தில பங்களூரிலதான் இருக்கான்னு பேரு. மாசம் ஒரு தடவைகூட வந்து பார்க்கிறதில்ல அம்மாவை. எப்பவாவது வந்து எட்டிப்பார்த்துட்டு ஓடிடறான். எனக்குத் தேடுமேன்னு கொஞ்சமாச்சும்...”
அப்போது மொபைல் ஒலிக்க, எடுத்த சாத்வீகன், கேட்டுவிட்டு, “இன்னுமா வேலை கிடைக்கலே? போய் ஆறு வருஷம் ஆச்சே... எப்படித்தான் உங்க அப்பா சமாளிக்கிறாரோ... நீ ஒன்றில் அமர்ந்தால்தானே குடும்பம் தலையெடுக்கும்? சே, கவலையிலேயே அம்மா நோயில் படுத்துடுவாளே...” கொஞ்சம் பேசிவிட்டு வைத்தார்’

காமாட்சி தொடர்ந்தார். ”பெரியவன் கூட இருக்கான்னு பேரு. கொஞ்சமாவது பெண்டாட்டியை அதட்டி வைக்கிறானா? அவ என்னை மதிக்கிறதேயில்லை. வேணும்கிறதை பண்ணி வெச்சுட்டு ஒற்றை வார்த்தை பேசாமல் ஓடிடறா ஆபீசுக்கு...

மறுபடியும் ஒரு கால் இவருக்கு வர,  எடுத்து கேட்டவர் சொன்னார், ”சரி, நான் ஊருக்கு வந்ததும் உன் தங்கையிடம் சொல்லிப் பார்க்கிறேன். அம்மா பேச்சைக் கேட்கிறான்னு டைவர்ஸ் வரை போறது நல்லாவா இருக்கு?  குழந்தையை எத்தனை பாதிக்கும்?”

காமாட்சி தன் கதையை... “என் மகள் இருக்காளே கலா, அவள் பின்னே இங்கே வந்தா எப்பவும் கடன் பாட்டுத்தான் பாடுவா. மாப்பிள்ளைக்கு பிரசினைன்னு மாசம்தோறும் பத்து இருபதுன்னு வாங்கிட்டு போயிடறா. என்னதான் கொஞ்சம் வசதி இருக்குன்னாலும் நானும் எத்தனை தரம்தான் எடுத்து வீசறது?”
மறுபடி போன். பேசினார். ”...இல்லேப்பா முருகேசா, என்னதான் தேவையில்லாம போலிஸ் கேசில் மாட்டிக்கிட்டாலும் அவன் உன் சொந்தத் தம்பி. நீதான் நல்ல வக்கீலா பார்த்து தொகையை கொடுத்து அவனை மீட்கணும்.  பணமா முக்கியம் வாழ்க்கையில? பாசமில்ல பெரிசு...”
“ஆருங்க அது?” காமாட்சி.

சொன்னார். தன்னிடம் பேசியவர்களைப் பற்றி. ”சரி, நீங்க மேலே சொல்லுங்க.”

”வேறே என்னத்தை? அவ்வளவுதான்! ஒரு இதுக்குத்தான் சும்மா கொட்டினேன். மத்தபடி பசங்க என் மேலே அன்பாத்தான் இருக்காங்க. ஏதோ இறைவன் அனுக்ரகத்தில இத்தனையாவது... முருகா எல்லாம் உன் அருள்.”

வெளியே வரும்போது நண்பர்சொன்னார், ”இன்னிக்குத்தான் அக்கா மனதிருப்தியோட நாலு வார்த்தை உணர்ந்து பேசுது. ஆமா அந்த நேரத்தில பார்த்து உங்களுக்கு என்ன அத்தனை கால்...” 

சாத்வீகன் சொல்லவில்லை, எல்லாம் ஃபேக் கால், அவரே சொல்லி எற்பாடு செய்தது என்று.

(’அமுதம்’ மே 2015 இதழில் வெளியானது)

5 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அழுதம் இதழில்வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் கதையும் கருவும் சிறப்பு.படித்து மகிழ்ந்துன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... பாசம் தான் பெரிது...

ராமலக்ஷ்மி said...

நல்லதைப் பார்க்கக் கற்றுக் கொடுத்து விட்டார். அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாவற்றிலுமே நல்லதும் இருக்கும் என்ற நேர்மறைக் கருத்தைச் சொல்லும் அருமையான கதை!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!