Saturday, October 3, 2015

விவாதம் மட்டும்...

அன்புடன் ஒரு நிமிடம்.. (நிமிடக்கதை - 88)

வாசுவின் கம்பெனியில் அந்த மீட்டிங்.
மூன்று மணிக்கு கூடுவதாக ஏற்பாடு.
இரண்டு மணிக்கு தன் வலது கையான செந்திலை அழைத்தார் வாசு.
“எல்லா ஏற்பாடும் செய்திட்டேன்.சார்.”
“வேண்டாம் கேன்சல் செய்துரு.”
”சார்?”
”ஐந்து மணிக்கு நடக்கட்டும்.”
”எம். டி. வந்திட்டிருப்பாரே?”
”சொல்லிட்டேன். ஐந்துக்குத்தான் வருவார்.”
”ஏன் இந்த சேஞ்ச்னு…?”
”சொல்றேன். என்னென்ன விஷயம் எல்லாம் டிஸ்கஸ் பண்றோம்கிறதை நேத்திக்கே சொல்லியிருக்கோம் எல்லார் கிட்டேயும், இல்லையா?”
”ஆமா.”
”இப்ப நீ என்ன பண்றே… எல்லாரிடமும் ஆளுக்கொரு மெமோ பேட் கொடுக்கிறே. அவங்கவங்க இந்த இஷ்யூ பத்தி என்ன என்ன சஜஷன் சொல்ல நினைச்சாங்களோ அதை அப்படியே எழுதிக் கொடுத்திட சொல்லி கலெக்ட் பண்ணிக்கறே. நாலரைக்கு என்கிட்ட தந்திடறே. என்னோடதையும் எம். டி.யோடதையும் நான் கலெக்ட் பண்ணிக்குவேன். ஒவ்வொருத்தர் பாயிண்டையும் நான் படிப்பேன். டிஸ்கஷன் அங்கே நடக்கும். அது மட்டும்!”
”சார், நேரடியா அங்கேயே அவங்கவங்க கருத்தை அவங்களே சொல்றதுதானே நல்லா இருக்கும்?”
”நல்லாதான் இருக்கும் ஆனா அதில ஒரு சிக்கல் இருக்கு. போனதடவை என்ன நடந்தது? ஒவ்வொருத்தரா எழுந்து ஒரு சஜஷனை சொல்ல மத்தவங்க அதை பிரிச்சு மேய்ஞ்சு ஏகத்துக்கு சந்தேகங்களைக் கிளப்பி கடைசியில உருப்படியா ஒரு ஐடியாவும் தேறலே.  புரடக்‌ஷனிலும் சரி மார்கெட்டிங்லேயும் சரி, ஒரு மாசம் எந்த புது விஷயமும் நடக்கலே.”
”உண்மைதான். ஏன் சார் அப்படி நடக்குது?”
”எல்லாருக்கும் ஆளுக்கொரு ஈகோ இருக்கு. இன்னொருத்தர் சொல்றதை தலையாட்டுவதா அப்படீன்னு! அது தவிர மற்றவங்க ஐடியா ஏற்கப்பட்டுட்டா தனக்கு வெயிட் குறைஞ்சிடுமோங்கிற பதற்றத்தில் அளவுக்கு அதிகமாவே அதை ஆராய ஆரம்பிச்சிடறாங்க. தங்களோட திறமையை உபயோகிக்கிறதை விட்டிட்டு.”
”இப்ப மட்டும் அப்படி நடக்காதா?”
”நடக்காது. ஏன்னா நான் எந்த சஜஷன் யாருடையதுன்னு சொல்லப் போறதில்லே. ஒவ்வொண்ணா ஐடியாவை மட்டும்…”
”அப்பவும் தங்களோடதைத் தவிர மற்றதை காரசாரமா விமரிசிப்பாங்கதானே?”
”மாட்டாங்க. ஏன்னா அதுல எது என்னோட சஜஷன், எது எம் டி யோடதுன்னும் தெரியாது இல்லையா?”
”சார்!” வியந்து போனான் அவன். ”மீட்டிங்ல ஐடியா எதும் தேறுதோ இல்லையோ இந்த உங்க ஐடியா ஏஒன்!”
”அங்கேயும் நல்லாவே கொட்டப் போகுது.  நிறைய தேறப் போகுது பார் இந்தத் தடவை!” 
(”அமுதம்’ செப்.2014 இதழில் வெளியானது)

>>><<<
(படம்- நன்றி:கூகிள்)

3 comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!