Wednesday, December 4, 2013

புதுச் சட்டை

 


''டேய் பாலு, என்னடா பண்றே அங்கே? ஒரு பேபி சட்டைக்கு காஜா போட இவ்வளவு நேரமா?'' கத்திய டெய்லர் ஷண்முகம், ''சே! புதுசா வர்ற பசங்களை வேலைக்கு சேர்த்துக்கிட்டா இப்படித்தான்!'' என்று எரிச்சல் பட்டார்.

''நான் அன்னிக்கே சொன்னேனே இவன் சரியில்லேன்னு... அவனுக்கு தோணற மாதிரி வேலை செய்யறான். நேத்து நாலு சட்டைக்கு அரை மணி நேரத்தில பட்டன் தைச்சு, காஜா போட்டுட்டான். இன்னிக்கு ஒரு சின்ன சட்டையை வெச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கான். ஊஹூம், இவன் தேற மாட்டான்.'' என்று அலுத்துக் கொண்டான் சண்முகத்தின் உதவியாளன் கிருஷ்ணன்.


''சரி, சரி! அதை நீ வாங்கி முடிச்சுடு. பாலு, கொடுடா அதை கிருஷ்ணன் கிட்டே.'' என்று இரைந்தார் சண்முகம்.


''வேணாங்க முதலாளி, இதோ முடிச்சிடறேன்,'' என்று இறைஞ்சிய பாலு, கொஞ்ச நேரத்தில் ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுக்க, காத்திருந்த வாடிக்கையாளர் வாங்கிகொண்டு விரைந்தார்.


அவர் போனதும் சண்முகம் இவனிடம், ''ஏண்டா இந்த சின்ன வேலைக்கே இத்தனை நேரம் எடுத்துக்கிட்டா நாளைக்கு நீயெல்லாம் எப்படிடா பெரிய டெய்லரா வரப்போறே?'' என்று அதட்டினார்.


''அது வந்துங்க... இதைச் சின்ன வேலையா நான் நினைக்கலீங்க. ஆறு மாச குழந்தைக்கான சட்டை இது. குழந்தை சட்டையை எப்பவும் வாயிலேதான் கொண்டு போகும். இல்லீங்களா? அப்ப பட்டன் கழன்று அதன் வாய்க்குள்ளே போயிடக்கூடாது இல்லையா? அதான் பட்டனை நல்ல அழுத்தித் தைச்சு காஜாவையும் ஸ்ட்ராங்காப் போட்டேன். அதான் கொஞ்சம் கூடுதலா நேரமாயிட்டுது. மன்னிச்சுக்குங்க'' என்றான் பாலு.


சண்முகத்தின் முகம் சட்டென்று கனிந்தது. அவன் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து சொன்னார். ''நிச்சயம் ரொம்பப் பெரிய ஆளா வருவேடா.''

(ஆனந்த விகடன் 2005 தீபாவளி மலரில் வெளியானது)

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு சிறு செயலில் எவ்வளவு பெரிய செய்தி.
அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான அருமையான ஆக்கம். சின்ன விஷயம் தான் அதில் எவ்வளவு ஒரு பொறுப்புணர்ச்சி தேவைப்படுகிறது!

மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//''நிச்சயம் ரொம்பப் பெரிய ஆளா வருவேடா.''//

அறிவாளியான அவன் நிச்சயமாக மிகப்பெரிய ஆளாக வருவான்.

நாங்கள் குழந்தைகளுக்கான ஆடைகள் வாங்க ஒரு குறிப்பிட்ட பிரபலமான கடைக்கு மட்டுமே செல்வோம். விலை சற்றே அதிகமானாலும் மிகவும் தரமானதாகவே இருக்கும்.

//(ஆனந்த விகடன் 2005 தீபாவளி மலரில் வெளியானது)//

வாழ்த்துகள். பாராட்டுகள்.

ராஜி said...

அருமை!

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டிப்பாக...!@

இராஜராஜேஸ்வரி said...

அழுத்தமான கதை...

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்டது சிறுவனின் செயல்.....

நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

வித்தியாசமான காஜா பையன். நுணுக்கமான செய்தியை கதையின் கருவாக உருவாக்கி தந்தமைக்கு நன்றி!

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் அருமையான கதைக்கரு! சிறப்பாக கதையாக மலர்ந்திருக்கிறது! வாழ்த்துக்கள்!

Anonymous said...

வணக்கம்
தொடக்கம் முதல் முடிவு வரை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!