Monday, November 11, 2013

காரணம் நான் உன்...


ன்புள்ள சுந்தர்,


நீ சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு சென்றிருப்பதாக பழநி சொல்லித் தெரிந்து கொண்டேன். வெகு விரைவிலேயே மிகப் பெரிய டைரக்டராக வருவேன் என்று நீ சபதம் செய்திருப்பதாகவும் அவன் சொன்னான்.


வகுப்பை கட் அடித்துவிட்டு நீ எழுதும் கவிதைகளைப் பார்க்க நேர்ந்த போதே உனக்குள் ஒரு கவிஞன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.


'வானில் பறக்கும் மேகத்துக்குத் தெரியுமா, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மயிலின் ஏக்கம்?' என்ற உன் கவிதையை நான் எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்து மகிழ்ந்திருக்கிறேன் தெரியுமா?


பொதுத் தேர்வைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் ராத்திரியெல்லாம் கண் விழித்து ஒரு நாடகம் எழுதினாயே, நினைவிருக்கிறதா? அதைப் படித்த போதே உனக்குள் ஒரு கதாசிரியனும் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டேன்.


ஒரு பணக்காரப் பெண் ஏழை வாலிபனைக் காதலித்து அந்தக் காதலுக்காக தன்னுடைய எல்லா சுகங்களையும் இழந்து, கடைசியில் அவனையே கல்யாணமும் செய்து கொள்கிறாள் என்ற அந்தக் கதை சினிமாவாக எடுக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகை ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது.


உன் அக்காவின் கல்யாணம், அம்மாவின் தீராத நோய், குடும்பத்தின் பொருளாதார நலிவு என்கிற மாதிரி சின்ன சின்னப் பிரசினைகளைப் பற்றியெல்லாம் அனாவசியமாக நீ அலட்டிக்கொள்ளாதே! அதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். அதைவிட அவருக்கு வேறென்ன வேலை? நீ உன் பி.இ. படிப்புக்கான வேலையில் சேர்ந்துவிட்டாயானால் உனக்கான ஆஸ்கர் பரிசை நீ வாங்குவது எப்போது?


இப்படியெல்லாம் எழுதி உன்னை உற்சாகப் படுத்த வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி செய்ய முடியவில்லையே! காரணம் நான்...


உன் அன்புள்ள,

அப்பா.

<<<>>>
(13-02-2005 விகடனில் பிரசுரமானது. )

<<>>
(படம் - நன்றி: கூகிள்)

11 comments:

காமக்கிழத்தன் said...

நல்ல ‘சஸ்பென்ஸ்’ கதை.

பெற்ற மனங்களின் தவிப்பை உணர வைக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, கடைசியில் உள்ள ஒரு வார்த்தையில் எல்லாக் கற்பனைகளும் தூள் தூள் ஆகிவிட்டதே.

அருமையான ஆக்கம். என்னுள் ஏற்படுத்தியதோர் தாக்கம்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//(13-02-2005 விகடனில் பிரசுரமானது. )//

மனம் நிறைந்த அன்பு நல்வாழ்த்துக்கள்.

கவியாழி கண்ணதாசன் said...

அதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். அதைவிட அவருக்கு வேறென்ன வேலை? ///இப்படியுமா நடக்கப்போகுது?

Ramani S said...

அற்புதம்
அதுவும் அந்தக் கடைசி ஒருச் சொல்
மனம் கவர்ந்த அருமையான கதைப் பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 3

ராஜி said...

இந்த அப்பாக்களே இப்படித்தான்!

சகாதேவன் said...

கவலை வேண்டாம்.முதல் படம் டைரெக்ட் செய்து வெற்றி அடைந்ததும் ஓடி வந்து அம்மாவை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்வார். அக்கா கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடத்தி உங்கள் பாங்க் கணக்கில் பெரிய தொகை போட்டு விட்டு அடுத்த படம் டைரெக்ட் செய்ய ஓடி விடுவார்.

வெங்கட் நாகராஜ் said...

கடைசி வரியில் உள்ள பஞ்ச்! ரசித்தேன்.

நிலாமகள் said...

வானில் பறக்கும் மேகத்துக்குத் தெரியுமா, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மயிலின் ஏக்கம்?' //

அழகிய வரிகள்.

கடைசி வரிகள் நல்ல ட்விஸ்ட்

ரிஷபன் said...

இப்படியெல்லாம் எழுதி உன்னை உற்சாகப் படுத்த வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி செய்ய முடியவில்லையே! காரணம் நான்...


உன் அன்புள்ள,

அப்பா.


கடைசி வரியில் வாசகனைப் புரட்டிப் பார்க்கும் வித்தை உங்கள் எழுத்தின் ஜாலம் !

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!