Thursday, October 24, 2013

அங்கே நடந்தது...

 
அன்புடன் ஒரு நிமிடம் - 48

ன்னங்க, அரசு எப்படி இருக்கான்? தாத்தாவிடம் போனதில் நல்ல முன்னேற்றம் வந்திருக்குமே? அசகாய சூரர் ஆயிற்றே குழந்தைகள் சைக்காலஜியில்?” ஆவலுடன் கேட்டாள் ஜனனி.
 
வாசுவின் எரிச்சல் அவர் கையிலிருந்த பையைத் தூக்கிப் போட்டதிலேயே தெரிந்தது.சுத்த வேஸ்ட்! நாளைக்கே அவனை அனுப்பி வைக்க சொல்லிட்டேன்!
 
ஜனனி முகத்தில் அதிர்ச்சி. என்ன ஆச்சு? இந்தப் பையன் சரியா படிக்க மாட்டேங்கறான், ரெண்டு மாசம் அப்பாவிடம் அனுப்பி வைத்தால்தான் உருப்படுவான்னு நீங்கதானே ஊரில் கொண்டு போய் விட்டீங்க? ஒரு வாரம் கூட ஆகலே. இப்ப நீங்க அங்கே போனதே அனாவசியம். பொறுப்பை நம்பிக்கையோட  ஒப்படைச்சா அலட்டாம இருக்கணும்.
 
சொல்லுவே! நல்லவேளை இப்பவே போய்ப் பார்த்தேன். அங்கே என்ன நடக்குது?”
 
அங்கே என்ன நடக்குது?”
 
நேத்திக்கு நடந்ததை சொல்றேன். விடிகாலையில அவனை அழைச்சுட்டு போய் ஓடையில மீன் பிடிக்க கத்துக் கொடுத்திட்டிருக்கார்.  ரெண்டு மணி நேரம்! என்னென்ன மீன் எப்படி எப்படி இருக்கும், என்ன வித்தியாசம் எட்ஸெட்ரா எட்ஸெட்ரா! அதான் பாடம் நடக்குது! சாயங்காலம் என்னடான்னா  ரெண்டு பேருமா பக்கத்து பலசரக்குக் கடைக்குப் போய் அங்கேயிருந்த நியூஸ்பேப்பரில கவர் செய்து கொடுத்துட்டிருக்கிறாங்க. இந்த ரெண்டு அசடுகளையும் நல்ல உபயோகிச்சிட்டிருக்கான் அவன்!
அப்புறம் நைட்ல பார்த்தால் தாத்தாவும் பேரனும் சைக்கிளை எடுத்திட்டு பக்கத்து கிராமத்தில் நடக்கிற தோல் பாவை நிழற்கூத்துக்கு கிளம்பிட்டாங்க!
 
எல்லாத்தையும் பார்த்துட்டு எப்படித்தான் உங்களால சும்மாயிருக்க முடிஞ்சதோ?”
 
பல்லைக் கடிச்சிட்டுத்தான்! நாளைக்கே அவனை அனுப்பி வைக்க சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
 
இப்ப திருப்தியாச்சா?”
 
ரொம்பவே!
 
அவரிடம் உங்க கிலேசங்களை எல்லாம் பத்தி சொல்லி விளக்கம் கேட்கலே?”
 
விவரமில்லாம செய்யறார், அவருக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான், அதானே விளக்கம்?”
 
கேட்டிருந்தா சரியான பதில் சொல்லியிருப்பார்.
 
ஏன் அப்படி சொல்றே?”
 
 “ஏன்னா இப்பதான் போனில என்கிட்ட சொன்னார்.
 
என்ன சொன்னார்?”
 
 “ஒரு பையன் வாழ்வில் அறிவு பூர்வமா முன்னேறணுமானால் அவனிடம் இன்ஸ்டில் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள் மூணே மூணுதான்! அதைத்தான் நாம் ஏற்படுத்தறதில்லே. அதை ஏற்படுத்தத்தான் அவர் சிரமம் எடுத்துக்கறார்.
 
ஓஹோ?”
முதலாவது ஆர்வம். Curiosity.  அது இருந்தால் எதையும் சிறப்பா கத்துக்க வைக்கும். மீன் பிடிக்க அழைச்சுட்டுப் போனது அதுக்கு ஒரு உதாரணம். ஒரு மீனைச்சுத்தி எத்தனை ருசிகரமான விஷயங்கள் இருக்கு பார்னு அவனுக்குக் காட்ட! அதே போல சில விஷயங்களைப் பார்க்கவெச்சு அவனுக்குள்ளே ஒரு ஆர்வ விதையை ஊன்றத்தான் அது அவசியமாகிறது. ரெண்டாவது  அதிசயிக்கிற இயல்பு. A sense of Wonder! அதுக்காகத் தான் அத்தனை தொலைவு அழைச்சுட்டுப் போனார். அந்தத் தோல் பாவை நிழற்கூத்து! மின்சாரமோ கம்ப்யூட்டரோ இல்லாமல் அந்தக் காலத்திலேயே மனிதர்கள் நிகழ்த்தியிருந்த ஓர் கலையின் அபூர்வ வெளிப்பாடுகள் அவன் மனதில் ஓர் அதிசயிக்கிற உணர்வை ஏற்படுத்தலாம். ஏற்படுத்தும். இதுபோல அதிசயிக்க வைக்கிற ஏராளம் விஷயங்களை அவன் ஆர்வமுடன் கற்றுக் கொள்ளத் தூண்டவே இது.  இனி மூணாவதாவும்  முக்கியமாவும் கடமை உணர்வு. தான் படித்து முன்னேறுவதும் மற்றவர்களுக்கும் உலகத்துக்கும் உபயோகமா காரியங்களை சாதிக்க வேண்டுவதும் தன் கடமை என்று அவன் உணரவே அந்த உதவி! பிளாஸ்டிக்கைத் தவிர்த்து சுற்று சூழலைத் தூய்மைப் படுத்தவும், அதே சமயம் சகமனிதருக்கு உதவவும் எண்ணங்கள் மனதில் உருவாகவே அவனை அழைத்துக்கொண்டுபோய் அந்த கடைக்காரனுக்கு பேப்பர் பைகள் செய்து கொடுத்தாங்க. இந்த மூன்று குணங்களும் கொண்டு அவன் மனசில் ஒரு அடித்தளம் அமைத்து விட்டால் போதும்! மற்றதெல்லாம் அவன் தானே உருவாக்கிக் கொண்டு விடுவான். ஆக, அவன் உருப்படணும்னுதானே அங்கே அனுப்பினீங்க. உருப்படியான விஷயங்களைத்தான் அவர் செய்து கொடுக்கிறார். நீங்கதான் அதை புரிஞ்சிக்காம...
 
வாசு போனை எடுத்தார்,
பேரனை அனுப்ப வேண்டாம் என்று தாத்தாவைக் கேட்டுக்கொள்ள.     
 
('அமுதம்' ஜூலை 2013 இதழில் வெளியானது)
<<<>>>
(படம்: நன்றி: கூகிள் )
 
 

15 comments:

மனோ சாமிநாதன் said...

ஒரு குழந்தை அழகாய் அறிவுப்பூர்வமாய் வள‌ர்வதற்கு வேண்டிய முக்கிய விஷயங்களை மிகவும் அழகாய் எடுத்துரைத்திருக்கிறீர்கள்!! அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அங்கே நடந்ததும், அதை விவரித்ததும் அருமை, பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//('அமுதம்' ஜூலை 2013 இதழில் வெளியானது)//

வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வாசுவிற்கு எதையும் யாராவது சொன்னாத்தான் புரியும் போல...

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

அங்கே நடந்தது அறிவுப்பூர்வமானது..ரசிக்கவைத்தது..!

கவியாழி said...

Curiosity இருந்தால் எதையும் சிறப்பா கத்துக்க வைக்கும்.

Rekha raghavan said...

நாங்களும் போனை எடுக்கிறோம். இப்படி ஒரு அருமையான விஷயத்தை அளித்ததற்கு உங்களை பாராட்ட.

Yaathoramani.blogspot.com said...

படிப்பவர் அனைவருக்குள்ளும்
அந்த மூன்று அற்புத குணம் குறித்த
சிந்தனையை விதைத்துப் போகும்
அருமையான பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான விஷயத்தினை அழகாய்ச் சொன்னது உங்கள் பகிர்வு.....

பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

# ஒரு மீனைச்சுத்தி எத்தனை ருசிகரமான விஷயங்கள் இருக்கு பார்னு அவனுக்குக் காட்ட!#
தாத்தா பேரனுக்கு மீன் ருசியைக் காட்டலே ,அதுக்குப் பதிலாய் வாழ்க்கைக்கு தேவையான மூன்று ருசிகளை காட்டிவிட்டாரே ...அவருக்கும் சபாஷ்,எழுதிய உங்களுக்கும் ஒரு சபாஷ் !
த.ம 5

Unknown said...

# ஒரு மீனைச்சுத்தி எத்தனை ருசிகரமான விஷயங்கள் இருக்கு பார்னு அவனுக்குக் காட்ட!#
தாத்தா பேரனுக்கு மீன் ருசியைக் காட்டலே ,அதுக்குப் பதிலாய் வாழ்க்கைக்கு தேவையான மூன்று ருசிகளை காட்டிவிட்டாரே ...அவருக்கும் சபாஷ்,எழுதிய உங்களுக்கும் ஒரு சபாஷ் !
த.ம 5

Mahi said...

அடிப்படை சரியாக அமைந்துவிட்டால் மற்றவை தானாக நடக்கும் என்பதை தாத்தா பேரனுக்கு அழகாகக் கற்றுகொடுக்கிறார். நல்லா இருக்குங்க!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான விசயத்தை அழகாய் கூறியுள்ளீர்கள்

ADHI VENKAT said...

அருமை. முக்கிய விஷயங்களை இவ்வளவு சிறப்பாக கற்றுக் கொடுத்தது, தாத்தா சாத்வீகன் தானே....:) தொடருங்கள்.

ரிஷபன் said...

நல்லா இருக்கு.. முக்கிய விஷயங்களை கற்றுக் கொடுத்தது ..

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!