Thursday, October 17, 2013

காரணம் வேறு...

 
அன்புடன் ஒரு நிமிடம் - 47

 
நீங்க என்ன சொன்னாலும் சரி, இந்த விஷயத்தில் ரகு செய்ததை நான் சரின்னு சொல்லப் போறதில்லே!” கிஷோர் முகத்தில் ஆத்திர ரேகைகள்.
 
நீ இன்னும் விஷயத்தையே சொல்லலியே?” என்றார் ராகவ்.
 
சொன்னான். பின்னே என்ன மாமா, எப்பன்னாலும் நான்தான் அவனுக்கு போன் பண்ண வேண்டியிருக்கு, அல்லது நேரில போய் சொல்ல வேண்டியிருக்கு. அவன் அடிக்கடி செல்லும் ரயில் டைம் மாறினதிலேர்ந்து அவங்கப்பாவோட ஆஸ்த்மா வியாதிக்கு புதுசா வந்திருக்கிற இயற்கை சிகிச்சை மாதிரி பெரிய விஷயம் வரை! ஆனா எனக்கு அவன்கிட்டேயிருந்து சாதாரணமா ரெண்டு வார்த்தை பேசக்கூட ஒரு கால் வராது. எப்பவுமே இப்படித்தான். இதை எப்படி நான் ஏத்துக்கறது?  வெளியில நாங்க ரெண்டு பேரும் நல்ல அன்னியோன்னியமான நண்பர்கள்னு பேரு....
 
கொஞ்ச நேரம் இவரிடம் அமைதி. பார்த்தீங்களா? உங்களுக்கே என்ன சொல்றதுன்னு தெரியலே!
 
அதெல்லாம் இல்லே, ஒரு சின்ன சந்தேகம். கேக்கலாமாண்ணுதான்... என்றார், நீ ஓரொரு முறை போன் செய்து அவனுக்கு உதவியான, தேவையான விஷயங்களை சொல்லுகிறே... நல்ல விஷயம்.! சரி, பொதுவா அவனுக்கு எப்பல்லாம் போன் செய்யறே?”
 
ஒவ்வொரு தடவை இப்படி ஏதாச்சும் விஷயம் படித்தாலோ கேள்விப்பட்டாலோ, உடனே!
 
மற்றபடி வாரத்துக்கு ரெண்டு நாள் அப்படி இப்படின்னு ரெகுலரா பேசறதில்லையா?’
 
முதல்லே அதுக்கு டைம் இல்லே. அதான் எந்த விஷயம் அவனுக்கு தேவைப்படும்னு தோணினாலும் நானே...
 
நான் கேட்டது வேறே! சாதாரணமா அவனைக் கூப்பிட்டு நீ பேசறது பத்தி.
 
மாமா, உங்களுக்கே தெரியும் நான் எத்தனை பிசின்னு... ஆனா நான் ஒவ்வொரு தடவை போன் செய்யும்போதும் என்கிட்டேர்ந்து அவனுக்கொரு உருப்படியான தகவல் போய்க்கொண்டுதான் இருக்கு தெரியுமா?”
 
அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். நீ சாதாரணமா அவனைக் கூப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறதில்லை. அப்புறம் அவனிடமிருந்து மட்டும் அப்படி ஒன்றை எதிர்பார்க்கிறது என்ன நியாயம்?”
 
அவனுக்கு புரியவில்லை அந்தக் கேள்வி.
 
...நீ ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு விஷயத்தை அவனுக்கு சொல்றதுக்காக மட்டுமே அவனுக்கு போன் செய்கிறே. ஆக, அந்த விஷயத்தில் நீ முதலில் திருப்தி அடைவது அதை சொல்லுவதிலிருந்துதான்! தட் மீன்ஸ் அப்படி சொல்லுவதில் உள்ள அந்த உன் ஆர்வம், பெருமை, அதனால் உன் மேல் உனக்கு சுய மதிப்பு அதிகரித்தல்! அதெல்லாம் காரணமாக இருக்கலாம் இல்லையா? அதற்குமேல் அவன் உன்னிடம் அடிக்கடி பேசணும்னு ஏன் எதிர்பார்த்திட்டு?...
 
சரி, அதே காரணத்துக்காக அவனும் எனக்கு போன் பண்ணலாமில்லையா?
 
அந்த பெருமையிலோ, சுயமதிப்பை அளவிடறதிலோ அவனுக்கு ஆர்வம் இல்லாமலிருக்கலாம் இல்லையா?”
 
பொட்டிலடிச்சாப்பில சொல்லிப்பிட்டீங்க...  
 
 “…மற்றபடி உன்னைப்போல அவனும் பிஸியாக இருக்கிறதால போன் பண்ணத் தோன்றியிருக்காது அவ்வளவுதான்!
 
பொருத்தமான  பதில் கிடைத்த திருப்தியில் அவன் எழுந்தாலும்... ஒரு சின்ன ஏமாற்ற ரேகை முகத்தில் ஓடிற்று.
 
இரு,” என்றார், இதையும் கேட்டுப் போ! உன் ஏமாற்றம் எனக்குப் புரியுது. இப்படி அடிக்கடி நீ உதவிகரமா பேசணும், மறந்து விட்டுவிடக் கூடாது அப்படீங்கிறதுக்காகவாவது உனக்கு அவன் இடையிடையே போன் செய்யலாம்தான். ஆனா ஒரு விஷயம் கவனிச்சியா? உன்மேல அவனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை! தான் பேசிக்கொண்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியமானது எதுவானாலும் மறக்காம சொல்லிடுவே நீ அப்படீன்னு! அந்த நம்பிக்கை! அது உனக்கு இன்னும் பெருமையான விஷயம் இல்லையா?”
 
அந்த ரேகையும் கழன்று கொண்டது.  
 
('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது)
<<<>>> 
(படம் - நன்றி: கூகிள் )
 

19 comments:

ராஜி said...

நுணுக்கமான உணர்ச்சியை வெளிக்காட்டிய சிறுகதை அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... முடித்த விதமும் அருமை... வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“அந்த பெருமையிலோ, சுயமதிப்பை அளவிடறதிலோ அவனுக்கு ஆர்வம் இல்லாமலிருக்கலாம் இல்லையா?”//

// உன்மேல அவனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை! தான் பேசிக்கொண்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியமானது எதுவானாலும் மறக்காம சொல்லிடுவே நீ அப்படீன்னு! அந்த நம்பிக்கை! அது உனக்கு இன்னும் பெருமையான விஷயம் இல்லையா?”//

அருமை. மிகவும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது)//

சந்தோஷம். நல்வாழ்த்துகள்.

அன்புடன் VGK

இராஜராஜேஸ்வரி said...

ஏமாற்ற ரேகையும் கழன்று கொண்டது.-
மாறுதலான சிறுகதைக்குப் பாராட்டுக்கள்..!

Ramani S said...

நிச்சயம் பெருமைதான்
மனம் கவர்ந்த கதைப் பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 4

Anonymous said...

வணக்கம்
கதையின் ஆரம்பம் முடிவு இரண்டும் சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Raghavan Kalyanaraman said...

புதிய கோணத்தில் சிந்திக்க வைத்த கட்டுரை. அருமை. பாராட்டுகள்.

Mahi said...

நல்லதொரு படிப்பினையைத் தந்த கதை..அருமை!

கரந்தை ஜெயக்குமார் said...

முடித்த விதம் அருமை

இளமதி said...

கதையின் போக்கும் நிறைவும் மனதை நிறைத்தது!..

அருமை!.. ரசித்தேன் சகோ! வாழ்த்துக்கள்!

என் வலைத்தளத்தில் உங்கள் வாழ்த்திற்கும்
மனமார்ந்த நன்றி!

ராமலக்ஷ்மி said...

தெளிவான காரணங்கள்!

கதை அருமை.

உஷா அன்பரசு said...

உண்மையான கருத்தையும் சொல்லி அதை புண்படாதவாறும் முடித்தது அருமை!
போன் பேச்சு என்றாலே எனக்கு அலர்ஜி... நேரத்தை விழுங்கும் பூதமாகத்தான் நிறைய பேர் கையாளுகிறார்கள் என்பதால் நபர் அறிந்து விஷயமறிந்துதான் பயன்படுத்துவேன்.

ஹ ர ணி said...

அன்புள்ள ஜனா.

எளிமை. எதார்த்தம். நுட்பம் . அழகு. பாந்த்மாக உள்ளது படிக்க.

கிரேஸ் said...

அழகாகப் புரியவைத்துவிட்டாரே ..அருமை!

கீத மஞ்சரி said...

குழப்ப ரேகைகளையும் ஏமாற்ற ரேகைகளையும் எளிதில் நீவிக் களைந்துவிடும் அனுபவப்பாடம். அதைச் சொல்லியவிதமும் நேர்த்தி. பாராட்டுகள் ஜனா சார்.

ரிஷபன் said...

தான் பேசிக்கொண்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியமானது எதுவானாலும் மறக்காம சொல்லிடுவே நீ அப்படீன்னு! அந்த நம்பிக்கை! அது உனக்கு இன்னும் பெருமையான விஷயம் இல்லையா?”


சில சமயம் எனக்கும் இந்த வருத்தம் வரும்.. ஆனா இப்போ உங்க கதை படிச்சதும் அந்த வருத்தம் கழன்று போச்சு எனக்கும்.

Mahi said...

நட்பில் ஈகோ எட்டிப் பார்க்கக் கூடாது..இப்படி எதிர்பார்ப்புகளும் இருக்கக்கூடாது.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!