Friday, August 16, 2013

ஒரே ஒரு வார்த்தை...





அன்புடன் ஒரு நிமிடம் - 41

மெல்லத் துயிலெழுந்து ஒரு கொட்டாவியை வெளிவிட்டபோது எட்டாகியிருந்தது மணி. உள்ளே எட்டிப் பார்த்தபோது யாழினி அதற்குள் எழுந்து குளித்து பூஜை முடித்துவிட்டு பிஸியாக இயங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தான் கிஷோர். ஞாயிற்றுக் கிழமையானாலும் அவளுக்கு வேலை குறைவில்லை போல.
 
சற்றே வெட்கமாகத்தான் இருந்தது.
 
அவன் எதிர்பார்த்த சூடு காபியில், எதிர்பாராத ஃபேவரிட் ஆப்பம் டிபனில்...  

என்ன செய்து அவளை சந்தோஷப் படுத்தலாம் அன்று என யோசித்தான்.
 
சில வழிகள் புலப்பட்டன.
 
அன்றைக்கான அவளின் தையல் வகுப்புக்கு கிளம்பினாள் யாழினி. சபாஷ், அவள் வருவதற்குள் முடித்து விடலாம்!
 
டிபன் சாப்பிட்டான பின் முதல் வேலையாக கார்டனில் காலை வைத்தான். ரோஸ், சிவப்பு, வெள்ளை என்று தொட்டிகளில் வைத்திருந்த ரோஜா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி மண்ணைக் கிளைத்து உரமிட்டான். ஒவ்வொன்றாக பார்த்து ஆராய்ந்து சில செடிகளுக்கு கிளையை நறுக்கி பதியம் வைத்தான். வந்ததும் பார்த்து யாழினி எத்தனை ரசிப்பாள் இதை என்று நினைக்கும்போதே பரவசமாயிருந்தது.
 
அடுத்து புத்தக அலமாரிக்கு வந்தான். குவிந்து கிடந்த அத்தனை புத்தகங்களையும் வகை பிரித்து ஒழுங்காக அடுக்கினான். வந்ததும் பார்த்து யாழினி எத்தனை ஆச்சரியப் படுவாள்!
 
பழைய ஆங்கில தமிழ் தினசரிகளை அடுக்கிக் கட்டி வைத்தான்.
 
யாழினி வந்தாள். ஒவ்வொன்றாகக் காட்டினான். ஐயோ, எத்தனை மெனக்கிட்டு... எல்லாம் நீங்களே பண்ணினீங்களா?”
 
ஆமா, எல்லாம் உன்னைக் கவரத்தான் பண்ணினேனாக்கும்! என்றான் பெருமையாக.
 
அவள் முகத்தில் சுடர் விடத் தொடங்கியிருந்த பரவசம் சட்டென்று அணைந்து போனது.
 
அவனுக்கு ஏமாற்றமாகிப் போனது.
 
என்னதான் அப்புறம் சிரித்து பேசினாலும் அவள் அப்படி ஒன்றும் மகிழ்ந்து போய்விடவில்லை என்பது உறுத்திக் கொண்டே இருந்தது.
 
புரிஞ்சுக்கவே முடியலே என்னால இவளை! என்று ஆரம்பித்து அத்தனையையும் சொன்னான்  
 
எல்லாவற்றையும் வரி விடாமல் கேட்டுக் கொண்டார் ராகவ்.
 
ஒரு புன் சிரிப்பு அவர் முகத்தில் அரும்பிற்று.

வீடு நிரம்ப பூச்செடிகள் இருந்தா எத்தனை அழகாயிருக்கும்னு அடிக்கடி சொல்லுவாள் மாமா! வீட்டுக்கு வர்றவங்க ரோஜா செடிகளை ரொம்ப ரசிப்பாங்களாம். புத்தகங்கள், துணி மணிகள்னு வீட்டில ஒவ்வொரு பொருளும் நீட்டா அடுக்கப்பட்டு உரிய இடத்தில் இருப்பதன் சிறப்பையும் வனப்பையும்  நிறைய முறை சொல்லியிருக்கா. எத்தனை சிரமப்பட்டு எல்லாம் செய்தேன்? கடைசியில் அவள் அத்தனை மகிழ்ந்ததாத் தெரியவில்லையே?”
 
நீ செய்ததெல்லாம், சிரமப்பட்டதெல்லாம் சரிதான் கிஷோர். ஒரே ஒரு வார்த்தை. அதை மாற்றிச் சொல்லியிருந்தால் போதும். அவள் அகமகிழ்ந்திருப்பாள்!
 
இவனுக்குப் புரியவில்லை. ஒரே ஒரு வார்த்தை?”
 
ஆமா, நீங்களே பண்ணினீங்களா என்று அவள் கேட்டதற்கு நீ என்ன சொன்னாய்?”
 
எல்லாம் உன்னைக் கவரத்தான் பண்ணினேனாக்கும் அப்படீன்னு சொன்னேன்.
 
அதான். அந்த வார்த்தைதான்!
 
எந்த வார்த்தை?”

உன்னைக் கவரத்தான் அப்படீன்னு சொன்னாயில்லையா? உன்னால் கவரப்பட்டுன்னு சொல்லியிருக்கணும்.
 
அவன் விழிக்க அவர் தொடர்ந்தார்.
 
ஆமா, அவள் சொன்ன நல்ல விஷயங்களை செய்து அவளை மகிழ்விக்கிறாய் என்பதை விட அந்த நல்ல விஷயங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை சந்தோஷமாக செய்தாய் என்பது தானே அவளுக்கு அதிக மகிழ்ச்சி தருவது? அந்த செயல்கள் உனக்கு ரசனையும் சந்தோஷமும் அளித்தது என்பதே அவள் பெறும் பெரும் சந்தோஷம்!
 
நல்லதொரு விஷயம் சொன்னீங்க! என்றான்.
 
('அமுதம்' ஏப்ரல் 2013 இதழில் வெளியானது)
<<>>
(படம் - நன்றி: கூகிள்)
 

15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“உன்னைக் கவரத்தான் அப்படீன்னு சொன்னாயில்லையா?

உன்னால் கவரப்பட்டுன்னு சொல்லியிருக்கணும்.”//

’ஒரே ஒரு வார்த்தை’ மாறினால் ஓராயிரம் அர்த்தங்கள் கிடைக்கும் தான். அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.


இன்றைக்கு மேலும் ஓர் சிறப்புப்பதிவு, என் தளத்தில். நேரம் இருந்தால் வருகை தாருங்கள்:

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html

Rekha raghavan said...

நாம் பேசும் ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றிப் போடும் என்பதற்கு நல்ல உதாரணம். அருமை சார்!

ரிஷபன் said...

உங்களால் கவரப்பட்டேன்..

Anonymous said...

வணக்கம்
கதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஹ ர ணி said...

அன்புள்ள ஜனா..

உண்மைதான். இந்த எதார்த்தம் புரியாமல்தான் பல பிரச்சினைகள் தலையெடுத்துவிடுகின்றன.

கோமதி அரசு said...

நல்லதொரு விஷயம் சொன்னீங்க!” என்றான். //

ஆம், பேசுவது பெரியகலை.
அதை அழகாய் சொன்னீர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நல்லதொரு விஷயம் சொன்னீங்க!” பாராட்டுக்கள்..!

ராஜி said...

அன்பு வார்த்தைகள் பண்ணும் ஜாலத்தை அறிந்து கொண்டேன்

Yaathoramani.blogspot.com said...

கதையால் மிகவும் கவரப்பட்டேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

கீதமஞ்சரி said...

சின்ன சின்ன நிகழ்வுகளிலும் சம்பாஷணைகளிலும் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் அழகான வாழ்வியல் கதைகளின் வரிசையில் மற்றுமொன்று. மனம் நிறைந்த பாராட்டுகள் ஜனா சார்.

தி.தமிழ் இளங்கோ said...

மனிதர்கள் வார்த்தை ஜாலத்தில் விழுந்து விடுவார்கள். அப்படித்தானே?

Mahi said...

ஒரு சில வார்த்தைகளை மாற்றினால் அந்த சூழ்நிலையே மாறிவிடும் என்பதை அழகா காமிச்சிட்டீங்க. அடுத்த முறை கிஷோர்(கள்) இதனை நினைவில் வைத்து யாழினி(களை) சந்தோஷப்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும். :)

Ranjani Narayanan said...

உங்களது ஒரு நிமிட கதை எல்லாமே மிகவும் நுணுக்கமான விஷயங்களை சட்டென்று மனதில் படும்படி சொல்லுகின்றன.
மஹியின் காமெண்ட்டை ரொம்பவும் ரசித்தேன்!

ராமலக்ஷ்மி said...

/ “நல்லதொரு விஷயம் சொன்னீங்க!”/

எங்களுக்கும்:)!

அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!