Wednesday, February 15, 2012

நல்லதிர்வு

னக்கு ஷாக். அப்பா என்ன இங்கே வந்து நிற்கிறார்? 
பேப்பர்காரர்தான்  பில்  கொடுப்பதற்காக கதவைத் தட்டுகிறார் காலையில் என்று நினைத்து திறந்தால் எதிரில் அப்பா.
இந்நேரம் இவர் திருச்சியில் அல்லவா இருக்க வேண்டும்? மாமா அப்படித்தானே சொன்னார் போனில்?  திருச்சிக்குப் போய் தம்பியைப் பார்த்து பேசி எல்லாம் சரி பண்ணியிருப்பார் என்று நினைத்தால் இங்கே வந்திருக்கிறாரே? தோளுக்கு மேல வளர்ந்துட்டவன்கிட்டே எப்படி பேசன்னு பயந்து தயங்கிட்டாரா? எப்பவுமே தன் அபிப்பிராயத்தை தயங்காமல் அழுத்தமாகவும் தகுந்த காரணங்களோடும் அழகாய்ப் பேசி நிலை நிறுத்துவார் என்று எல்லோரும் சொல்லுவார்களே அந்த என் அப்பாவா அங்கே  போகத் தயங்கிஇருப்பார்? என் மனதால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 
''வாங்கப்பா...'' என்று கையைப் பற்றி சூட்கேசை வாங்கிக் கொண்டேன். 
உள்ளிருந்து நா நிறைய  ''வாங்க மாமா!''வுடன் வந்த பத்மாவின் கண்களிலும் அரை வினாடி தோன்றி மறைந்த ஆச்சரியத்தைக் கவனித்தேன்.. 
''எப்படி இருக்கிறீங்க, பசங்கல்லாம் எழுந்துட்டாங்களா? '' என்றபடியே சோபாவில் சுவாதீனமாக அமர்ந்தார். 
காலைப் பேப்பரைக் கையில் கொடுத்தேன். ''காபி எடுத்திட்டு வா பத்மா,'' என்றேன். உள்ளே போனாள்.
தம்பி விஷயம் என்ன ஆயிற்று என்று இப்ப உடனே கேட்க வேண்டாமே! அவரே சொல்லுவார் ஏன் போகவில்லை என்று. அதை சொல்லத்தான் இங்கே வந்திருப்பார். என்ன தான் நாங்கள் அவர் மகன்கள் என்றாலும் அப்பா தகுந்த அவசியம் இல்லாமல் ஒரு முறை கூட எங்கள் இருப்பிடத்துக்கு அடியெடுத்து வைத்ததில்லை..
காலை சிற்றுண்டி ஆகட்டும், ஆற அமர கேட்போம் என்று தீர்மானித்தேன். நேற்று மாமா போன் பண்ணினது மனதுக்குள் ஓடிற்று.
''ஏம்பா கதிரேசா, நீ படிச்சு முடிச்சுட்டு சென்னையில  ஒரு கம்பெனியில வேலைக்கு சேர்ந்து அசிஸ்டண்டா இருக்கே. ஆனா உன் தம்பி முருகேசன் திருச்சியில இன்னும் அந்த பலசரக்கு கடையில பொட்டலம் மடிச்சு கொடுக்கிற வேலை பார்த்திட்டு பெண்டாட்டி பிள்ளைகளோட கஷ்டப் பட்டுட்டு இருக்கிறானே? உங்க அப்பாவுக்கு அதில ரொம்பக் கவலைன்னு நினைக்கிறேன்.''
''பின்னே இருக்காதா மாமா? பத்து வருஷமா அவன் அப்படியே ஒரு முன்னேற்றமும் இல்லாம... இருக்கத்தானே செய்யும் அப்பாவுக்கு கவலை? என்ன, உங்களிடம் ஏதாச்சும் சொல்லி வருத்தப்பட்டாரா?''
''விலா வாரியா ஏதும் சொல்லலே. சுருக்கமா சொன்னார். என் மகன் போகிற போக்கு எனக்கு திருப்தியா இல்லை, போய் பார்த்து அட்வைஸ் பண்ணணும், மேலே கொண்டு வரணும்னு சொன்னார். அடுத்த ஞாயிற்றுக் கிழமை போய்ப் பார்க்கணும்னு சொன்னார்.''
எனக்கும் அப்பாவின் எண்ணம் பிடித்திருந்தது. யாராவது பெரியவங்க பார்த்து அவனுக்கு கொஞ்சம் எடுத்து சொன்னால் நல்லதுன்னு எனக்கும் ரொம்ப நாளாகத்  தோன்றிக் கொண்டே இருந்தது.  கிடைத்தது  எந்த வேலையாக இருந்தால் என்ன, அதிலிருந்து எந்தெந்த  முன்னேற்றங்களுக்கு சான்ஸ் உண்டோ அவற்றை ஒவ்வொன்றாகப் பற்றி மேலே வருவது தானே சரி? இவனுக்கு இன்னும் அது உறைக்கவில்லையே மனதில்? 
அப்பா பேச்சில் சமர்த்தர். அவர் எடுத்து சொன்னால் நிச்சயம் கேட்கத் தோன்றும் யாருக்குமே. நல்ல விஷயம் தான் நடக்கப் போகிறது இந்த ஞாயிற்றுக் கிழமை என்றிருந்தால் ஞாயிற்றுக் கிழமை அதை கான்சல் செய்து விட்டு அவர் இங்கே வந்து நிற்கிறார் என்றால் எனக்கு ஏன் ஆச்சரியமும் கவலையும் இராது?

த்மா பதமாகச் செய்திருந்த இடியாப்பத்தை ஆசையுடன் இன்னொன்று, இன்னொன்று என்று வாங்கிச் சாப்பிட்டார். பிள்ளைகளுடன் சற்று நேரம் செஸ் ஆடினார். அவர்கள் வெளியேயும் பத்மா காய் வாங்க மார்கெட்டுக்கும் சென்ற பின் மெதுவாக என் அருகில் வந்து உட்கார்ந்ததும் நான் கேட்டேன். ''நீங்க இன்னிக்கு திருச்சிக்குப் போயிருப்பீங்கன்னு நினைச்சேன்பா!''
''அப்படியா? ஏன் அப்படி நினைக்கப் போச்சு?''
''மாமா சொன்னார் நேத்து!  தம்பியைப் பார்த்து கொஞ்சம் அட்வைஸ் பண்ணனும்னு சொன்னீங்களாமே, கேட்டு சந்தோஷப்பட்டேன்!''
''ஒ என்ன சொன்னார் மாமா உன்கிட்டே?''
''என் மகன் போக்கு சரியில்லே, இந்த சண்டே அவன் வீட்டுக்குப் போய் கொஞ்சம் எடுத்து சொல்லணும்னு சொன்னீங்களாமே?''
''ஆமாம். அப்படித்தான் சொன்னேன்.''
''அப்புறம் இன்னிக்கு இங்கே வந்திருக்கீங்களேன்னு ...''
''அதானே இங்கே வந்திருக்கேன்!''
அதிர்ந்தேன். ''அப்பா நீங்க..''
''ஆமா நீயும் என் மகன்தானே? என் மகன்னு தானே சொன்னேன்?''
என்ன சொல்ல என்று தெரியாமல் நான் அமர்ந்திருக்க அவர் தொடர்ந்தார். அமைதியாக அழுத்தமாக தன் வார்த்தைகளை.
''நல்ல மூளையை வைத்துக்கொண்டு அதை  உரிய முறையில் பயன் படுத்தாதவங்க இருக்கிறாங்களே, அவங்களைத்தான்  என்னால ஏத்துக்க முடியறதில்லே. ஆரம்பத்திலிருந்தே நீ எப்பவும் ஃபர்ஸ்ட் ராங். உன் தம்பி எப்பவும் கடைசி.  அவனுக்கு அவ்வளவுதான் வருது! அதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாதவன். அப்படியிருந்தும் ஏதோ தன் அறிவுக்கு எட்டற மாதிரி ஒரு வேலையை சம்பாதித்துக் கொண்டு அதை வைத்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறான்.  அதிலும் அவன் உடல் ரீதியா இயன்ற வரை உழைச்சு முடிந்த வரை முன்னேறி, இன்னிக்கு நாலு பேரும் நல்லா சாப்பிடறாங்க.  ஃபாஸ்ட் வொர்கர்னு பேர் வாங்கி இருக்கான். மிச்ச சமயத்தில வேறு வேலை பார்த்து  உபரியா நாலு  காசு சம்பாதிச்சு பிள்ளைகளை தகுந்த விதத்தில படிக்க வைக்கிறான்.  ஆனா அவனை விட பிரமாதமா மூளை வாய்க்கப் பெற்ற நீயோ பத்து வருஷம் முந்தி சேர்ந்த அதே அசிஸ்டன்ட் வேலையிலேயே  இன்னமும் இருந்திட்டிருக்கே. நீ நினைச்சா பிரமோஷன் டெஸ்ட்  எழுதலாம், சைடில் ஏதேனும் கோர்ஸ் படிச்சு டெக்னிகல்  எக்ஸ்பெர்ட் ஆகலாம். தகுதியை அதிகரிச்சு, வேறு நாலஞ்சு கம்பெனி இன்டர்வியூ அட்டென்ட் செய்து பெரிய பெரிய வேலைக்கு முயற்சிக்கலாம்.அந்த மாதிரி ஒரு பெரிய பொறுப்புள்ள வேலையில நீ அமரும்போது உன்னால அந்த கம்பெனி எவ்வளவு முன்னேறும்? அதனால எத்தனை ஆயிரம் பேர் பயன் அடைவாங்க?''
என்ன அழகாகாச் சொல்லிவிட்டார்! ''ஆமாப்பா. நீங்க சொல்றது மிகச் சரி.'' என்றேன்.
''சந்தோஷம். யோசிக்க ஆரம்பிச்சுட்டே. இனிமேல் சரி பண்ணிடுவே. இதுவரை இந்தத் தவறைப் பத்தி நீ யோசிச்சிருக்கவே இல்லை, இல்லையா?''
''அதெப்படி சொல்றீங்கப்பா?''
''அப்படி ஒரு நினைப்பு உனக்கு இருந்திருந்தா நேத்திக்கு மாமா என் மகனைப் பார்க்க நான் போறேன்னு சொன்னதைத தெரிவிச்சதுமே என்னை இங்கே எதிர்பார்த்திருப்பியே?''
''உண்மைதாம்பா!'' என்றேன்.

('அமுதம்'  இதழில் வெளியான சிறுகதை)
<><><>

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான கதை. பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை.... நல்ல அறிவுரையும் கூட....

கீதமஞ்சரி said...

அப்பாவின் யதார்த்தப் பேச்சு பிரமாதம். பொட்டலம் மடிக்கும் வேலையானாலும் அதைச் சிரத்தையுடன் செய்யும் மகனைவிடவும் திறமையை மேம்படுத்திக்கொண்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றத் துணியாத மகனே அப்பாவின் பெருத்தக் கவலைக்குரியவர் என்பதை எவ்வளவு அழகாகக் காட்டியுள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்.

கோவை2தில்லி said...

அருமையான கதை.

ஸ்வர்ணரேக்கா said...

பொட்டில் அடித்த யதார்த்தம்...

நடையும் அருமை..

ராமலக்ஷ்மி said...

வருவது போதுமென வாழும் மகனுக்கு, வசதி குறைவானாலும் உழைப்பில் குறைவற்ற இன்னொரு மகனை உதாரணம் காட்டித் தந்தை சொல்லியிருக்கும் அறிவுரை அற்புதம்.

அப்பாவி தங்கமணி said...

Simply Superb...;)

ரிஷபன் said...

அந்த மாதிரி ஒரு பெரிய பொறுப்புள்ள வேலையில நீ அமரும்போது உன்னால அந்த கம்பெனி எவ்வளவு முன்னேறும்? அதனால எத்தனை ஆயிரம் பேர் பயன் அடைவாங்க?''

அருமையான கதை!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அழகான சிறுகதை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று ...

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .

ரேகா ராகவன் said...

சின்னவனை விட பெரியவனைத்தான் திருத்தணும் என்று அப்பாவுக்கு தோன்றியது அருமை.

இராஜராஜேஸ்வரி said...

சந்தோஷம். யோசிக்க ஆரம்பிச்சுட்டே. இனிமேல் சரி பண்ணிடுவே. இதுவரை இந்தத் தவறைப் பத்தி நீ யோசிச்சிருக்கவே இல்லை, இல்லையா?''

தந்தையின் கனிவான பேச்சும்
வழிகாட்டலும் அருமை..!

கோமதி அரசு said...

நல்லதிர்வு!

நல்ல கதை, நல்லதிர்வு ஏற்பட்டது உண்மை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!