Tuesday, August 5, 2025

ஹாலிவுட்டின் மனோரமா...


1950 களில் கலக்கிய டிவி ஷோ அது. ‘I Love Lucy.’ பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது. நாயகி பிரபல காமெடி நடிகை. அவரும் கணவரும்தாம் தயாரிப்பாளர்கள். தான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதை அறிவித்தார் நாயகி, வேறு நடிகையைப் போடலாமென்று நினைத்து. அதையே கதையிலும் கொண்டு வந்துவிடலாம் என்றார் தலைமைக் கதாசிரியர். அப்படியே நடந்தது. அந்த 1953 ஜனவரி 19 அன்று நிஜத்தில் குழந்தை பிறந்த அன்று கதையிலும்!
அந்த நடிகை Lucille Ball… ஹாலிவுட்டின் மனோரமா! இன்று பிறந்த நாள்! (1911-1989)
நாலு வயதில் தந்தையை இழந்தவர். பள்ளிக்கூடத்தில் பென்சில்கூட வாங்க முடியாத வறுமையான இளமை. நாடகப் பள்ளியில் சேர்ந்தபோது, ரொம்ப வெக்கப் படறே, டயத்தை வேஸ்ட் பண்ணாதே என்று திருப்பி அனுப்பப் பட்டவர் மிகப் பிரபல நடிகையாகி இரண்டாம் வரிசை படங்களின் அரசியானார்.
மாடலிங், ரேடியோ, டிவி, சினிமா என்று கலக்கியவர். நாடகத்தில் நடிக்க நேரில் கேட்டபோது சேர்த்துக் கொள்ளாதவரை மாடலாக இருந்த போது வெளியான போஸ்டர் சினிமாவில் கொண்டு சேர்த்தது. Bob Hope உடன் ஜோடியாக உயர்ந்தார்.
சொந்த ஸ்டூடியோ வைத்த முதல் பெண்மணி. மூன்று கேமரா உபயோகித்து டிவி ஷோ எடுப்பதை முதலில் ஆரம்பித்து வைத்தது இவர்தான். பிரபல ‘Star Trek’ சீரியலை தயாரித்ததும் இவர் கம்பெனி தான்.
இவரது ‘Lucy and Superman’ எபிசோடில் George Reeves சூபர்மேனாக நடித்தார். டைட்டிலில் அவர் பேரைப் போட சம்மதிக்கவே இல்லையே இவர்? Superman இருக்கிறார்னு நம்பும் குழந்தைகளை ஏமாற்றலாகாது என்று!
“என்னை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலையே?”ன்னு கேட்க மாட்டார், ஏன்னா தன் காமெடி நடிப்புக்குக் காரணம் வசனகர்த்தாவும் டைரக்டரும்தாம் என்று சொல்பவராயிற்றே!
Quote?
‘அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்பது கடும் உழைப்பும் எது சரியான சந்தர்ப்பம், எது இல்லை என்று புரிந்து கொள்வதும் தான்.’
‘உங்களுக்கு எது முடியாது என்பதைத் தெரிந்து இருப்பது உங்களுக்கு எது முடியும் என்பதைத் தெரிந்து இருப்பதைவிட முக்கியமானது.’
‘முதலில் உன்னை நேசி. எல்லாம் சரியாகிவிடும். எல்லா விஷயங்களையும் நடத்த வேண்டுமானால் உன்னை உண்மையாக நேசிக்க வேண்டும்.’

சிறுகதையின் தந்தை...


அந்தக் கதையை அனேகமாக நீங்கள் படித்திருப்பீர்கள். பல மொழிகளில் வெளியான பிரபல கதை...
அவளுக்கு படோபடோபமாக உடுத்துவதிலும் பளிச்சென்று நகையணிவதிலும் கொள்ளை ஆசை. கணவனோ ஒரு சாதாரண வேலையிலிருப்பவன். சராசரி உணவிலேயே மகிழ்பவன். இந்த சாதா வாழ்க்கையில் சதா மனம் வெம்பி வாடுகிறவளை குஷிப்படுத்த அவன் ஒருநாள் பெரிய பார்ட்டி ஒன்றுக்கு அழைப்பைக் கொண்டு வருகிறான்.
அவளோ, "என்னத்தை அணிஞ்சிட்டுப் போறது அங்கே? எல்லா பெண்களும் பிரமாதமா வந்திருப்பாங்களே!" யோசித்து யோசித்து கடைசியில் அவளது பணக்கார பால்ய தோழியிடம் சென்று நகை இரவல் கேட்கிறாள். சம்மதித்த அவளிடமிருந்தவற்றில் ஒரு டைமன்ட் நெக்லஸைப் பொறுக்கி எடுக்கிறாள். போட்டுக் கொண்டு பார்ட்டிக்கு போனால் எல்லாரும் அவளைக் கவனிக்க அவள்தான் centre of attraction. ஒரே உற்சாகம்.
காலை நாலு மணிக்கு டாக்ஸி பிடித்து வீட்டுக்கு வந்தால் கழுத்தில் நகையைக் காணோம். எங்கே போனது? வழிநெடுக தேடிப் பார்க்கிறான். கிடைக்கவில்லை. இப்ப என்ன செய்வது?
கடையில் கேட்டால் அதைப் போல ஒரு நகை 40000 என்கிறார்கள். அவனுடைய சேமிப்புகள் இதற்கு உறை போடக் காணாது. சுற்றிச் சுற்றி கடன் வாங்குகிறார்கள். கடையில் நகையை வாங்கி ஸாரி ஃபார் டிலே சொல்லிக் கொடுக்கிறாள் தோழியிடம். சலிப்புடன் அதை வாங்கி கொள்கிறாள் தோழி.
கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமே? அன்றிலிருந்து நல்ல உழைக்கிறாள். வேலைக்காரியை நிறுத்திவிட்டு வீட்டில் உள்ள எல்லா வேலையையும் செய்கிறாள். அவன் இன்னொரு பார்ட் டைம் வேலையையும் செய்ய, சிறுகச் சிறுக சேமிக்கிறார்கள். பத்து வருட உழைப்பு. எல்லா கடனையும் அடைத்து நிம்மதி பெருமூச்சு! நினைக்கிறாள். ‘சின்ன ஒரு விஷயம் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டு விடுகிறது!’
ஒருநாள் வழியில் தோழியை காணுகிறாள். இப்போது அவளிடம் நடந்ததை சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை இவளுக்கு. சொல்கிறாள். அவள் கேட்கிறாள்: “உண்மையான வைர நெக்லஸா வாங்கி கொடுத்தே எனக்கு? அது வெறும் கவரிங் தானே?”
மாப்பசானின் பிரபல கதை இது..
Guy de Mauppasant ... இன்று பிறந்த நாள்! (1850 -1893)
ஆறு நாவல்கள் எழுதி இருந்தாலும் அறியப்படுவது சிறுகதைக்காகவே... சிறுகதையின் தந்தை என்று! இவரால் கவரப்பட்டவர்களில் ஒருவர் ஓ ஹென்றி. இன்னொருவர் சாமர்செட் மாம்.
Quotes? ‘கல்யாணத்தைப் பண்ணி மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதைவிட காதலித்து மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது நல்லது; ஆனால் சிலருக்கு ரெண்டுமே வாய்த்து விடுகிறது!’
‘வாழ்க்கையில் ஒரே ஒரு நல்ல விஷயம் தான் உண்டு அதுதான் அன்பு!... காற்றை சுவாசிப்பது போல அன்பை சுவாசிப்போம்; எண்ணங்களை ஏந்துவதுபோல எப்போதும் அதை ஏந்துவோம். அதைவிட வேறொன்றும் இல்லை நமக்காக இங்கே.’

நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ்...


இங்கிருந்து அங்கே ஒரு ஜம்ப்.. அங்கிருந்து இங்கே ஒரு ஜம்ப். இங்குமங்கும் அணிலைவிட அதிவேகமாக தாவல்கள்... அது என்னமோ ரப்பர் மாதிரி இஷ்டத்துக்கு வளைகிற உடல்.. ஆம், சந்திரபாபு என்றதுமே அந்த அந்தர்பல்டிகள் தான் நினைவுக்கு வரும்.

வைரத்தை பட்டை தீட்டுவதுபோல நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் கொடுத்தவர். கதாநாயகனை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டு வாங்கிய ஒரே நடிகர். லட்சம் தொட்ட முதல் காமெடி நடிகரும்!
இன்று பிறந்த நாள்.

ஆரம்பித்து வைத்த முன்மாதிரிகள் அனேகம். அதில் ஒன்று காமெடி நடிகர் கதாநாயகனாக நடிப்பது. கண்ணதாசனின் 'கவலை இல்லாத மனிதன்.' மற்றொன்று காமெடி நடிகர் சோகக் காட்சிகளிலும் சோபிக்க முடியும் என்று காட்டியது. ‘குமார ராஜா’ ஒன்று போதுமே?

“கல்யாணம் என்பது எது வரை?”என்று கதாநாயகன் பாடினால் “கழுத்தினில் தாலி விழும்வரை!” என்று அழகாகப் பதில் பாட இவர்தான் வேண்டும்! ('பாத காணிக்கை')

பாபு - நாகேஷ் ஜோடி சேரும்போதெல்லாம் அமர்க்களம்தான்.‘கடவுளைக் கண்டேன்’ முதல் ‘அன்னை’ வரை.

பத்மினி படத்தை வைத்துக்கொண்டு “உனக்காக, எல்லாம் உனக்காக..” பாடினாலும், சாவித்திரி படத்தை வைத்துக்கொண்டு “கோவா மாம்பழமே..” பாடினாலும் மாலினி படத்தை வைத்துக்கொண்டு “பம்பரக் கண்ணாலே…” பாடினாலும் அலுக்கவே அலுக்காது அந்த ஸ்டைல்!
“காவேரி ஓரம், கவி சொன்ன காதல்…” பாடலில் பாபுவின் பால் ரூம் டான்ஸ் திறமையை பார்க்கலாம் என்றால் ‘பதி பக்தி’ பாடலில் ராக் ஸ்டைலை ரசிக்கலாம்.

ஆம், எந்த மாதிரியும் ஆட வல்லவர். ‘சபாஷ் மீனா’ வில் சரோஜாதேவியுடன் “ஏறுங்கம்மா.. ரிக்‌ஷா ஏறுங்கம்மா…” விலிருந்து ‘நீதி'யில் “முத்தமிழின் செல்வன் வாழ்க..” என்று சிவாஜி, ஜெயலலிதாவுடன் ஆடுவது வரை சலிக்காத நடனம் அவருடையது.

பொம்மலாட்ட பொம்மை போல் பாட வேண்டுமா? “நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே குருவி பிடிக்கப் போனேன்..” (காத்தவராயன்)
கையையும் காலையும் மடித்து இடுப்பை ஒயிலாக ஒடித்து அவர் ஆடும் அந்த சந்திரபாபு ஸ்டைல் தனி முத்திரை பெற்றது.

அந்தப் படம் மட்டும் நன்கு ஓடியிருந்தால் ஜோரான டைரக்டராகவும் ஜொலித்திருப்பார். ஆம், அவர் தயாரித்து இயக்கிய ‘தட்டுங்கள் திறக்கப்படும்’. கே.ஆர்.விஜயா, சாவித்திரி, மனோகர் நடித்த க்ரைம் த்ரில்லர் அது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுத்திருப்பார். ஷாட்டுக்களை அந்தக் காலகட்டத்துக்கு ரொம்பவே அட்வான்ஸாக அமைத்திருப்பார். சாவித்திரியும் மனோகரும் விவாதிக்கும் காட்சியில் அந்த பிரம்மாண்ட செட்டின் ஒரு மூலையில் தொடங்கி, சுற்றி நடந்து அதே இடம் வரும் டிராலி ஷாட்டும் சரி, ஆடும் நாற்காலியில் குழந்தையைத் தாலாட்டும் சாவித்திரியை கணப்புக்குள் இருந்து காமிரா எட்டிப் பார்ப்பதும் சரி, சட்டென்று நிமிர்ந்து ரசிப்போம்.
அப்புறம் அந்த அட்டகாச ஷாட்: மாடியிலிருந்து மனோகரின் உடலை ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு நம்மை நோக்கி வருவார்கள். அப்படியே அந்த ஸ்ட்ரெச்சர் நம் தலைக்கு மேலாக படியிறங்கும்போது அசந்து போவோம். (காமிரா: பி.எஸ்.லோகநாதன்) படமே ஓர் உயர் தரத்தில் இருக்கும். பாபு பாடும் அந்தப் பிரபல "கண்மணி பாப்பா... மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான் என்று சொன்னது தப்பா..."(எம்.எஸ்.வி.)

ஆரம்பத்தில் அவர் பாடியது அவருக்கே அல்ல. ஏ.வி.எம்மின் ‘பெண்’ படத்தில் எஸ். பாலச்சந்தருக்கு. "கல்யாணம்... உல்லாசமாகவே.. உலகத்தில் வாழவே.."

ஏன், சிவாஜிக்கே பின்னணி பாடியிருக்கிறார். “ஜாலி லைஃப்.. தம்பதி யானால் ஜாலி லைஃப்.” (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) பாடலில். “பெண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே.. பின்னாலே நீயும் ஓடுவே.. என்ன சொன்னாலும் பின் பாட்டு பாடுவே.. என்னை கண்டாலும் காணாத மாதிரி.. எதோ காணாததை கண்ட மாதிரி…” என்ற வரிகளை அவர் பாடும் விதமே அலாதி!

சந்திரபாபுவுக்கே மற்றவர்கள் பாடியதும் உண்டு. யார் யார்? ‘அன்னை’யில் டிஎம்எஸ். ( “லைலா மஜ்னு..”) ‘பறக்கும் பாவை’யில் ஜேசுதாஸ் (“சுகம் எதிலே இதயத்திலா..”) ஏன், சீர்காழி கூட… ("அலங்கார வல்லியே.." - 'சபாஷ் மீனா')

நிறைய காமெடி நடிகர்களைப் போலவே சொந்த வாழ்க்கை சற்றே சோகம் சிந்துவது. 46 வயதில் மறைவு என்பது நம்மைத் திகைக்க வைத்த ஒன்று.

“குங்குமப்பூவே..”வை துள்ளலாக பாடிய அதே குரல் தான், “ஒண்ணுமே புரியலே உலகத்திலே..”வை உருக்கமாகவும் 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..”யை அட்டகாசமாகவும் பாடுவது! அங்கே கிஷோர்குமார் என்றால் இங்கே இவர் பிரபலம் yodelling-இல்.

இவரது காமெடி டிராக்குக்காகவே கூடுதலாக ஓடிய படங்களும் உண்டு. உதா: ‘சகோதரி.’ விளம்பரத்தில் அந்த “நான் ஒரு முட்டாளுங்க..” தனி இடம் பெற்றது.

அவர் நாயகனாக நடிப்பதற்காக அவரே எழுதிய கதையாம் அது. அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பீம்சிங் திரைக்கதையில் படம் வந்து வெற்றியும் பெற்றது: ‘பாவமன்னிப்பு'

சொல்ல வேணுமா? ‘சபாஷ் மீனா’வின் அந்த ஃபேமஸ் காட்சி! சிவாஜியின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், சந்திரபாபு டைப்பிஸ்ட் ஆகவும்; பாபுவின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், இவர் டைப்பிஸ்ட் ஆகவும் சட்டென்று மாறும், தூள் கிளப்பிய சாகா வரம் பெற்ற காட்சி..

அதே படத்தில் சிவாஜியுடன் ஒரு காட்சி. பயந்த குரலில் தொடங்கி படிப்படியாக இறங்கி அழுகைக் குரலுக்கு அட்டகாசமாக மாறுவார். பாபு: “முதல்ல யார் வர்றாங்க தெரியுமா கண் முன்னால? அப்பா வர்றார். அப்புறம் அந்த கலெக்டர் அப்பாத்துரை வர்றார். (குரலில் பயம்.) அப்புறம் ஜெயில் வருதுடா.. அப்புறம் விலங்கு வருது... (குரலில் நடுக்கம்) அப்புறம் தூக்குக் கயிறு…” (குரலின் அழுகை)

டவுன் சந்திரபாபு கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது எரியும் கற்பூரத்தை முழுங்கும்போதும், கிராமத்து சந்திரபாபு டவுனில் இட்லியை பிளேட் பிளேட்டாக விழுங்கும்போதும் அந்த காமெடியிலும் வித்தியாசத்தை துல்லியமாக காட்டியிருப்பார்.

கைலியை தூக்கி முழங்காலில் செருகிக்கொண்டு இந்த காலிலிருந்து அந்த காலுக்கும் உடம்பை மாற்றி மாற்றி பேசிக் கலாய்ப்பது அவருக்கே உரித்தானது. மெட்ராஸ் பாஷையை அவர் போல யாரால் அத்தனை தத்ரூபமான பேசமுடியும்?

‘ராஜா’ படத்தில்... மீசையால் அவதிப்பட்ட சந்திரபாபு சலூனில் சென்று ‘மீசையை எடுத்துருப்பா!’ என்கிறார். அவன்: ‘சார், உங்க முகத்திலேயே அழகா இருப்பது மீசை ஒண்ணுதான்!’ இவர்: ‘அப்படின்னா மீசையை வெச்சிட்டு முகத்தை எடுக்க சொல்றியா?’

எப்ப எங்கே கேட்டாலும் மனது (சுற்றி யாருமில்லாவிடில் உடம்பும்) துள்ளும் பாடல்கள்! பத்மினி பிரியதர்சினியுடன் 'பாதகாணிக்கை’யில் வண்டலூர் ஜூவில் ஆடும் “தனியா தவிக்கிற வயசு.. இந்த தவிப்பும் எனக்கு புதுசு..”
ஜமுனா ராணியுடன் பாடும் “நீயாடினால் ஊராடிடும்.. நானாடினால் யார் ஆடுவார்..”. (பாண்டித்தேவன்)
“தடுக்காதே என்னை தடுக்காதே..”(நாடோடி மன்னன்)
“கொஞ்சம் தள்ளிக்கணும்..” (கடவுளைக் கண்டேன்)
“சிரிப்பு வருது சிரிப்பு வருது..” (ஆண்டவன் கட்டளை)
“உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு..” (மகாதேவி)
“எப்போ வச்சுக்கலாம்.. எப்படி வெச்சுக்கலாம்..” (பந்த பாசம்)
“நம்பள்கி பியாரி நம்பள் மஜா..” (பாதுகாப்பு)
ஒவ்வொரு தம்பதியையும் சிலிர்க்க வைத்த அந்தப் பாடல் சிகரம்! “பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது… ஐயா, பொறந்துவிட்டா..”