Tuesday, July 1, 2025

ஒரே வருடத்தில் ...


ஏழு வயது இருக்கும் அந்த சிறுமிக்கு. கார் ஒன்று மோதியதில் இடுப்பில் எலும்பு முறிவு. நடப்பதே கஷ்டம் என்றார் டாக்டர். பொய்யாக்கி ஒரே வருடத்தில் நடந்து காட்டினார். ஆனாலும் உயரம் குறைந்துபோன ஒரு காலை, ஷூவில் உயரம் வைத்து சரி பண்ணி நடக்க வேண்டியதாயிற்றாம். தோழிகளின் கிண்டல் எத்தனை வேதனையாக இருந்திருக்கும் அந்த பெண்ணுக்கு? ஆனால் பின்னாளில் அவரொரு மூவி ஸ்டார் ஆனபோது அதுவே அவரது அழகிய பாணி ஆகிவிட்டது.

அவர் Susan Hayward... ஜூன் 30. பிறந்தநாள்!
உலகம் முழுவதும் சொல்லப்படவேண்டிய உண்மைக் கதை இது என்ற ஆல்பர்ட் காம்யூவின் அழுத்தமான முன்னுரை வரிகளுடன் ஆரம்பிக்கிறார்கள் அந்தப் பிரபல படத்தை. ‘I Want to Live.’ வேதனையான குழந்தைப்பருவம், வீணான மணவாழ்க்கை, வேண்டாத சகவாசம் , எல்லாமாகச் சேர்ந்து அவளை ஒரு கொலைக் குற்றத்தில் சிக்க வைக்கிறது. மரண தண்டனை. நாற்காலியில் அமரும் கடைசி நிமிடம் வரை அவளது போராட்டம்.. அவள் படும் பாடு.. அவளுடன் சேர்ந்து நாம் படும் பாடு.. அத்தனை அற்புதமாக நடித்திருந்தார் சுஸன். அதுவரை நாமினேட் ஆவதும் நழுவிப் போவதுமாக நாலு முறை இருந்த ஆஸ்கார், நச்சென்று வந்து விழுந்துவிட்டது கையில். தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட் லிஸ்டில்.
'Gone with the Wind' படத்திற்காக நாடெங்கும் நடந்த நாயகி தேர்வில் தோற்றவர். ஆனால் தேர்வான Vivien Liegh பெற்ற நட்சத்திர அந்தஸ்தை அடுத்த பத்து வருடங்களிலேயே இவரும் அடைந்துவிட்டார். நடிப்பும் க்ளாமரும் நல்லதொரு விகிதத்தில் கலந்து அளித்த நடிகை.
The Conqueror படத்தில் நடிக்கும் போதுதான் கேன்சர் வந்து இவரைக் கொண்டது. அந்தப் படத்தில் நடித்த JohnWayne -ம் டைரக்டரும் கேன்சரிலேயே முடிவு கொண்டனர்.
Quotes?
‘வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதை மிகச் சின்ன வயதிலேயே அறிந்துகொண்டேன் நான். குடும்பம், சுற்றுப்புறம் எல்லாமே வறுமை. வறுமை. வாழ்க்கையின் எல்லா அவலங்களில் இருந்தும் நான் விடுபட, சினிமா தியேட்டர் தான் ஒரே வழியாக இருந்தது. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அப்போது தான் தீர்மானித்தேன். ஒரு உறுதியான பெண்மணியாக நான் உருவெடுத்தது அங்கேதான்.’
‘ஓய்வாக உட்கார்ந்ததே இல்லை நான். அது எப்படி என்றுகூட எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை. வாழ்க்கை மிகச் சின்னது, ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு!’

Sunday, June 29, 2025

நாவல் அறிமுகம்...


‘வைரமாலை.’ 1954-இல் வெளியான படம்.
“கூவாமல் கூவும் கோகிலம் .. “ என்று பத்மினியுடன் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த கண்ணதாசன் பாடலை பாடியபடியே வந்த அந்த நாயகர் பின்னாட்களில் பிரபல வில்லனாக வருவார் என்று எதிர்பார்த்திருப்பார்களா? ஆர்ப்பாட்டம் இல்லாமல் அலட்டிக்கொள்ளாமல் வரும் பாலிஷ் வில்லன்...
ஆர். எஸ் மனோகர். இன்று பிறந்த நாள்!
அறிமுகமான படம் ‘ராஜாம்பாள்’. ஜே. ஆர். ரங்கராஜுவின் அந்தப் பிரபல நாவல்தான் கதை. கல்கியின் ‘பொய்மான் கரடு’ படமானபோது பதில் அதிலும் நாயகன்.
நல்லவனாக சில படங்களில் நடித்து முடித்துவிட்டு வில்லன் வேடத்திற்கு நகர்ந்தார் மாடர்ன் தியேட்டர்ஸின் அபிமான நடிகர். அவர்களின் ‘வண்ணக் கிளி'யில்தான் வில்லனாக மாறினார்.
மரப்படிகளில் இறங்கி நின்று புறங்கையில் மது பாட்டிலைத் தட்டி உடைத்தபடி என்ட்ரி தருவாரே பிச்சுவாப் பக்கிரியாக ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில்.... அந்த நல்லவனுக்கு நல்லவன் ரோலில் அசத்தியது அடுத்த திருப்பு முனை. அந்தப் பாடல்! 'பாரடி கண்ணே கொஞ்சம்... பைத்தியமானது நெஞ்சம்...'
திரை அவருக்கு இரண்டாவதுதான். முதலிடம் மேடை. மேடையில் பிரம்மாண்டம் என்றால் அது மனோகர்தான்! ‘நாடகக் காவலர்' மனோகரால் நன்கு அறியப்பட்ட புராண சரித்திர புருஷர்கள் நிறைய. 1800 தடவைக்கு மேல் நடிக்கப்பட்ட ‘இலங்கேஸ்வரன்’ அதில் மிகப் பிரபலம். தவிர ‘துரோணர்', ‘துரியோதனன்', 'சூரபத்மன்', 'சாணக்கிய சபதம்', 'இந்திரஜித்'...
கண் மூடித் திறப்பதற்குள் நாடகக் காட்சி மாறுவது ஸ்பெஷாலிட்டி என்றால் நாடகத்தில் சினிமாஸ்கோப் இவருடைய அறிமுகம். திரையிலும் சரி மேடையிலும் சரி அந்தக் கணீர்க் குரலும் பளிங்குத் தெளிவு உச்சரிப்பும் அவருக்கு ஒரு தனி இடத்தை கொடுக்கத் தவறவில்லை.
‘நான்’, ‘சொர்க்கம்’ (இரட்டை வேடத்தில் ), ‘குழந்தைக்காக’, ‘அடிமைப்பெண்' ‘நான்கு கில்லாடிகள்' சந்திரபாபுவின் ‘தட்டுங்கள் திறக்கப்படும்'.... பர்ஃபெக்ட் பர்ஃபாமன்ஸ் தந்த படங்கள் நிறைய. இந்தி ராஜ் குமார் போல இவர் நடை ஒரு தனி ஸ்டைல்.
குறிப்பாக சொல்லணும்னா உடனே தோன்றுவது ‘ராஜா’ தான். சிவாஜி உண்மையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று பாஸ் ரெங்க ராவிடம் நிரூபிக்க மனோகர் படும் பாடு! ‘ஒண்ணு மட்டும் ஞாபகத்தில் வெச்சுக்குங்க. அந்தத் தாயை நான் கடத்தி வெச்சிருக்கிறதாலதான் நான், நீங்க, எல்லாரும் இப்போ உயிரோட இருக்கோம்!’ என்று அழுத்தமாக சொல்வதும்… ‘ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்க பாஸ்’னு கேட்டு ரங்கராவ், ‘சரி விடுங்கடா அவனை’ன்னதும் பிடித்திருந்த அடியாட்களிடமிருந்து விடுவித்த கைகளை உதறிக் கொண்டு, தளர்ந்திருந்த டையை முறுக்கிக் கொண்டு, கோட்டை சரி செய்தபடியே நடந்து சிவாஜியிடம் பேசியபடியே பண்டரி பாயை அடிக்க ஆரம்பிப்பதும், அந்த முயற்சியிலும் தோற்றுவிட... அந்த நெடு நீளக் காட்சி நெடுக தான் சொல்வதை நிஜமாக்க அவர் துடிக்கிற நடிப்பு க்ளாஸ் ரகம்.

Saturday, June 28, 2025

தோற்காத கதை...

அவரு எவ்வளவு பெரிய ப்ரொடியூசர்.. ஆனா அவரை, 'நம்ம தேவர் அண்ணன், நம்மள நெனச்சு படம் எடுத்திருக்கார், நாலு நல்ல விஷயம் காட்டுவார்'னு நம்பி படக் கொட்டகைகள் நோக்கிப் படையெடுப்பார்கள் ஜனங்கள். ஏமாந்ததே இல்லை. இருவருமே!
சாண்டோ சின்னப்ப தேவர்… இன்று பிறந்த நாள்!
தம்பி உடையான் படமெடுக்க அஞ்சான்னு சொல்ற மாதிரி டைரக் ஷனைப் பார்த்துக்கொள்ள ஒரு தம்பி. எம்.ஏ.திருமுகம். ஒரு ஃபிரேமில் கூட அவர் கை தெரியாத படி காட்சிகள் ரொம்ப இயல்பாக மலரும், கதையை மட்டும் பகரும். வர்மாவின் காமிரா வழுக்கிக் கொண்டு நகரும்.
முருகன் மேல் அவர் வைத்த நம்பிக்கைக்கு கொஞ்சமும் குறையாதது கதை மேல் அவர் வைத்திருந்ததும். பாருங்களேன். ‘தெய்வச் செயல்’ என்று ஒரு படம் எடுத்தார். நாலு யானைகளை வளர்க்கும் செல்வந்தர் சுந்தர ராஜன் நொடித்துப் போனபோது தானும் வாழ்ந்து அவற்றையும் வாழ வைக்கும் அந்தக் கதை நன்றாகப் போகவில்லை.
எப்படித் தோற்க முடியும் இந்தக் கதை என்று யோசித்தார். எழுதினார் அதற்கு இன்னொரு திரைக்கதை. அப்போதுதான் டாப்புக்கு வந்து கொண்டிருந்த பிரபல கதாசிரியர் Salim - Javed -இடம் சீன்கள்எழுதி வாங்கி ஹிந்தியில் வெளியிட்டார். ‘ஹாத்தி மேரே சாத்தி’. ஆத்தி, அது கலக்கிற்று வசூலை. குலுக்கிற்று பாலிவுட்டை. அதை அப்படியே தமிழிலும்! ‘நல்ல நேரம்.’ இங்கேயும் ஹிட்.
டீம் வைத்துக்கொண்டு கதை டிஸ்கஷன் செய்யும் முறையை அனேகமாக இவர்தான் கொண்டு வந்தார். Tell the gist. Get the best. Leave the rest. That's it.
பக்தி சிரத்தையுடன் தியேட்டரில் நுழைந்ததும, பரமன் லீலைகள் பார்த்து பரவசத்துடன் வெளிவர முடிந்தது இவர் காலத்தில்தான்.
ஆஹா, வரிசையாக அவர் தந்த எம் ஜி ஆர் படங்கள்! ஜஸ்ட் பதினோரு நாளில் முடித்துவிட்டார் ‘முகராசி' ஷூட்டிங்கை.
எந்தப் பிராணியைத்தான் கூர்ந்து கவனித்து இருப்போம்? இதயம் என்று அதற்கும் ஒன்று இருக்கும் என்று எண்ணி இருப்போம்? ஆனால் ‘ஆட்டுக்கார அலமேலு’வையும் ‘கோமாதா என் குலமாதா’வையும் பார்த்ததும் நம் அபிப்பிராணியமே எத்தனை மாறிப் போச்சு!
நம்ம எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச நம்ம சின்னப்ப தேவரைப் பத்தி நாஞ்சொல்ல தனியா என்ன இருக்கு? மறக்க முடியாத மனிதர்!


><><><